தேநீர் நேரம் - 25: பாவேந்தரின் நிறைவேறாத ‘பாரதி’ கனவு!

பாரதியார்
பாரதியார்

மகாகவி பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்ற கனவு பலருக்கும் இருந்தது. அதில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். பாவேந்தர் சிலகாலம் திரைத்துறையில் பணியாற்றினார். அதற்கொரு காரணமிருந்தது. அன்றிருந்த தமிழ்த் திரைப்பட நிலைமை பாரதிதாசனுக்கு சற்றும் ஏற்புடையதாக இல்லை. எனவே, தமிழ்த் திரைப்படங்களின்மீது - அவற்றின் உள்ளடக்கங்களின்மீது அவருக்குக் கடும் கோபமிருந்தது.

அந்தக் கோபத்தோடு இருந்த பாவேந்தரை அதே திரைப்பட உலகிற்கு அழைத்த பெருமை பாரதி அன்பரும், பாவேந்தரின் அருமை நண்பருமான அறிஞர் வ.ரா. வைத்தான் சாரும். தான் முயன்றுகொண்டிருந்த ‘ஸ்ரீராமானுஜர்’ திரைப்படத்தில் அவர்தான் பாவேந்தரைப் பாடல்கள் எழுத முதன்முதலாக அழைத்தார்.

பாரதிதாசன்
பாரதிதாசன்

‘ஸ்ரீராமானுஜர்’ படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை வ.ரா. எழுதினார். ஏ.நாராயணன் இயக்கினார். வ.ரா-வின் வேண்டுகோளின்படி புதுவையிலிருந்து சென்னை சென்ற பாவேந்தர் இந்தப் படத்தின் பாடல்களை எழுதினார். அதன்மூலம் அவரின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. 1938-ல் வெளிவந்த இந்தப் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்பது ஒரு சோகம். ஆனால், அதற்குள்ளாகவே பாவேந்தருக்கு வேறு படங்களிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதனால், ‘ஸ்ரீராமானுஜர்’ வெளிவரும் முன்பே டி.கே.எஸ். சகோதரர்கள் தயாரிப்பில் உருவான ‘பாலாமணி அல்லது பக்காத் திருடன்’ திரைப்படம் 1937-ல் வெளிவந்தது. அந்தப் படத்திலும் பாவேந்தர் பாடல்கள் எழுதியிருந்தார். அதனால் இந்த ‘பாலாமணி’ அவர் பாடல்கள் எழுதி வெளிவந்த முதல் படமானது.

வ.ரா
வ.ரா

அந்த நாளிலேயே பாடலொன்றுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்ற ஒரே பாடலாசிரியர் பாரதிதாசன்தான். பாவேந்தருக்குத் திரைப்படங்களில் வசனமெழுதவும் வாய்ப்புகள் வந்தன. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்பாளர்களுள் திரைத்துறையில் முதலில் கால் பதித்தவர் பாரதிதாசன்தான். அவருக்கு இசைஞானம் நிரம்ப உண்டு. காட்சிக்கு ஏற்ப பாடல் வரிகளை எழுதுவதில் அவர் வல்லவராகத் திகழ்ந்தார்.

கதைவசனம் மற்றும் பாடல்கள் என்ற வகையில் பாவேந்தர் 10 படங்களுக்கு எழுதியிருக்கிறார். எனினும் அவர் உருவாக்க விரும்பிய பாரதியார் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட முயற்சியானது முடிவில் வெறும் கனவாகவே போனது.

புதுவைக்கு பாரதி வந்தது முதல் 10 ஆண்டுகள் அவரோடு ஒத்த மனமும் அப்பழுக்கற்ற அன்புமாகப் பழகியவர் பாவேந்தர். பாரதியின் வியக்கத்தக்க அறிவாலும் அவர் காட்டிய நேயத்தாலும் அவரின் உயரிய சிந்தனையாலும் கவரப்பட்ட கனக சுப்புரத்தினம் பாரதிதாசனானார். தனது ஞானகுருவாகவே ஆகிப்போன பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக உருவாக்க எண்ணிய பாவேந்தர் அந்த முயற்சியில் இறங்கினார்.

அந்த சமயத்தில் வை.மு.கோவிந்தன் நடத்திவந்த சக்தி இதழுக்கு பேட்டியொன்றை அளித்தார் பாரதிதாசன். பேட்டி கண்டது ஏ.கே.செட்டியார். அந்தப் பேட்டியில் "நான் மதத்தை வெறுப்பவன் என்பது உங்களுக்குத் தெரியும். மூடநம்பிக்கைகள் நிறைந்த புராணக் கதைகளைப் படமாகத் தயாரிப்பதில் சமூகத்திற்கு நன்மை ஏற்படாது. பொதுவாக தமிழ் சினிமாக்கள் ஜனங்களைத் திருத்துவதற்குப் பயன்படவில்லை” என்று சொன்ன பாரதிதாசன், "பாரதியின் வாழ்க்கையைப் படம் பிடிக்காதது தமிழ்நாட்டு அறிஞர்களின் தவறு” என்று சொன்னார்.

சொன்னதோடு நிற்காமல் பாரதியின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் முயற்சியில் இறங்கிய பாரதிதாசன், பி.யூ.சின்னப்பாவின் நண்பர் விருதுநகர் சம்பந்தத்தை துணைக்கு அழைத்தார். அவர் பாவேந்தருக்கு அறிமுகமான நண்பர்தான். அந்த சம்பந்தத்திற்கு சினிமா ஆசை மனதின் ஓரத்தில் இருப்பதைப் புரிந்துகொண்ட பாவேந்தர், அவரைக் கொண்டு குரு பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கினார்.

செட்டிநாட்டின் கோட்டையூர் வணிகர் ஒருவர் சம்பந்தத்தின் படநிறுவனத்திற்கு நிதியுதவி செய்ய முன்வந்தார். பாரதியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் பெரும்பணியில் குரு பிக்சர்ஸ் முழு வீச்சில் இறங்கியது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தனது நண்பர் யோகானந்தத்துக்கு கடிதம் எழுதிய பாவேந்தர், ‘அண்மைக் காலம்வரையில் நம்மோடு வாழ்ந்து வந்தவர் பாரதியார். ஆகையால் அவரைப்போன்ற உருவமுடைய ஒருவரைத் தேடியாக வேண்டும். இது மிகமுக்கியம். அதுபோல அரவிந்தர் முதலிய வேடங்களுக்கும் ஆள் தேடவேண்டும். கம்பெனியின் ஷேர் எடுப்பதன் மூலம் ஆதரவு தருவோரைத் தேடித்தருவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தகவல் அனுப்பினார்.

ஆனால், அவரின் அந்தக் கனவு, லட்சியம், ஆசை எல்லாம் நிறைவேறியதா என்றால் அதுதான் இல்லை. அதுதான் பெரும் சோகம். எஸ்.எஸ்.மாரிச்சாமி என்பவரை பாரதியார் வேடத்திற்குப் பொருத்தமானவர் என்று தேர்ந்தெடுத்தார் பாவேந்தர். அந்த மாரிச்சாமி பத்திரிகை ஒன்றில் பணியாற்றியவர். படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதிக்கொண்டிருந்தார்.

பாரதிதாசன்
பாரதிதாசன்

பாவேந்தருக்குத்தான் சதாசர்வ காலமும் பாரதி சினிமா பற்றிய சிந்தனை இருந்தது. ஆனால், குரு பிக்சர்ஸ் பங்குதாரர்களுக்கு இடையே முரண்பாடுகள் மெல்ல வளரத் தொடங்கியது. பாவேந்தரின் உணர்வாக இருந்த அந்த உயர்ந்த லட்சியம் மற்றவர்களிடம் காணப்படாததால் அவரின் அந்தக் கனவு கலைந்தே போனது. கவலைகள் அவரை வாட்ட, அவரின் உடல்நலம் குன்றியது. சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 1964 ஏப்ரல் 21-ல் தனது 72-வது வயதில் காலமானார்.

பகுத்தறிவுக் கொள்கை உடைய பாரதிதாசன் புராணப்படங்களுக்கு ஏன் வசனம், பாடல்கள் எழுதித் தருகிறார் என்று கேட்டார்கள். அதற்கு, "திரைப்படத்துறை ஓர் ஆற்றல் வாய்ந்த துறை. அதன்மூலம் நல்ல கருத்துகளை மக்களிடம் எளிதில் பரப்ப முடியும். அதன் மூலம் நான் பணம் ஈட்டினால் சென்னையின் மையமான ஒரு இடத்தில் ஓர் அறிவாலயத்தை நிறுவ வேண்டும். தலைசிறந்த தமிழ் நூல்கள் அங்கிருக்க வேண்டும். உலக மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதேபோல உலகின் சிறந்த இலக்கியங்கள் எல்லாம் தமிழில் தரப்பட வேண்டும். அந்த ஆசையில்தான் இந்தப் படத்துறையில் நான் ஈடுபடுகிறேன்” என்று சொன்னார் பாவேந்தர்.

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

பாரதியார்
தேநீர் நேரம்- 24: அந்தக் காலத்திலேயே கரோக்கியை அறிமுகப்படுத்திய கே.ராம்நாத்!

வீடியோ வடிவில் காண:

பாரதியார்
தேநீர் நேரம் - 25: பாவேந்தரின் நிறைவேறாத ‘பாரதி’ கனவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in