`விக்ரம்' படம் உருவான கதை!- மனம் திறந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

`விக்ரம்' படம் உருவான கதை!- மனம் திறந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

'விக்ரம்' படம் குறித்தும் கமல்ஹாசனுடன் இணைந்தது பற்றியும் மனம் திறந்து இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'விக்ரம்' திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் முன்னோட்ட காட்சி பிரான்சில் நடைபெறும் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படம் குறித்தும் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பணிபுரிந்தது பற்றியும் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில், "நான் 'கைதி' படப்பிடிப்பில் இருந்த சமயத்திலேயே நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் படம் ஒன்றை இயக்குவதற்கு எனக்கு அழைப்பு வந்தது. அப்போது எனக்கு 'மாநகரம்' திரைப்படம் மட்டும்தான் அடையாளமாக இருந்தது. பின்பு 'கைதி' படத்தின் முன்னோட்ட காட்சி வெளியானதும் கமலுக்கு மிகவும் பிடித்து இருந்தது. மேலும் திரைப்படத்தையும் அவர் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார். அதன் பிறகு இடையில் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அப்போது அவர் 'கைதி' படம் குறித்து நிறைய பேசுவார். அதில் அவருக்கு என் கதை எப்படி பிடித்து இருந்தது, அவர் எப்படி அந்த படத்தை உள்வாங்கி இருக்கிறார் என நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

அதன் பிறகு படம் இயக்குவதற்கு கதை இருக்கிறதா என்று கமல் தரப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அந்த சமயத்தில் 'கைதி' முடித்துவிட்டு 'மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்தேன். ஆனால் நிஜமாகவே அப்போது கமலுக்கு செய்வதற்கு என் கையில் எந்த ஒரு கதையுமே இல்லை. ஆனால் ஒரு வரி மட்டும் இருந்தது. அவரை நேரில் சந்தித்து நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். இதுபோல எனக்கு இந்த ஒரு வரி மட்டும் தான் இருக்கிறது. பதற்றத்தில் எனக்கு பெரிதாக கதை யோசிக்க வரவில்லை. நீங்கள் நிறைய படங்கள் நடித்து விட்டீர்கள். நிறைய கதாபாத்திரங்களையும் பார்த்து விட்டீர்கள். உங்களுக்கு இப்படியான ஒரு கதாபாத்திரமும் அல்லது கதையோ நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? அப்படி இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நான் அதை கதையாக டெவலப் செய்கிறேன் என்று கூறினேன்.

அவர் தன்னுடைய விருப்பத்தை சொன்னார். அவர் சொன்ன அந்த கதாபாத்திரமும் என்னுடைய கதையும் இணையும் ஒரு புள்ளியை நான் கண்டுபிடித்தேன். அதனால் அவரிடம் இரண்டு மாதங்கள் நேரம் கேட்டு அந்த கதையை டெவலப் செய்து பிறகு அவரிடம் கொடுத்தேன். அந்த கதைதான் 'விக்ரம்'. அவருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. 100 நாட்களை கடந்த படப்பிடிப்பில் அவர் ஒருநாள்கூட என் வேலையில் தலையிட்டதில்லை.

இயக்குநராக எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து நடிகராக அவர் என்னிடம் ஒப்படைத்தார். சில காட்சிகளுக்கு ரீ-டேக் கேட்க அவரிடம் நான் தயங்கினேன். அதுகுறித்து அவர் சொல்லிய போது காட்சி நன்றாக வர வேண்டுமென்றால் நீ திருப்தி அடையும் வரை ரீ-டேக் எடுக்க தான் வேண்டும். அதெல்லாம் கேட்பதற்கு தயங்காதே!' என்று கூறினார்.

டிரெய்லரின் ஒரு காட்சியில் கடினமான சமயத்தில் வீரர்கள் பயன்படுத்தும் வார்த்தை 'விடு பாத்துக்கலாம்' என்பது பலரிடமும் பரவலான வரவேற்பு பெற்றது. அன்று நிஜமாகவே அந்த காட்சிக்கு எங்களிடம் வசனமே இல்லை. படப்பிடிப்பு தளத்திற்கு நேரடியாக போய் விட்டோம். அப்பொழுது 'என்ன வசனம் வைக்கலாம்' என்று நானும் என் உதவி இயக்குநர்களும் மிகவும் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது 'விடு பாத்துக்கலாம் ஏதாவது ஒன்று கிடைக்கும்' என்று நான் சொன்னேன்.

அது என் உதவி இயக்குநர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அந்த வார்த்தை அந்தக் காட்சிக்கு பொருத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் சொன்னார்கள். அந்த வசனத்தை நடிகர் கமல்ஹாசனை 'விக்ரம்' படத்திற்காகவும் அவருடைய தீவிர ரசிகனாக 'விருமாண்டி' படத்தின் பாணியிலும், 'சத்யா' படத்தின் பாணியிலும் என இரண்டு மூன்று வெர்ஷன்களை வாங்கி வைத்துக் கொண்டேன். அவருக்கும் அந்த காட்சியும் படமும் பிடித்து இருக்கிறது" என்று கூறினார் லோகேஷ் கனகராஜ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in