சூப்பர் ஸ்டார் வீட்டில் மதில் சுவர் ஏறிக் குதித்த திருடன்: கடைசியில் நடந்த துயரம்!

சூப்பர் ஸ்டார் வீட்டில் மதில் சுவர் ஏறிக் குதித்த திருடன்: கடைசியில் நடந்த துயரம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற கொள்ளையன் சுவர் ஏறி குதித்துள்ளான். இதில் திருடனின் கால் முறிந்ததால் பாதுகாவலரிடம் சிக்கிக் கொண்டான்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஜுப்லிஹீல்ஸ் பகுதியில் பிலீம் நகரில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் வீடு உள்ளது. இந்த வீட்டில் 27-ம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் மகேஷ் பாபு வீட்டு சுவர் ஏறி குதித்து திருட முயற்சி செய்துள்ளார். ஆனால் வீட்டின் மதில் சுவர் 10 அடிக்கு மேல் இருந்ததால் திருட வந்தவர் சுவர் ஏறி குதித்தபோது கால் முறிந்தது. இதனால் திருடன் அலறியுள்ளான். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பாதுகாவலர் அந்த திருடனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து அந்த திருடன் உஸ்மானியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

திருடனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பது தெரியவந்தது. கடந்த வாரம் ஹைதராபாத் வந்த கிருஷ்ணா மரக்கன்றுகள் விற்கும் நர்சரியில் பணியில் சேர்ந்த நிலையில் இரவில் திருட முயன்று கால் உடைத்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிகிச்சைக்கு பிறகு திருடன் கிருஷ்ணாவை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மகேஷ் பாபு வீட்டில் திருட முயன்ற சம்பவம் நடந்த மறுநாளே அவரது தாயார் இந்திராதேவி உயிரிழந்தார். இதனால் கொள்ளை முயற்சி சம்பவம் வெளியில் தெரியாமல் இருந்தது. தற்போது, இந்த சம்பவம் காவல்துறை மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in