'காந்தாரா' படத்தின் ’வராஹ ரூபம்’ பாடலுக்குத் தடை!

'காந்தாரா' படத்தின் ’வராஹ ரூபம்’ பாடலுக்குத் தடை!

'காந்தாரா' படத்தின் ’வராஹ ரூபம்' பாடலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'காந்தாரா'. கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் வெளியாகி 200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. பழங்குடியின மக்களுக்கான மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக இப்படம் உருவாகி வெளியாகியுள்ளது.

'காந்தாரா' படத்தின் க்ளைமேக்ஸில் 'வராஹ ரூபம்' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. நல்ல வரவேற்பை பெற்ற இப்பாடல் கேரளாவை சேர்ந்த தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற இசைக்குழு சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'நவரசம்' என்ற பாடலுடன் ஒத்துப்போவதாகவும், இரண்டு பாடல்களுக்கும் தவிர்க்க முடியாத பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் தாய்க்குடம் ப்ரிட்ஸ் இசைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

வராஹ ரூபம் பாடல் நவரசம் பாடலின் நகல் என்பதால் ’காந்தாரா’ படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு தெரிவித்திருந்தார்கள். காப்புரிமை பிரச்சனையில் சிக்கியுள்ள இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும் என்று கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வராஹ ரூபம் பாடலுக்குத் தடை விதித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியது மட்டுமல்லாமல், அமேசான், யூடியூப், ஸ்பாடிஃபை, விங்க் மியூசிக், ஜியோ சவான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. இதனையடுத்து, நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள தாய்க்குடம் ப்ரிட்ஜ் இசைக்குழு இந்த கடினமானப் பயணத்தில் தங்களுக்குத் துணை நின்ற அனைவருக்கும் தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in