
பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'ஜெயிலர்', 'லால் சலாம்' படங்களை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் 170 ஆவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அமிதாப்பச்சன், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பல நட்சத்திரங்கள் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்டப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 171-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
'லியோ' படம் வெளியானதற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் 'தலைவர் 141' படத்திற்கான திரைக்கதையை எழுத இருக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் குறித்தான விவரம் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக மலையாளத்தின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் நடிக்க இருக்கிறார்.
தமிழில் 'மொழி', 'கனா கண்டேன்' உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கும் பிருத்விராஜ், தற்போது மலையாளத்தில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பிஸியாக வலம் வருகிறார். இந்த நிலையில் அவர் மீண்டும் தமிழுக்கு ரஜினி படத்தின் மூலமாக வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.