தேங்காய் சீனிவாசன்: காமெடியில் தனி ஸ்டைல்; வெளுத்துக்கட்டிய மெட்ராஸ் பாஷை!

85-வது பிறந்தநாளில் சிறப்பு பகிர்வு
தேங்காய் சீனிவாசன்
தேங்காய் சீனிவாசன்

நம் தமிழ் சினிமாவில், ‘மெட்ராஸ் பாஷை’ பேசி நடித்தவர்கள் ஏராளம். ஆனால், அச்சுப்பிசகாமல், அப்படியே சென்னை பாஷையைப் பொளந்துகட்டிய நடிகர்கள் லூஸ் மோகன், கமல்ஹாசன் என்று பலர் உண்டு. பாரதிராஜாவின் ‘என்னுயிர்த் தோழன்’ படத்தில் நடித்த பாபு, சென்னை பாஷையில் பேசி பிரமாதப்படுத்தியிருப்பார். ஆனால், அறுபதுகளின் மத்தியில் சென்னை பாஷையில் கலக்கியெடுத்து காமெடி பண்ணியவர்களில் முக்கியமானவர் தேங்காய் சீனிவாசன். வார்த்தைகளுக்குப் புதிதாக ஒரு இடத்தில் அழுத்தம் கொடுப்பது, புதிதுபுதிதாக வார்த்தைகளை வித்தியாசமான ஏற்ற இறக்கங்களுடன் சொல்வது என்பதெல்லாம் தேங்காய் சீனிவாசனின் ஸ்டைல். தமிழ் சினிமாவில், தனக்கென தனியிடத்தைப் பிடித்த நடிகர்களில் தேங்காய் சீனிவாசனும் ஒருவர்!

இன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம்தான் சீனிவாசனுக்குச் சொந்த ஊர். சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம். அவரின் அப்பா ராஜவேல் நாடகத் துறையில் இருந்ததும் இந்த ஆர்வத்துக்குக் காரணம். எனவே, நாடகத் துறைக்குள் நுழைந்தார் சீனிவாசன். அப்பாவின் ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தில் மேடையேறினார். முதல் நாடகத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.

’இனி, தொடர்ந்து நடிப்பது’ என களமிறங்கினார். அப்பாவின் நாடகங்கள் மட்டுமில்லாமல், பலர் எழுதிய நாடகங்களிலும் நடித்தார். ‘கல் மணம்’ என்ற நாடகம், சீனிவாசனின் வாழ்க்கையையே மாற்றியது. அவரின் நடிப்பு ஏகத்துக்கும் பாராட்டப்பட்டது.தேங்காய் வியாபாரியாக நடிப்பில் பொளந்து கட்டிய சீனிவாசன், கரவொலி வாங்கியபடியே இருந்தார்.

நாடக விழாவுக்கு வந்திருந்த நடிகர் தங்கவேலு, மேடையில் சீனிவாசனை அழைத்துப் பாராட்டினார். அத்துடன் ‘‘தேங்காய் வியாபாரியாக மிகச் சிறப்பாக நடித்தார் இந்தப் பையன். இவர், இனிமேல் தேங்காய் சீனிவாசன்’’ என்று வாழ்த்தினார். அன்றுமுதல், சீனிவாசன், தேங்காய் சீனிவாசனானார். ‘தேங்காய்’ இப்படித்தான் அவர் பெயருக்கு முன்னே ஒட்டிக்கொண்டது.

நடிகர் ஒருவிரல் கிருஷ்ணாராவ், ‘ஒருவிரல்’ எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனால் படத்தின் பெயரும் அவர் பெயரில் ஒட்டிக்கொண்டது. 1965-ம் ஆண்டு வெளியான ‘ஒருவிரல்’ படம், இவருக்கு மட்டும் முதல் படம் அல்ல. தேங்காய் சீனிவாசனுக்கும்தான். ஒருவேளை, தேங்காய் எனும் அடைமொழி இல்லாது போயிருந்தால், ‘ஒருவிரல்’ சீனிவாசன் என்று அழைக்கப்பட்டிருப்பாரோ என்னவோ? யாருக்குத் தெரியும்?

1968-ல், கே.பாலசந்தர் இயக்கிய ‘எதிர்நீச்சல்’ படத்தின் நாயகன் நாகேஷ். படத்தில் சிறியதொரு கேரக்டரில் நடித்தார் தேங்காய் சீனிவாசன். பொருட்களைத் திருடிவிட்டு, அதை நாகேஷ் மீது பழிபோடுகிற கதாபாத்திரம். அருமையாகச் செய்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில், குறிப்பாக ‘சி.ஐ.டி.சங்கர்’ படத்தில், ஜெய்சங்கரின் நண்பராக, திக்கிப் பேசுகிறவராக, பிரமாதமாக நடித்து காமெடியில் தன் பாணி என்ன என்பதை வெளிப்படுத்தினார்.

மெட்ராஸ் பாஷை பேசுபவராக, பிராமண பாஷை பேசுபவராக, எம்ஜிஆரின் நண்பராக, சிவாஜிக்கு நண்பராக, ஜெய்சங்கரின் தோழனாக என்றெல்லாம் நடித்து வந்தார். வரிசையாக படங்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன.

ஏவி.எம்மின் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்தை சித்ராலயா கோபு இயக்கினார். முத்துராமன், ஸ்ரீகாந்த், சசிக்குமார் என பலரும் நடித்தார்கள். ஆனாலும் அவர்களையெல்லாம் ’ஓவர்டேக்’ செய்து நடிப்பில் முதலிடம் பிடித்தார் தேங்காய் சீனிவாசன். டீக்கடைக்காரராகவும் போலிச்சாமியாராகவும் அசத்தினார். ‘அதே அதே’ என்று சொல்லும்போதெல்லாம் தியேட்டரே சிரித்துக் குலுங்கியது. பொதுவாக, படத்தின் ஹீரோவுக்குத்தானே கட்-அவுட் வைப்பார்கள்? ஆனால் சாமியார் கேரக்டரில் பின்னிப்பெடலெடுத்த தேங்காய் சீனிவாசனுக்கு கட்- அவுட் வைத்தார்கள். இதில் முத்துராமனுக்குக்கூட வருத்தம்தான். ஆனாலும் பிறகு அதைப் புரிந்து உணர்ந்து ரசித்தார். அந்த அளவுக்கு சாமியார் கதாபாத்திரத்தில், சடுகுடு விளையாடியிருப்பார் தேங்காய் சீனிவாசன்.

‘கல்யாண ராமன்’ படத்தில் போலி ராமனாக வந்து மனைவி மனோரமாவை, அம்மா என்று பொய் சொல்லி நடிக்கும் கேரக்டரில் அதகளம் பண்ணியிருப்பார். அதற்கு நேர்மாறாக, ரஜினி நடித்த ‘பில்லா’ படத்தில், கொள்ளைக்கூட்டத்தில் இருந்து விலகி, திருந்தி வாழ்பவராக அசத்தியிருப்பார். காலில் அடிபட்டு விந்திவிந்தி நடக்கும் காட்சிகளில் இயல்பாக நடித்திருப்பார்.

இளையராஜாவின் முதல் படமான ‘அன்னக்கிளி’ படத்தில், வில்லத்தனம் பண்ணிக்கொண்டிருந்த ஸ்ரீகாந்த் நல்லவராக நடித்தார். காமெடியில் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த தேங்காய் சீனிவாசன் வில்லத்தனம் பண்ணினார். விஜயகுமார், சுஜாதா நடித்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில், ’பிளாக்மெயில்’ செய்யும் கேரக்டரில் நமக்கே எரிச்சலும் ஆத்திரமும் வரும்வகையில் சுஜாதாவை நோகடித்திருப்பார். சொல்லப்போனால், முத்துராமன், விஜயகுமார், சுஜாதாவை விட, பிளாக்மெயில் செய்யும் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார்.

பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில், கமலை உசுப்பிவிட்டு தப்பு செய்யத் தூண்டும் முதலாளியாக கலக்கினார். ரஜினியின் ‘ப்ரியா’ படத்தில் ‘உன் பாஸ்போர்ட் என் கையில’ என்று சிங்கப்பூரில் படமெடுக்கச் செல்லும் இயக்குநராகவும் அசத்தியிருப்பார். சிவாஜியின் ‘தியாகம்’, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘அடுக்குமல்லி’, ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’, ‘அன்பே சங்கீதா’ என்று பல படங்களில் பல விதமான கதாபாத்திரங்கள் செய்து அசத்தினார். ‘கலியுகக் கண்ணன்’ படத்தில் நாயகனாக நடித்தார்.

எம்.எஸ்.வியின் குரலில், ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்’ என்ற பாடலுக்கு இவரின் நடிப்பு தனி தினுசாக இருக்கும்.

‘போர்ட்டர் பொன்னுச்சாமி’ என்ற படத்தின் நாயகனாகவும் பிரமிக்கவைத்தார். வயதான கதாபாத்திரம், பிராமண கேரக்டர் என்றால் சிவாஜியை இமிடேட் செய்துதான் நடிப்பார். ‘’என்ன பண்றது... சிவாஜி அண்ணன் பாதிப்பு இல்லாம இப்படி கேரக்டர்களைப் பண்ணவே முடியாது’’ என்று வெளிப்படையாகச் சொல்வார்.

கே.பாலசந்தர் இயக்கதில், விசு வசனம் எழுதி, ரஜினி கலகலப்பூட்டிய ‘தில்லுமுல்லு’வை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்திரனாகவும் சந்திரனாகவும் மீசையுடனும் மீசை இல்லாமலும் வந்து ரஜினி சிரிக்கவைத்தாரென்றால், முதலாளி ராமச்சந்திர மூர்த்தியாக நடித்து, நம் வயிறைப் பதம் பார்த்திருப்பார் தேங்காய் சீனிவாசன்.

’இவரைத் தவிர வேறு எவருமே இந்த அளவுக்குப் பண்ணமுடியாது’ என்று படம் பார்த்து பிரமித்துச் சொன்னோம். மிடுக்கான உடல்மொழியில் கெத்துக் காட்டி, அச்சுப்பிச்சு பேச்சு ஏதுமில்லாமல், கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு ரஜினியிடமும் செளகார் ஜானகியிடமும் ஏமாந்துகொண்டே இருக்கிற அந்தக் கேரக்டர், தேங்காய் சீனிவாசனுக்கு ‘லைஃப் டைம்’ கதாபாத்திரம்! அதிலும் இன்டர்வியூ காட்சியில் வேலை கேட்டு வந்தவருக்கு ‘மார்க்’ போடும் ஸ்டைலும் அதற்குக் காரணம் சொல்லும்போது அவரின் முகபாவமும் நம் மனதைக் கொள்ளையடித்துவிடும்!

நன்றாக, அப்பாவியாக வசனம் பேசிக்கொண்டே இருப்பார். தடக்கென்று ஒரு வார்த்தையை நீட்டி முழக்கி, புதிதாக ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு, ‘ஹா...’ என்று சிவாஜி ஸ்டைலில் முடிப்பார். ’ஜிஞ்சக்கான்’ என்பார். ‘டங்கண்ஜிக்கான்’ என்பார். ஏதேதோ சொல்வார். நமக்குத்தான் சிரிப்பை அடக்க முடியாது.

கமல், ரஜினி, ஜெய்கணேஷ், விஜயகுமார், விஜயகாந்த், சத்யராஜ், மோகன் என்று எண்பதுகளில் பலருடனும் நடித்தார். சிவாஜி, மோகனை வைத்து ‘கிருஷ்ணன் வந்தான்’ படத்தைத் தயாரித்தார்.

நெடுநெடுவென உயரம். அழகிய கிராப்பும் முகவெட்டும் கொண்ட களையான முகம். இப்படியொரு நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனாகத்தான் இருக்கும் அவரின் அழகை சிலாகித்து விமர்சித்தார்கள் ரசிகர்கள். கதையின் நாயகனாக, காமெடியனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக... என்று எந்தப் படத்தில் எப்பேர்ப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ‘தேங்காய்’ தன் முத்திரையைப் பதித்திருப்பார்.

காமெடியில் தனி பாணியில் கலக்கியெடுத்த தேங்காய் சீனிவாசன், 1937 அக்டோபர் 21-ம் தேதி பிறந்தார். இன்று அவருக்கு 85-வது பிறந்ததினம். வளமான நகைச்சுவை உணர்வுடன் தரமான நடிப்பைத் தந்து நம்மை மகிழ்வித்த தேங்காய் சீனிவாசனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in