`ஹேமா கமிஷன் அறிக்கையை உடனே வெளியிடணும்’- மகளிர் ஆணைய தலைவி
ரேகா சர்மா

`ஹேமா கமிஷன் அறிக்கையை உடனே வெளியிடணும்’- மகளிர் ஆணைய தலைவி

ஹேமா கமிஷன் அறிக்கையில் உள்ள விவரங்களை வெளியிட வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க, நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது.

இந்த குழு தனது அறிக்கையை 2019-ம் ஆண்டு டிசம்பரில் அரசிடம் சமர்ப்பித்தது. ஆனாலும் இதுவரை வெளியிடவில்லை. இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்ய மற்றொரு குழுவை அமைத்துள்ளது. அந்த அறிக்கையில் பல முன்னணி நடிகர்கள் பற்றிய ரகசியங்கள் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹேமா கமிஷன் அறிக்கை கேரள முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டபோது.
ஹேமா கமிஷன் அறிக்கை கேரள முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டபோது.

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா, ஹேமா கமிஷன் அறிக்கையில் உள்ள விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அறிக்கையை தாமதப்படுத்துவது கடுமையான புறக்கணிப்புதான் என்று கூறியுள்ள அவர், புகார்தாரர்களின் பெயர்களை வெளியிடாமல் மற்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திலும் குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் மலையாள சினிமா துறையில் பெண்களுக்கான பிரச்சினைகளை தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.