‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ரீ-ரிலீஸ்: ஷாருக்கானின் ‘பதான்’-க்கு பதிலடியா?

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ரீ-ரிலீஸ்: ஷாருக்கானின் ‘பதான்’-க்கு பதிலடியா?

கடந்த மார்ச்சில் வெளியான ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் நாளை முதல் திரையரங்குகளில் மறுவெளியீடு காண்கிறது. அடுத்த வாரம் வெளியாக உள்ள ஷாருக் கானின் ’பதான்’ படத்துக்கு பதிலடியாக, ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக தெரிகிறது.

பல்லவி ஜோஷி தயாரித்து, விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் , 2022, மார்ச்சில் வெளியான திரைப்படம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. ஜம்மு காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகளின் துயரத்தை பதிவு செய்யும் முயற்சியாக வெளியான இந்த படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. உடன் வெளியான பிரபாஸின் ராதே ஷ்யாம், அக்‌ஷய் குமாரின் பச்சன் பாண்டே உள்ளிட்ட படங்களை வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடர்ந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சிலாகித்ததில், ரூ15 கோடியில் தயாரான தி காஷ்மீர் ஃபைல்ஸ் ரூ350 கோடிக்கும் மேலாக குவித்தது. ஆனால் பிரச்சார படமாகவும், திரிந்த தரவுகளின் அடிப்படையில் உருவானதாகவும் விமர்சன ரீதியில் கண்டனங்களையும் பெற்றது.

இந்த ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஜன.19 முதல் திரையரங்குகளில் மறுவெளியீடு காண்பதாக அதன் தயாரிப்பாளர் பல்லவி ஜோஷி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி ஓராண்டுகூட முடியாத நிலையில், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் மறுவெளியீடுக்கான தேவை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பல்லவி ஜோஷியும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

ஜன.25 அன்று வெளியாகவிருக்கும் ஷாருக் கானின் பதான் படத்துக்கு பதிலடி தரும் வகையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் மறுவெளியீடு செய்யப்படுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பதான் நாயகி தீபிகா படுகோன் காவி பிகினியில் குத்தாட்டம் போட்டதும், தணிக்கையான திரைப்படத்துக்கு மீண்டும் சென்சார் வாரியம் அழுத்தம் கொடுத்ததும், பதான் கதை தொடர்பாகவும்.. பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.

இந்த சூழலில், பதானுக்கு பாலிவுட்டிலிருந்தே பதிலடி தருவதற்காகவும், பதானுக்கான வரவேற்பு மற்றும் ரசிகர் கொண்டாட்டத்தை தணிக்கும் வகையில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் முன்னிறுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பதான் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் இன்னொரு வடிவமாகவும், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை வரவேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in