‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் கடைகுட்டிச் செல்லம் இந்த ஷிவாத்மிகா. குழந்தை நட்சத்திரமாக அப்பாவின் சில தெலுங்குப் படங்களில் தலைக்காட்டியவர், தமிழில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் நடித்த ‘நித்தம் ஒரு வானம்’ அவரது நடிப்புத் திறனை ரசிகர்களுக்குச் சொல்லியது. “இவ்வளவு ’க்யூட்’டான பெண்ணா!” என்று ரசிகர்களை கிறங்க வைத்த ஷிவாத்மிகா காமதேனுவுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
அம்மா - அப்பா இரண்டு பேருமே நடிகர்கள். நீங்களும் இப்போ நடிகர். உங்களுக்கு முன்பே உங்கள் அக்கா நடிகராகிவிட்டார். நடிகர் குடும்பங்களில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் சினிமாவே வேண்டாம் என இருந்துவிடுவார்கள். ஆனால் நீங்கள்..?
சான்ஸே இல்லை. நானும் இருந்ததில்லை, அக்கா ஷிவானியும் இருந்ததில்லை. சின்ன வயதிலிருந்தே சனி, ஞாயிறு, உள்ளிட்ட விடுமுறை நாட்களில் நாங்கள் இருவரும் அம்மா - அப்பாவுடன் செட்டில் தான் இருப்போம். அப்பா நடித்த பல தெலுங்குப் படங்களை அம்மா தொடர்ந்து டைரக்ட் செய்தார். அந்த வகையில், டைரக்ஷன் டிபார்மென்ட்டையும் சின்ன வயதிலேயே கற்றுக்கொண்டுவிட்டோம்.
டிவியில் அப்பா - அம்மா நடித்த படம் போட்டால் நானும் அக்காவும் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கிவிடுவோம். அப்பாவின் வசன உச்சரிப்பும் நடிப்பும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால், ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்ததும் நடிகர் ராஜசேகராகவோ, அப்பா ராஜசேகராகவோ நடந்துகொள்ளாமல் எங்களின் நண்பராக மாறிவிடுவார். எல்லாவற்றையும் எங்களுடன் டிஸ்கஸ் செய்வார். அம்மாவும் அப்படித்தான். சினிமா உலகம் குறித்து நிறையக் கற்றுக் கொடுப்பார். அம்மாவின் முகத்தில் எப்போதும் ஒரு வைரப் புன்னகை இழையோடிக்கொண்டேயிருக்கும். அதில் கொஞ்சத்தை அம்மாவிடமிருந்து நானும் அக்கா ஷிவானியும் இப்போது கடன் வாங்கிக்கொண்டுவிட்டோம். அவரது திரையுலக அனுபவம் மொத்தமும் எங்களுக்கு இன்றைக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
ஷிவானி - ஷிவாத்மிகா என்று பெயர், தோற்றம் என எல்லாவற்றிலும் நீங்களும் உங்கள் அக்காவும் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்களே?
இரண்டு பேருமே தலா இரண்டு தமிழ்ப் படங்களில், நடித்துவிட்டோம். இன்னும் சில படங்களில் நடித்துவிட்டால் இந்தக் குழப்பம் இருக்காது. அக்கா தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’, ‘அன்பறிவ்’ ஆகிய படங்களில் நடித்துவிட்டார். நான் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் அறிமுகமானேன். அதன்பிறகு ‘நித்தம் ஒரு வானம்’ வெளியானது.
தெலுங்கில் எங்களுக்காக அப்பா, அம்மா இருவரும் கதை கேட்பார்கள். அவர்களுக்கு ஓகே ஆனபிறகு எங்களைக் கேட்கச் சொல்வார்கள். எங்களுக்கும் பிடித்துவிட்டால், இரண்டுபேரில் யார் நடித்தாலும் எங்களுக்கு ஓகே தான் என்று சொல்லும்போதுதான் யார் அந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவெடுப்பதில் அம்மா - அப்பாவுக்கு சங்கடம் வந்திருக்கிறது. அப்போதெல்லாம், “இதில் ஷிவாத்மிகா நடிக்கட்டும்” என்று பிரச்சினையை முடித்திருக்கிறாள் அக்கா. அவளால் நான் 3 தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டேன். அவள் தேவதை மனதுக்காரி.
பீட்டர் இங்கிலீஷும் மீம் லாங்குவேஜும் பேசித் திரியும் இன்றைய 2கே கிட்ஸ் நடுவே, ’நித்தம் ஒரு வானம்’ மீனாட்சி மாதிரியான தேவதைகள் இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
நானே அப்படியொரு பெண்தான். எந்த தலைமுறையில் பிறந்தாலும் நாம் வளரும் சூழ்நிலைதானே நமக்குச் சுபாவங்களைக் கொடுக்கிறது. ‘நித்தம் ஒரு வானம்’ மீனாட்சி கற்பனை என்று நான் நினைக்கவில்லை. அந்த ஸ்கிரிப்டை எழுதிய படத்தின் இயக்குநர் ரா.கார்த்திக் தன் வாழ்க்கையில் சந்தித்த பெண்ணாகவும் இருக்கலாம் அல்லவா?
நிஜ வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அப்பா மீனாட்சியின் அப்பாவைப்போல இறுக்கமானவர் அல்ல. எனது அப்பா ஒரு ஜனநாயகவாதி. “உனக்குப் பிடித்ததை நீ செய். அடிபடு... கற்றுக்கொள். காயங்கள் இல்லாமல் பெரிய தூரங்களைக் கடக்க முடியாது” என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார். மீனாட்சியைப் பற்றி இன்னொன்று. எனக்கு மதுரை மீனாட்சியை ரொம்பவே பிடிக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளைப் பிடிக்கும். என்னால் நன்றாக நடிக்க முடியும் என்று காட்டுவதற்கு இரண்டாவது படத்திலேயே இப்படியொரு கதாபாத்திரம் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்தான்.
உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அல்லது உங்களைப் புரட்டிப்போட்ட ஒரு தருணம் என்று ஏதாவது இருக்கிறதா?
எல்லோருக்கும் தெரிந்ததுதான். கடந்து வந்த கடினமான கோவிட் காலம்தான். இரண்டாவது அலை கொரோனாவில் அப்பா- அம்மா, நான், அக்கா நான்கு பேரும் ஒரே நேரத்தில் கோவிட் தொற்றுக்கு ஆளானோம். அக்காவுக்கும் எனக்கும் 7 நாட்களில் நெகட்டிவ் வந்துவிட்டது. ஆனால், அப்பாவும் அம்மாவும் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அம்மா இரண்டு வார முடிவில் மீண்டுவிட்டார். ஆனால் அப்பா, ஐசியூவில் ஒரு மாதம் கஷ்டப்பட்டார். அந்த நாட்களின் ஒவ்வொரு நிமிடமும் எனது வாழ்க்கையை உண்மையாகவே புரட்டிப்போட்டுவிட்டது. எங்கள் குடும்பம் எல்லோரையும் நேசிக்கக் கூடியது. வாழ்க்கையின் நிலையாமையை கோவிட் இன்னும் தீவிரமாக உணர்த்திவிட்டுப் போனதில் எறும்புகளைக் கூட நேசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நமது அன்பை மற்றவர்களுக்கு எவ்வளவு அதிகமாகக் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்போம்.
தற்போது நடித்து வரும் படங்கள்..?
தமிழில் ஒன்று தெலுங்கில் இரண்டு. மூன்று படங்களுக்குமே இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. விரைவில் அதுபற்றிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். அக்காவும் பிசியாகியிருக்கிறாள். என்னைவிட திறைமைசாலி அவள்.