`கேப்டன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ஒரு வருட உழைப்பு

`கேப்டன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ஒரு வருட உழைப்பு

``ஆர்யா நடிக்கும் ’கேப்டன்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ஒரு வருடமாக உழைத்திருக்கிறோம்'' என்று அதன் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா, 'கேப்டன்' என்ற படத்தில் நடித்துள்ளார். 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. டி. இமான் இசையமைக்கிறார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில், ஆர்யா கையில் துப்பாக்கியுடன் நிற்பதுபோலவும் பின்பக்கம் வேற்றுக்கிரக உயிரினம் பார்ப்பது போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சக்தி சௌந்தர் ராஜன், ஆர்யா
சக்தி சௌந்தர் ராஜன், ஆர்யா

இதுபற்றி இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூறும்போது, ``இது சயின்ஸ் பிக்சன் படம். இந்த போஸ்டரை ஒரு வருடமாக கடினமாக உழைத்து உருவாக்கி இருக்கிறோம். ஏனென்றால் வேற்றுக்கிரக உயிரினத்தை முற்றிலும் கிராபிக்ஸில் உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்துக்காக, கடந்த வருடம் ஆர்யாவுடன் போட்டோஷூட் செய்தோம். பிறகு அந்த உயிரினத்தை பல்வேறு வகையில் ஓவியங்களாக வரைந்தோம். கடைசியில் ஒன்றை முடிவு செய்து, இந்த போஸ்டரை உருவாக்கினோம். இப்படி ஒரு படத்தை எடுப்பது சவாலானதுதான். ஆர்யா ரிஸ்க் எடுத்து சில காட்சிகளில் நடித்துள்ளார்'' என்றார்.

Related Stories

No stories found.