
அதிக திரையரங்குகளில் திரைப்படம் ரீலிஸாக வேண்டுமென்றால், பெரிய வசூல் நாயகனாக மாற வேண்டும், இங்கே கதை நாயகனுக்கெல்லாம் கல்லாகட்டும் கூட்டம் வராது என இயக்குநரும், நடிகருமான சேரன் தெரிவித்துள்ளார்.
இயக்குநரும், நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் ஓடிடியில் வெளியான நிலையில், இந்த படம் தொடர்பாக ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் எழுப்பிய கேள்விக்கு தனது ஆதங்கத்தை இயக்குநரும், நடிகருமான சேரன் கொட்டியுள்ளார்.
இந்த படம் தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தமாக உள்ளது. பெரிய படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த மாதிரியான படங்களுக்கும் கொடுக்க வேண்டும் என அந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள சேரன், ‘’ஹாஹா... அதுக்கு நம்ம பெரிய வசூல் நாயகனா மாறனும்... இங்கே கதைநாயகனுக்கெல்லாம் கல்லா கட்டும் கூட்டம் வராது தம்பி... சிந்தனை சென்று சேர்கிறதா என பார்ப்போம்... காரில் போனால் என்ன பைக்ல போனா என்ன... போகும் இடம்தான் முக்கியம்...’’ என குறிப்பிட்டுள்ளார்.
நல்ல கதை அம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், சேரனின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், ’’இதே மக்கள்தான் உங்கள் 'ஆட்டோகிராப்' படத்தைக் கூட்டம், கூட்டமாய் வந்து பார்த்தார்கள். அதை மறந்து விடாதீர்கள். மக்களுக்குப் பிடித்தால் வந்து பார்ப்பார்கள். மக்களையும் மற்ற கதாநாயகர்களையும் குறை சொல்லாமல் பழையபடி நல்ல தரமான படத்தை எடுங்கள். மக்கள் ஆதரிப்பார்கள்’’ என சேரனுக்கு எதிராகவும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.