தேநீர் நேரம்- 14: அண்ணா மீது பாலசந்தருக்கு அத்தனை ஈர்ப்பு ஏன் தெரியுமா?

அண்ணா மற்றும் கருணாநிதி
அண்ணா மற்றும் கருணாநிதி

கே.பாலசந்தர் எழுதி இயக்கிய ‘இருகோடுகள்’ (1969) ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த படம். இதில் இரண்டு கதாநாயகிகள். சௌகார்ஜானகியும் ஜெயந்தியும். சௌகார்ஜானகி கலெக்டர் பாத்திரத்தில் மிகக் கம்பீரமாகவும் அழகாகவும் நடித்திருந்தார். படத்தில் முதலமைச்சரை கலெக்டர் சந்திக்கிற ஒரு காட்சி. அப்போதைய தமிழக முதல்வராக கருணாநிதி பதவியேற்றிருந்த நேரம். சௌகார்ஜானகி சந்திக்கிற முதல்வர் அறிஞர் அண்ணா. ஆனால், அண்ணா அந்த ஆண்டு பிப்ரவரியில் அமரராகிவிட்டார்.

அண்ணாவுக்கு மரியாதை செய்யும் நோக்கத்தால் தன் கலெக்டர் கதாநாயகி சந்திக்கிற முதல்வராக பாலசந்தரின் கற்பனையில் அண்ணாவே இருந்தார். அந்தக் காட்சிக்கு அண்ணாவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. பாலசந்தர் யோசித்தார். அந்தக் காட்சியில் எல்லோரும் வியக்கும் வண்ணம் ஒரு புதிய உத்தியை செயல்படுத்தினார். அந்தளவுக்கு அண்ணாவின் மீது அவருக்கொரு ஈடுபாடு ஏற்படக் காரணமும் இருந்தது. அதை அறிய சற்றே பாலசந்தரின் ஆதி காலத்தை கொஞ்சம் புரட்டிப்பார்த்து விடுவோமே.

செழிப்பான தஞ்சை மண்ணின் நன்னிலம் அருகிலிருக்கும் நல்லமாங்குடி கிராமம். அங்கே கொஞ்சம் நிலமும் ஒரு ஓட்டு வீடுமான பூர்விகச் சொத்தோடு, 18 ரூபாய் மாதச் சம்பளத்தில் கிராம முன்சீப் பணியில் இருந்தார் கைலாசம். மனிதர் ரொம்பக் கண்டிப்பானவர். நேர்மையானவரும் தான்.

பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும், உத்தியோகத்துக்குப் போக வேண்டும், கைநிறையச் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். கைலாசத்திற்கு முதலில் இரண்டு பெண் குழந்தைகள். அடுத்து ஒரு ஆண் பிள்ளை. மறுபடியும் ஒரு பெண் குழந்தை. அடுத்து ஆண். இந்த ஐந்தாவது குழந்தைதான் பாலசந்திரன். அதற்கடுத்தும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆக மொத்தம் நான்கு பெண் பிள்ளைகளோடும் இரண்டு ஆண் பிள்ளைகளோடும் அந்த வீடு நிறைந்திருந்தது.

ஐந்தாவதாகப் பிறந்த பாலசந்திரனுக்குச் சின்ன வயதிலேயே வித்தியாசமான குணங்கள் உண்டு. யார் எதைச் செய்தாலும் தானும் அதுபோலச் செய்ய வேண்டும் என்கிற ஆசை அதிகம். தங்களுடைய கொல்லைப்புறத் தோட்டத்திலே வேலை செய்பவர்களுடன் தானும் போய் அவர்களுக்கு உதவியாக எதையாவது செய்துகொண்டிருப்பான். கட்டிட வேலைகள் செய்பவர்களைக் கவனித்துவிட்டு வந்து தன் வீட்டில் அக்காவுக்காக ஒரு துளசி மாடத்தையே கட்டித்தந்தான்.

அப்பாவோடு வயலுக்குப் போவான். நெல்மணிகளைப் பண்டமாற்றாகக் கொடுத்து அப்பா வாங்கித்தரும் நிலக்கடலையைக் கொரித்துக்கொண்டே வயல்வெளி இயற்கையை லயித்துப் பார்த்துக்கொண்டிருப்பான். கற்பனைக் குதிரை எங்கெங்கோ பறக்கத் தொடங்கும்.

மழைக்காலங்களில் தங்களின் ஓட்டு வீடு அங்கங்கே ஒழுகும். உடனே வீட்டின் கூரையில் ஏறி, ஒழுகுகிற ஓட்டை எடுத்துவிட்டு, நல்ல ஓட்டினைப் பொருத்திவிட்டு இறங்குவான். விழுந்துவிடுவானோ என்று அம்மாவும் அக்காமாரும் பதறித் துடிப்பார்கள். இத்தனையும் அப்பா இல்லாத சமயங்களில்தான் நடக்கும். காவிரியாற்றில் நண்பர்களுடன் நீச்சலடித்து விளையாடுவதும் அதில் அடங்கும்.

அப்பாவின் பார்வையில் இவையெல்லாம் படிப்புக்கு எதிராக செய்யப்படுகிற வீண் சேட்டைகள். இதில் ஏதாவது தெரியவந்தால் அப்பாவிடம் படவா ராஸ்கல் என்ற திட்டுடன்கூட அடியும் வாங்கவேண்டும். அப்பாவுக்குப் பிடிக்காத இந்தச் சேட்டைகளையெல்லாம் பாலசந்திரன் தனது 8 வயதிலேயே தொடங்கிவிட்டான். பள்ளிக்கூடத்திலும் அவனுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பள்ளி விழாக்களின்போது நடக்கும் மாறுவேடப்போட்டியில்தான் கவனம் முழுவதுமிருக்கும். முதல் ஆளாக தன் பெயரைக் கொடுத்துவிடுவான் பாலசந்திரன்.

அப்படி ஒருமுறை மாறுவேடப்போட்டியில் குடுகுடுப்பைக்காரன் வேடம் போட்டான். அம்மா, அக்காக்களின் கிழிந்த சேலைகளைக் கத்தரித்துக் கத்தரித்து தன் கற்பனைக்கு ஏற்ப தானே ஒரு ஆடையைத் தைத்துக்கொண்டான். தானே குடுகுடுப்பைக் கருவியான உடுக்கையையும் செய்தான். ஆனாலும் இந்த மாறுவேடப்போட்டி அவனது கலை ஆர்வத்துக்குப் போதுமானதாக இல்லை. காரணம், வருடத்துக்கு இரண்டு முறைதானே அது வருகிறது.

எனவே, நாடகங்களை உருவாக்கி, நண்பர்களைக் கொண்டு நடிக்கச் செய்து விளையாடத் தொடங்கினான். அது அவனது பிரதான விளையாட்டாகவே மாறிப்போனது. டெல்லியிலிருந்து லீவுக்கு தனது பெரியக்கா நல்லமாங்குடிக்கு வருவதுதான் பாலசந்திரனுக்கு மிகுந்த மகிழ்ச்சியான தருனமாக இருக்கும். காரணம், எல்லோரையும் கட்டாயமாக அடிக்கடி சினிமாவுக்குக் கூட்டிப்போய்விடுவார் அக்கா. அவர்கள் கிராமத்தில் சினிமாக் கொட்டகை கிடையாது. மாட்டுவண்டியைக் கட்டிக்கொண்டு நன்னிலம், திருவாரூர் என்று படம் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்.

கொஞ்சம் பெரியவனானதும் அப்பாவுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தானே சினிமாவுக்குச் செல்லத்தொடங்கினான் பாலசந்திரன். அந்த நாளில் அப்படி அவன் விரும்பி மறுபடியும் மறுபடியும் பலமுறை பார்த்த படங்கள் அறிஞர் அண்ணாவின் ‘வேலைக்காரி’, கலைஞர் கருணாநிதியின் ‘பராசக்தி’, கலைவாணர் என்.எஸ்.கே.வின் ’நல்லதம்பி’. ‘பராசக்தி’ வசனங்களை பாலசந்திரன் மனப்பாடம் செய்தது எப்படித் தெரியுமா?

இரு கோடுகள் படத்தில்...
இரு கோடுகள் படத்தில்...

விவசாயம் இல்லாத கோடைகாலங்களில் வயல்வெளியில் தற்காலிகமாகத் திரையரங்கு முளைக்கும். அதுதான் டூரிங் கொட்டகை. அதில் ‘பராசக்தி’ ஓடியபோது முதல்நாள் டிக்கட் வாங்கிக்கொண்டு படம் பார்க்கச் செல்லும் பாலசந்திரன் அடுத்தநாளிலிருந்து தினமும் அந்தக் கொட்டகைக்கு அருகில்போய் வயல்வெளியில் உட்கார்ந்துகொண்டு வசனங்களைக் காதில் வாங்குவான். மனக்கண்ணில் முதல்நாள் பார்த்த காட்சிகளை ஓடவிடுவான். தினமும் இப்படி நடக்கும்.

கருணாநிதியின் வசனங்களோடு இளங்கோவனின் வசனங்கள், கண்ணகி படம் என்று பலவற்றையும் இந்தமுறையில் உள்வாங்குகிற விசித்திர வழக்கம்தான் அவனுள் சினிமா மோகத்தை உரமூட்டி வளர்த்தது. தான் மனதில் பதித்துக்கொண்ட பட வசனங்களையெல்லாம் தன் நண்பர்களிடம் அப்படியே உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிக்காட்டுவது பாலசந்திரனுக்குப் பிடித்தமானது. அந்தப் படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் குறித்து நண்பர்களிடம் சிலாகித்துப் பேசிக்கொண்டே இருப்பதும் அவனுக்குப் பிடிக்கும்.

பராசக்தி படத்தில்...
பராசக்தி படத்தில்...

ஆனால், தன் மூத்த மகன் ஒரு பட்டதாரியாக ஆகமுடியாமல் போகவே இளைய மகன் பாலசந்திரனைக் கூடுதலாகக் கண்காணிக்கத் தொடங்கினார் அப்பா. எப்போதும் அவன் தன் கண்படவே இருக்க வேண்டும். அதுவும் புத்தகமும் கையுமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். விளையாடுவது, அரட்டையடிப்பது போன்றவை கல்விக்கு எதிரான வீண் செயல்கள் என்ற கருத்து அவருக்கு. கண்டிப்பு கூடிக்கொண்டே போனது. விடுமுறைக்கு நன்னிலத்திலிருந்த மாமா வீட்டுக்குப்போனால் அங்கே கொஞ்சம் சுதந்திரம் இருக்கும். அந்த ஊரில் சில சினிமாக் கொட்டகைகளும், நாடக அரங்கங்களும் இருந்தன.

மேல்நிலைக் கல்விக்காக நன்னிலம் போனபோது இந்தக் கலை ஆர்வத்துக்கு அங்கே சற்றே கூடுதல் தீனி கிடைத்தது. கல்லூரிக்குப் போனபோது அது இன்னும் கூடியது. வாலிப பாலசந்திரன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார். அங்கே தெரிந்தும், திருட்டுத்தனமாகவும் நிறைய படங்கள் பார்க்கிற வழக்கம் தொடர்ந்தது. டி.கே.சண்முகம் குழுவினருடைய நாடகங்கள், நடிகவேள் எம்.ஆர். ராதா நாடகங்கள் என்று அவர் தன் கலைத்தாகத்தைத் தீர்த்துக்கொள்ளத் தொடர்ந்து இயங்கினார்.

பெரியார் ஈ.வெ.ராமசாமி
பெரியார் ஈ.வெ.ராமசாமி

அது விடுதலைப்போராட்டம் நடந்துகொண்டிருந்த நேரம். மறுபக்கம் திராவிட இயக்கம் பிரிவினையை முன்வைத்து இயங்கியது. இந்த இரண்டு போக்குகளும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையேயும் தீவிரம் கொண்டிருந்தன. பாலசந்திரனுக்கோ இவை இரண்டின் நியாயங்களும் புரியத் தொடங்கின. அடிக்கடி தந்தை பெரியார் அங்கே வந்து உரையாற்றுவார். அதைத் தவறாமல் கேட்பார் பாலசந்திரன். அண்ணாவின் கூட்டங்களுக்கும் போவார்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்தது. நாடே மகிழ்ச்சியில் கொண்டாடியது. அதேவேளை பெரியார் மட்டும் அதைக் கருப்பு நாள் என்று சொன்னார். கொண்டாட வேண்டாம் என்றார். பாலசந்திரனுக்கு இது சரியல்லவே என்று தோன்றியது. பெரியாருக்கு முரணாக, தேசம் அடைந்த சுதந்திரத்தை வரவேற்றுப் பேசினார் அண்ணா. அப்போதுதான் அவருக்கு அண்ணா மீது கூடுதல் ஈடுபாடு ஏற்பட்டது. அவர்மேல் பெரும் மரியாதை உண்டானது.

அந்த மரியாதைதான் பின்னாளில் தனது ’இருகோடுகள்’ படத்தில் அண்ணாவை முதல்வர் என்ற ஒரு பாத்திரமாக்கிட இயக்குநர் பாலசந்தரைத் தூண்டியது. ஆனால், அதற்காக அண்ணாவாக எவரையும் நடிக்க வைக்கவில்லை. புதிய உத்தி ஒன்றை வைத்தார் அந்தக் காட்சியில். முதலமைச்சரின் முன்னே பணிவோடு கலெக்டர் சௌகார்ஜானகி அமர்ந்திருப்பார். எதிரே முதல்வர் நாற்காலியில் காமிராவை வைத்தார் இயக்குநர்.

ஆமாம்... காமிராதான் அண்ணாவை உருவகப்படுத்தியது. சிவகங்கை சேதுராசனின் குரலில் அண்ணா பேசினார். காட்சியை முடிகிறபோது அண்ணாவின் கண்கண்ணாடியும் பேனாவும் மேசைமேல் இருப்பதாகக் காட்டி நிறைவு செய்தார். அண்ணா மறைந்த சமயம் என்பதால் இந்தக் காட்சி அவருக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய அஞ்சலியாக அந்தநாளில் கருதப்பட்டது.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

அண்ணாவின் ஆவி பேசுகிறது... இப்போதும் அண்ணாவின் ஆவிதான் அரசாள்கிறது என்று பாலசந்தர் குறியீடாகக் காட்டியிருக்கிறார் என்று பத்திரிகைகள் எழுதின!

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

அண்ணா மற்றும் கருணாநிதி
தேநீர் நேரம்-13 : நவராத்திரி சென்டிமென்ட்டில் நவரத்தினம் எடுத்த ஏ.பி.நாகராஜன்!

வீடியோ வடிவில் காண: http://surl.li/fpvyz

அண்ணா மற்றும் கருணாநிதி
தேநீர் நேரம்- 14: அண்ணா மீது பாலசந்தருக்கு அத்தனை ஈர்ப்பு ஏன் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in