சீனு ராமசாமி பறக்கவிட்ட ‘நீர்ப்பறவை!’

சீனு ராமசாமி பறக்கவிட்ட ‘நீர்ப்பறவை!’

சிலரின் வாழ்க்கையை நாம் வாழ்ந்து பார்க்க ஆசைப்படலாம். சில வாகனங்களில் பயணம் செய்யவும் ஆசைப்படலாம். அப்படித்தான், படகு கப்பலிலும் பயணம் செய்ய ஆசைப்படுவோம். ஒரு தருணத்தில் அதை நிறைவேற்றவும் செய்வோம். ஆனால், படகே உலகம் கப்பலே வாழ்க்கை என்று கடலுடனும், கடல் அலைகளுடனும், அலையில் இருந்து பொங்கும் நுரைகளுடனும், உள்ளே துள்ளும் மீன்களுடனுமான மீனவர்களின் வாழ்க்கையை வாழ விரும்புவோர் குறைவு. அத்தகைய மீனவர்களின் வாழ்வை, அப்படியே அதன் இயல்போடே ஆற அமர நேர்க்கோட்டில் சொன்னதுதான் ‘நீர்ப்பறவை!’

மக்கள் திலகம் எம்ஜிஆர், ‘படகோட்டி’, ‘மீனவ நண்பன்’ என்றெல்லாம் டைட்டில் வைத்து படங்கள் கொடுத்திருக்கிறார். ‘கடல் மீன்கள்’ என்ற பெயரைக் கொண்டும் படங்கள் வந்திருக்கின்றன. ‘செம்மீன்’ படத்தை இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மீனவர்களின் அபிலாஷைகள், கனவுகள், துக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள, ‘முதல்வன்’ படத்தின் ‘ஒருநாள் முதல்வர்’ போல, நம்மை கடல் மண்ணில் அமரச் செய்து அத்தனையையும் உணர்த்தியிருப்பார் இயக்குநர் சீனு ராமசாமி.

தினசரி செய்தித்தாள் வாசிப்பவர்களுக்கு தனியாக சொல்லத் தேவையில்லை. ‘கடலுக்குச் சென்ற மீனவர்களைக் காணவில்லை’, ‘கடலில் மீன் பிடிக்கும் எங்கள் உரிமையைப் பறிக்காதீர்கள்’, ‘எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல்’, ‘தீவிரவாதிகள் என நினைத்து மீனவர்கள் சுட்டுப் படுகொலை’, ‘புயல் காற்றில் சிக்கி மீனவப் படகு மூழ்கியது’.. என்றெல்லாம் நித்தம் எத்தனையெத்தனை செய்திகள்? இவற்றை விரல் சொடுக்கும் நேரத்தில் கடந்துவிடுகிறோம். ஆனால், அந்தச் செய்திக்குள் இருக்கிற துயரங்கள் மற்றும் வலிகளை.. ரத்தமும் சதையுமாக நம் எதிரே ‘நீர்ப்பறவை’யாக்கி பறக்கவிட்டார் சீனு ராமசாமி.

நடுக்கடலில் போலீஸார் சுட்டுக் கொல்கிறார்கள். பெற்றோரை இழந்து மயங்கிக் கிடக்கும் சிறுவனை கரைக்கு அழைத்து வருகிறார் ஒரு மீனவர். தன் பிள்ளையைப் போல வளர்க்கிறார். அவரின் மனைவியும் அந்தப் பிள்ளையைக் கொஞ்சி சீராட்டுவதன் மூலம் தாய்மையை பூர்த்தி செய்கிறாள்.

அவனோ வளர்ந்ததும் ஊதாரியாகிறான். பொறுப்பாக கடலுக்கு பயணிக்காது, போதையின் கரடுமுரடான பாதையில் சிக்கி சின்னாபின்னமாகிறான். ஊரில் எதிர்ப்படும் எவரிடமும் காசு கேட்பான். அம்மாவிடமே குடிக்கக் காசு கேட்பான். எவரும் அவனை மதிக்கமாட்டார்கள். கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும் ஒரு பெண் மட்டும் அவன் மீது இரக்கம் கொள்கிறாள். அவனை எப்படியேனும் திருத்த முயல்கிறாள்.

போதை மறுவாழ்வு மையம் குறித்து அவன் பெற்றோருக்கு எடுத்து சொல்லி, அங்கே அவனை சேர்க்க உதவுகிறாள். அவனும் கொஞ்சம் கொஞ்சமாக திருந்துகிறான். அப்படி திருந்தும்போது அடுத்தவரின் கனிந்த மனம் புரிகிறது. முதல்கட்டமாக, அந்தப் பெண் தன் மீது கொண்ட அன்பைப் புரிந்துகொண்டு வியப்படைகிறான். புரிதலே காதலாகிறது. அப்படியே தன் அப்பாவின் ஏக்கம் என்னவாக இருக்கும் என அறிகிறான். அம்மாவின் ஆசை எதுவாக இருக்கும் என்பதைப் புரிகிறான். அனைத்தும் புரிந்து தெளிகிறான். போதையின் பாதையில் இருந்து திருந்தி, புதுவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறான்.

ஆனால், காலம் அவ்வளவு எளிதல்ல; கடலும் அத்தனை சுலபமானதுல்ல. சொந்தமாகப் படகு வாங்கி அதில் அப்பாவின் பெயரெழுதி மீன் பிடிக்க ஆசைப்படுகிறான். ஆனால் அதற்கான பணம் அவனிடம் இல்லை. வேலைக்குச் சேர்த்துக்கொள்ள எவரும் முன்வரவில்லை. எங்கோ சென்று உப்பளத்தில் வேலை பார்த்து, ஓரளவு சம்பாதிக்கிறான். அந்த கிறிஸ்தவ இளைஞன் திருந்தியதற்காகவும், அவனுடைய அப்பாவின் நல்லுள்ளத்துக்காகவும் படகு கட்டும் இஸ்லாமியர் ஒருவர், ‘நான் படகு செஞ்சு தரேன். கொஞ்சம்கொஞ்சமா காசு கொடு..’ என்று படகின் துடுப்பென அவன் வாழ்வுக்கு கை கொடுக்கிறார்.

ஆனால் அவனை ‘அந்நியன்’ என்கிறது ஒரு கூட்டம். ‘அவன் நம்ம ராமேஸ்வரம் தங்கச்சி மடம் இல்லை. அக்கரையில் பிறந்தவன்..’ என்று புறக்கணிக்கிறது அந்தக் கூட்டம். ‘அவன் கிறிஸ்தவனே இல்லை’ என்று அவனை புறந்தள்ளவும் பார்க்கிறார்கள். மொத்தத்தில், ‘அவன் நம் கடலில் படகைச் செலுத்தக் கூடாது’ என்று முட்டுக்கட்டை போடுகிறது அந்த மீனவ சமுதாயம். அனைத்தையும் போராடி அவன் வெல்கிறான். படகு தயாராகிறது. பூசைகள் போடப்படுகின்றன. அப்பா பெயர் எழுதி படகு கிளம்ப, முட்டுக்கட்டை போட்டவர்களெல்லாம் கட்டையைக் கொடுத்து உந்தித்தள்ள, அலைகளைக் கடந்து கடலுக்கு செல்கிறான்.

‘ஆஹா.. இனிது இனிது வாழ்க்கை இனிது’ என்று திருந்தியவன் முழு மீனவனாகிறான். நினைத்தவளையே அழகுற மணக்கிறான். குழந்தையும் பிறக்கிறது. மரியாதையும், வருமானமும் நிறைய சேர்கிறது. அப்படி ஒருநாள் கடலுக்குச் சென்றவன் திரும்பாது போகிறான். வாரங்களாகியும் ஆளைக் காணோம். அம்மா தவிக்கிறாள். அப்பா மருகுகிறார். மனைவி ‘ஏசப்பா ஏசப்பா’ என்று பிரார்த்திக்கிறாள். ஒருகட்டத்தில், அவனுடைய அப்பா படகை எடுத்துக் கொண்டு கடலுக்குள் செல்கிறார். பெற்றோர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதில் சிறுவனாக தவித்த இவனை எந்த நடுக்கடலில் மீட்டு வந்தாரோ அங்கே, தற்போது அவன் சுடப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு உடைகிறார்.

மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்தவனை, தன் தோளில் தாங்கியபடி வீட்டுக்கு வருகிறார். அந்த நள்ளிரவு அவர்களுக்கு நல்லிரவாக இல்லை. ‘’எம் புள்ள வாழ்ந்த இடம் இதுதான். இங்கேயே புதைச்சிடலாம்’’ என்று முடிவு செய்கிறார்கள். ‘’ஏற்கெனவே அவங்க சுட்டுட்டாங்க. இப்போ போலீஸ்க்கு சொன்னா, துண்டுதுண்டா கூறுபோட்டுத்தான் கொடுப்பாங்க. அதனால இங்கேயே யாருக்கும் தெரியாம, எவருக்கும் சொல்லாம புதைச்சிடலாம்’’ என்று மூவரும் முடிவு செய்வார்கள். அதன்படி வீட்டிலேயே புதைப்பார்கள்.

கதையின் முடிவு இதுதானா என்றால், இல்லை. நாயகி அதன் பிறகும் கடல் அலை பார்த்து தினம் கரையில் காத்துக்கொண்டிருப்பாள். ‘யாரிவள்? யார் வரவுக்காக கடலைப் பார்க்கிறாள்?’ என்று பலரும் குழம்பி போவோம். கதையின் நாயகன் விஷ்ணு விஷால்; நாயகி சுனைனா. அங்கே காத்துக்கிடப்பதோ நந்திதா தாஸ்! சுனைனாதான் வளர்ந்து முதிய பருவத்தில் நந்திதாதாஸாக இருக்கிறாள் என்பதை அப்போதுதான் அறிவோம்.

அரசுக்கும் காவல்துறைக்கும் சொல்லாது மறைத்ததோடு, பிணத்தை வீட்டில் புதைத்தது குற்றம் என்று சொல்லி நந்திதாதாஸைக் கைது செய்வார்கள். நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள்.

குற்றவாளிக் கூண்டில் இருந்தபடி, சுளீரென அரசு செய்கிற குற்றங்களையெல்லாம் கேள்விகளாக விளாசுவார் நந்திதா தாஸ். அவையெல்லாம் எஸ்தராகவே வாழ்ந்த நந்திதா தாஸின் கேள்விகள் மட்டுமல்ல, தமிழகக் கடலோர மீனவர்களின், மீனவக் குடும்பங்களின் பெருங்கோபத்துடனான கேள்விகள்!

விஷ்ணுவிஷால் சிறந்த நடிப்பைத் தந்திருப்பார். சரண்யா கலங்கடித்திருப்பார். ‘இனிமேல் சாராயமே விற்கமாட்டேன்’ என்று சூளுரைக்கும் வடிவுக்கரசி தனக்கே உண்டான முதிர்ந்த நடிப்பை வழங்கியிருப்பார். பூ ராமு இயலாமையுடனான அப்பனாகவே வாழ்ந்திருப்பார். அனுபமாவின் முகம், சுனைனாவின் உடல் மொழி, பாதிரியார் அழகம்பெருமாளின் கண்ணியமான பேச்சு ஆகியவை கிறிஸ்தவத்தின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும், குறிப்பாக மீனவர்கள் மீதும் மிகப்பெரிய பேரன்பை நமக்குள் விதைத்துவிடும். மகா நடிகையான நந்திதா தாஸின் மகத்துவ நடிப்பைக் கண்டு சிலிர்த்துவிடுவோம். சமுத்திரக்கனியும் தம்பி ராமையாவும் தம் பங்குக்கு நெகிழ வைத்திருப்பார்கள்.

படம் முழுக்க கடலோரம்தான். அழகை அப்படியே அள்ளிக்கொடுத்திருப்பார்கள். பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவில், கடற்காற்றும் உப்பின் வாசமும் நம் உடல் தொடும்; நாசி தீண்டும்! எழுத்தாளர் ஜெயமோகனும் சீனு ராமசாமியும் இணைந்து எழுதிய வசனங்கள், இயல்பு மீறாது நம்மை என்னவோ செய்யும்!

ரகுநந்தனின் இசை, படத்துக்கு ஜீவன் சேர்த்தது. ஏனோ தெரியவில்லை, இந்த அற்புதமான இசையமைப்பாளரை திரையுலகம் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதேபோலத்தான் நடிகை சுனைனா. மிகச்சிறந்த நடிகையான அவரையும் முழுமையாக இன்னும் பயன்படுத்தவில்லை. கவிப்பேரரசு தன் வரிகளில் நம்மை உருக்கியெடுத்துவிடுவார். ஒவ்வொரு பாடலிலும் மொத்தக் கடற்தாகத்தையும் நிரப்பிக் கொடுத்திருப்பார். ‘பறபறவென..’ பாடலை பலரும் ரிங்டோனாகவும் காலர்டியூனாகவும் இன்றைக்கும் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வெளியிட்டார். ரசனை மிக்க, சமரசமில்லாத, வணிக குணங்கள் இல்லாத படைப்பை வெளியிட்டதற்கு முதலில் உதயநிதி ஸ்டாலினைப் பாராட்ட வேண்டும். ‘குத்துப்பாட்டு இருக்கா, வெட்டுக்குத்து இருக்கா’ என்றெல்லாம் கேட்கிற திரையுலகில் இது அசாத்தியம்தான்!

இயக்குநர் சீனு ராமசாமி, தன் படைப்புகள் மூலம் மனிதம் பேசுபவராகவே திகழ்கிறார். அன்பு விதைப்பவராகவே இருக்கிறார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு களம் என்றபோதும், அந்தக் கதையின் அடிநாதமாக, கருவாக, ஜீவனாக அன்பொன்றே பிரதானமாக வெளிப்படுகிறது.

கடலோரக் காத்திருப்பு, விஷ்ணு விஷால் புதைப்பு விவகாரம், போலீஸார் கைது, நீதிமன்றம் மன்னிப்பு.. எல்லாம் முடிந்த பிறகும் கூட, கடலைப் பார்த்தபடி காத்துக்கொண்டிருப்பார் நந்திதா தாஸ். ‘இன்னும் எதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள்’ என்று கேட்பவரிடம் ‘அவரோட உயிர் வந்துருச்சு. ஆனா, அவரோட ஆத்மா சுத்திக்கிட்டுதான் இருக்கு. ஒருநாள் என்னைத் தேடி நிச்சயம் வரும்’ என்று அவர் சொல்வதோடு படம் முடியும். நாம்தான் எழ மனமில்லாது, கனத்த இதயத்தோடு திரையங்கிலிருந்து மெல்ல விடுபடுவோம்.

2012-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வெளியானது சீனு ராமசாமி பறக்கவிட்ட ‘நீர்ப்பறவை.’ பத்து ஆண்டுகள் கழித்து இப்போது ‘நீர்ப்பறவை 2’ குறித்து அவர் அறிவித்திருக்கிறார்.

நீரின்றி மட்டுமல்ல பறவை இன்றியும் அமையாது உலகு. இந்த ‘நீர்ப்பறவை’ இன்றியும் அமையாது நம் திரையுலக ரசனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in