கடலூரில் 'ஜெயிலர்' சூட்டிங்கில் ரஜினி: படையெடுக்கும் ரசிகர் பட்டாளம்

கடலூரில் 'ஜெயிலர்' சூட்டிங்கில் ரஜினி: படையெடுக்கும் ரசிகர் பட்டாளம்

கடலூர் அருகே படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என்பதற்காக அலைமோதி வருகிறார்கள் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின்  படப்பிடிப்பு  தொடங்கி தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன்,  நகைச்சுவை நடிகர் யோகிபாபு  உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.  அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் என்ற கிராமத்தின்  அருகே நடைபெற்று வருகிறது. புதுவை மாநில எல்லையில் இருக்கும் இந்த கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றின் கரையிலும், பாலப்பகுதியிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார். 

தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் நேற்று நடைபெற்ற சண்டைக் காட்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அப்பகுதியில் கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரமாக கூச்சலிட்டனர். அவர்களை நோக்கி ரஜினிகாந்த் கையைசைத்து கும்பிட்டார். ரஜினி ரசிகர்களை ரஜினி பார்த்து கையசைக்கிறார் என்ற தகவல் தெரிந்ததும் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும்,  புதுவை மாநிலத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு படையெடுத்து வருகின்றனர். 

ஒருமுறையாவது ரஜினி தங்களைப் பார்த்து விட மாட்டாரா என்ற ஆர்வத்தில் நாள் முழுவதும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படப்பிடிப்பில் கலந்து கொண்டு இடைவேளை நேரத்தில் ரசிகர்களைப் பார்த்து ரஜினி கையை அசைக்கிறார்.  இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரசிகர்களின் வருகையால், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு தனியார் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கட்டுப்பாடுகள் அதிகம் என்றாலும் தூரத்தில் இருந்தாவது ரஜினிகாந்தை பார்த்துவிடலாம் என்ற ஆசையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் அப்பகுதியில் கூடுகின்றனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு போலீஸார் பெரிதும் திணறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in