`முழுமையாக நம்பினேன்; என்னிடம் அரக்கனைப் போல் நடந்து கொண்டார்'- நடிகர் மீது இளம் நடிகை பகீர் புகார்

`முழுமையாக நம்பினேன்; என்னிடம் அரக்கனைப் போல் நடந்து கொண்டார்'- நடிகர் மீது இளம் நடிகை பகீர் புகார்
முகநூலில் நேரலையில் நடிகையின் பெயரைச் சொல்லும் விஜய் பாபு

படப்பிடிப்பு முடிந்து தனது காரில் வந்துகொண்டிருந்த பிரபல நடிகை ஒருவரை காரில் இருந்து கடத்தி நடிகர் திலீப் தூண்டுதலில் பாலியல் வன்கொடுமை செய்தது ஒரு கும்பல். இவ்வழக்கில் ஜனங்களின் கலைஞன் என்னும் அடைமொழி கொண்ட திலீப் சிக்கினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே இன்னொரு மலையாள இளம் நடிகை, மலையாளத் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.

விஜய் பாபு
விஜய் பாபு

போதையில் இருந்த தன்னை பாலியல் வன்மத்திற்கு பலமுறை உள்ளாக்கியதாக இளம் நடிகை ஒருவர், மலையாளத் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது எர்ணாக்குளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சினிமாத்துறையில் தனக்கு வழிகாட்டியாக இருப்பதைப் போல் விஜய் பாபு நடந்து கொண்டதாகவும், அதனால் அவரை முழுமையாக நம்பியதாகவும் கூறும் நடிகை, அந்த உறவைப் பயன்படுத்தி உடல் ரீதியாக தொடர் அத்துமீறல்களை நடத்தியதாக புகார் கொடுத்திருந்தார்.

மேலும், அவர் தனது புகாரில், ”சினிமா வாய்ப்பைக் காரணம்காட்டி என்னிடம் அரக்கனைப் போல் நடந்துகொண்டார் விஜய் பாபு. நான் சுயநினைவோடு இருக்கும்போது அவரது எண்ணத்திற்கு சம்மதிக்கமாட்டேன் என்பதால் எனக்கு போதை மாத்திரை, மதுவைக் கொடுத்துவிடுவார். சிலநேரங்களில் நான் சுயநினைவோடு இருந்தாலும் என்னிடம் மிருகத்தனமாக நடந்துகொள்வார். ஒருகட்டத்தில் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகவும், அவரது அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு தருவதாகவும் சொன்னார். கடைசியில் என்னை மிரட்டத் தொடங்கிவிட்டார். என் வீடியோக்களை வெளியிடுவேன் என்று சொல்லி கொலை மிரட்டலும் விடுத்தார்” என புகார் கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது பாலியல் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் பாபு எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவாகிவிட்டார். இதனிடையில் மலையாள ஊடகங்களில் விஜய் பாபு பெயர் அடிக்கடி வரத் தொடங்க, நடிகைக்கு எதிராக கோபமடைந்தார் விஜய்பாபு. பொதுவாக பாலியல் தொடர்பான புகார்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை பொதுவெளியில் எழுதுவதோ, பேசுவதோ சட்டப்படி குற்றமாகும். அதை மீறுவோர் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் விஜய் பாபு, தன் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படையாகவே சொல்லி பேசுகிறார். கூடவே தன்பெயர் மட்டுமே இதனால் வெளியில் தெரிந்து கெட்டுப் போயிருப்பதாகவும், நடிகையின் பெயரும் தெரியவேண்டும் என்பதாலேயே பெயரைச் சொல்கிறேன்’’ எனவும் பேசியுள்ளார். மலையாளத் திரையுலகில் இந்த சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது.

Related Stories

No stories found.