`எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் என்னுடையது’- சர்ச்சைகளுக்கு பின் மனம் திறந்த பாடலாசிரியர் அறிவு!

`எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் என்னுடையது’- சர்ச்சைகளுக்கு பின் மனம் திறந்த பாடலாசிரியர் அறிவு!

`` ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் என்னுடையது'' என பாடலாசிரியர் அறிவு மனம் திறந்துள்ளார்.

‘தெருக்குரல்’ பாடல் மூலமாக பரவலாக அறியப்பட்டவர் பாடலாசிரியர் அறிவு. ஒடுக்கப்பட்ட மக்களின் வலி குறித்து அவரின் பல பாடல்கள் கவனம் பெற்றது. இது போன்ற தனிப்பாடல்கள் மட்டுமல்லாமல், சினிமாவிலும் பல பாடல்களை எழுதி பாடியிருக்கிறார் அறிவு. அந்த வகையில் கடந்த வருடம் ’எஞ்சாய் எஞ்சாமி’ தனிப்பாடலை அறிவு எழுதி இருந்தார். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அறிவு மற்றும் தீ இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில், இந்த பாடல் பலரது பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்ற நிலையில் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் பில் போர்ட்டில் இடம் பெற்றது.

அங்கிருந்து தான் சர்ச்சை முதலில் ஆரம்பித்தது. இந்த பில் போர்ட்டில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் உருவாக முழு காரணமாக இருந்த அறிவு புகைப்படம் இடம் பெறாமல் பாடலை பாடியவர்களில் ஒருவரான தீயின் புகைப்படம் மட்டுமே இடம் பெற்று இருந்தது சர்ச்சைக்குள்ளானது. இதுமட்டுமல்லாமல், இந்த பாடலுக்கு சொந்தக்காரரான அறிவு இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் பாடகி தீயும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுவதாகவும் விவாதங்கள் கிளம்பின.

தற்போது சென்னையில் நடந்த ‘செஸ் ஒலிம்பியாட்2022’ தொடக்க விழாவில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலை பாடகி தீ மற்றும் ’கிடாக்குழி’ மாரியம்மாள் இருவரும் இணைந்து பாடினர். இதில், பாடகர் அறிவு பங்கேற்கவில்லை. மேலும் அவரது பெயரும் இதில் முன்னிலைப்படுத்தவில்லை என மீண்டும் சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது.

இவ்வளவு சர்ச்சைகளுக்கு பின் பாடகர் அறிவு தற்போது மவுனம் கலைத்து இருக்கிறார். ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் பற்றியும் அது தனக்கு மட்டுமே உரியது எனவும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அறிவு. அதில் அவர், ‘’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலை கம்போஸ் செய்து, எழுதி, பாடி அதில் நடித்திருப்பது நான் மட்டுமே. இந்த பாடலை எழுதுவதற்கான வார்த்தைகளோ, இசையோ யாரும் எனக்கு தரவில்லை. இந்த பாடலுக்காக இரவு பகலாக கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தூங்காமல், மன அழுத்தத்தோடு கடந்திருக்கிறேன். இந்த பாடல் ஒரு கூட்டு அணியின் முயற்சி, எல்லோருக்கும் இதில் பங்கிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த பாடல் வள்ளியம்மாள் பற்றியதோ அல்லது நிலம் இல்லாத தேயிலை தொழிலாளர்களை பற்றியதோ மட்டும் கிடையாது. என்னுடைய ஒவ்வொரு பாடலும் ஒடுக்கப்பட்ட இந்த தலைமுறையின் வலியை சொல்ல கூடியது.

இந்த பாடலை போன்றே பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் நம் நிலத்தில் உண்டு. இந்த பாடல், நம் முன்னோர்களின் மூச்சு, வாழ்வு, அவர்களின் வலி, அன்பு, இருப்பிடம் என அனைத்தையும் சுமக்கிறது. இது எல்லாமே அழகான பாடல்களின் மூலம் கடத்துகிறது. நம் தலைமுறையில் தான் ரத்தமும் வியர்வையும் பாடல்கள் எனும் அழகிய கலை மூலம் மரபாக எடுத்து செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது யார் வேண்டுமானாலும் உங்கள் பொக்கிஷத்தை அபரிக்கலாம். ஆனால், நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது அப்படி யாரும் செய்ய முடியாது. ஜெய் பீம். உண்மை தான் இறுதியில் வெல்லும்’ என அந்த பதிவில் விரிவாக பேசியுள்ளார் அறிவு.

அறிவின் இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட்டில் தாங்கள் துணை இருப்பதாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in