இந்த செருப்பின் விலை ரூ.199 தான்: எளிமைக்கு மாறிய நடிகர் விஜய் தேவரகொண்டா!

இந்த செருப்பின் விலை ரூ.199  தான்: எளிமைக்கு மாறிய நடிகர் விஜய் தேவரகொண்டா!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, இந்தி நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ள படம், ’லைகர்’. புரி ஜெகநாத் இயக்கியுள்ள இந்தப் படம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகிறது. ரம்யா கிருஷ்ணன், அலி பாஷா, ரோனித் ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு மணி சர்மா இசை அமைக்கிறார். இயக்குநர் கரண் ஜோஹர், புரி ஜெகநாத், நடிகை சார்மி ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். இந்தப் படம் வரும் 25-ம் தேதி வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக, விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டேவும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று வருகின்றனர். வழக்கமாக விதவிதமான ஷூக்களை அணிந்து வரும் விஜய் தேவரகொண்டா, இந்த விழாக்களில் சாதாரண செருப்பையே அணிந்து வருகிறார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ’’இந்தப் படத்துக்காக, 30 நாட்கள் புரமோஷன் நிகழ்ச்சிகள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய ஆடை மற்றும் புதிய காலணிகளைத் தேடுவது சலிப்பாக இருக்கிறது. அதனால், இந்த சாதாரண செருப்பை வாங்கினேன். இது வசதியாக இருக்கிறது. எந்த உடைக்கும் இது பொருந்தும்’’ என்றார். இந்த செருப்பின் விலை ரூ.199 என்று அவருடைய சிகை அலங்கார நிபுணர் ஹர்மன் கவுர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in