90ஸ் கிட்ஸின் விருப்ப நடிகராக வலம் வந்த பிரபல நடிகரும், இயக்குநருமான சதீஷ் கௌஷிக் உயிரிழந்தது பாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதேவி - அனில் கபூர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த `மிஸ்டர் இந்தியா' உள்ளிட்ட பங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்களை ஈர்த்து 90களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சதீஷ் கௌஷிக். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள சதீஷ் கௌஷிக், பிரபல இயக்குநராகவும் வலம் வந்துள்ளார்.
ஸ்ரீதேவியை வைத்து தன் முதல் படமான `ரூப் கி ராணி சோரன் கா ராஜா' எனும் படத்தை இயக்கினார். தொடர்ந்து தயாரிப்பாளராகவும் வலம் வரத் தொடங்கிய சதீஷ் கௌஷிக் பாலா இயக்கிய சேது படத்தை இந்தியில் `தேரே நாம்’ எனும் பெயரில் ரீமேக் செய்தார். சல்மான் கான், பூமிகா நடிப்பில் வெளியான இந்தப் படம் பாலிவுட்டிலும் வெற்றி பெற்ற நிலையில், ஐஃபா, ஃபில்ம் ஃபேர் விருதுகளில் சிறந்த இயக்குநருக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 90 படங்களில் நடித்துள்ள சதீஷ் கௌஷிக், 13 படங்களை இயக்கியுள்ளார். இந்தநிலையில், நேற்றிரவு சதீஷ் கெளஷிக் உயிரிழந்தார். இவரது இழப்பால் கவலையில் ஆழ்ந்துள்ள பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.