'ஃபஹத்தின் கண்களுக்காகவே கதாபாத்திரம்’ உருகிய மாரிசெல்வராஜ்!
ஃபஹத்தின் அந்த கண்களுக்காகவே கதாபாத்திரத்தை உருவாக்கியதாக மாரி செல்வராஜ் உருகியுள்ளார்.
நடிகர் ஃபஹத் ஃபாசில் இன்று தனது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தபடி உள்ளனர்.
இந்நிலையில், தமிழில் கடைசியாக அவர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார். அதில் அவரது ரத்தினவேல் கதாபாத்திரம் சாதிய வன்மம் கொண்டவராக சித்தரிக்கப்பட்டு இருந்தது. படம் ஓடிடியில் வெளியான பின்பு இன்னும் அதிக பார்வையாளர்களிடம் கவனம் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் ஃபஹத்தின் அந்த கண்களுக்காகவே அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.
மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர் அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்’ என தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மாரிசெல்வராஜ்.