
துணிவு, வாரிசு இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியாக உள்ள நிலையில் இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று ஒரே போஸ்டரில் வாழ்த்து தெரிவித்து திண்டுக்கல்லில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நடித்துள்ள வாரிசு, துணிவு ஆகிய திரைப்படங்கள் நாளை அதிகாலை வெளியாக உள்ளது. இதனையொட்டி தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள அவர்களது ரசிகர்கள் தங்கள் தல மற்றும் தளபதியின் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று போட்டி போட்டு பேனர்கள் வைத்தும், போஸ்டர்கள் ஒட்டியும், கோயில்களில் வழிபட்டும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு நடிகர்களின் ரசிகர்களின் போட்டியால் பல இடங்களில் மோதல் ஏற்படும் சூழ்நிலை கூட உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களையும் ஒரே போஸ்டரில் அச்சிட்டு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து திண்டுக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் இருசக்கர வாகனத்தை அஜித் ஒட்டிவர பின்னால் சிரித்தவாறே அமர்ந்திருக்கிறார் விஜய்.
ஒரு பக்கம் வாரிசு திரைப்படம். இன்னொரு பக்கம் துணிவு திரைப்படம், இருவரின் படங்களும் அந்தந்த பகுதியில் அச்சிடப்பட்டு தல, தளபதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்று அந்த போஸ்டரில் வாசகங்கள் காணப்படுகிறது. ரசிகர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் திண்டுக்கல் பகுதியில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பலரையும் ரசிக்கவும் வைத்துள்ளது.