டிக்கெட் கட்டண விவகாரம்: ஆந்திராவில் 50 தியேட்டர்கள் மூடல்

டிக்கெட் கட்டண விவகாரம்: ஆந்திராவில் 50 தியேட்டர்கள் மூடல்

தியேட்டர் கட்டண விவகாரம் தொடர்பாக, ஆந்திராவில் சுமார் 50 தியேட்டர்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆந்திர அரசு தியேட்டர்களுக்கு புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி மாநகராட்சிப் பகுதிகளில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.75, ரூ.150, ரூ.250 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இங்கு அதிகபட்சக் கட்டணம் ரூ.150 ஆக இருந்தது. முந்தைய கட்டணத்தை விட சில பகுதிகளில் அதிகமாகவும் சில பகுதிகளில் மிகவும் குறைவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத தியேடர்களில் ரூ.20, ரூ.40, ரூ.60 என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி பகுதிகளில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.60, ரூ.100, ரூ.150 எனவும், ஏசி தியேட்டர்களில் ரூ. 30, ரூ.50, ரூ.70 எனவும் ஏசி அல்லாத திரையரங்குகளில் ரூ.15, ரூ.30, ரூ.50, ரூ.70 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஏசி அல்லாத திரையரங்குகளில் ரூ.5, ரூ.10, ரூ.15 என டிக்கெட் கட்டணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீம்லாநாயக் - பவன் கல்யாண்
பீம்லாநாயக் - பவன் கல்யாண்

இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மாநகராட்சி பகுதிகளில் கட்டணத்தை குறைக்கவும் கிராமப்புறப் பகுதிகளில் டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்கவும் அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் பவன் கல்யாண், ராணா நடித்துள்ள பீம்லாநாயக் படம் நேற்று ரிலீஸ் ஆனது. அதற்கு முந்தைய நாள், அரசு தியேட்டர்களுக்கு சில திடீர் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, சிறப்புக் காட்சிகள், ரசிகர்களுக்கான காட்சிகள் திரையிடக்கூடாது; டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. அதோடு, இதைக் கண்காணிக்க அதிகாரிகளையும் ஆந்திர அரசு நியமித்துள்ளது.

தியேட்டர்களை மூடுவதாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு
தியேட்டர்களை மூடுவதாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு

இந்நிலையில், இவ்வளவு குறைந்த விலையில் டிக்கெட்டுகளை விற்றால் தியேட்டர்களை நடத்த முடியாது என்று, சில பகுதிகளில் தியேட்டர்களை மூடி வருகின்றனர். நேற்று மட்டும் சுமார் 50 தியேட்டர்கள் கிராமப்புறப் பகுதிகளில் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருசில தியேட்டர்களின் வாசலில், குறைந்த விலைக்கு டிக்கெட்டுகளை விற்றால், தியேட்டர் நடத்துவது சிக்கல் என்பதால், 25-ம் தேதி முதல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in