சிறந்த கலைஞர்களுக்கான திரைப்பட விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

சிறந்த கலைஞர்களுக்கான திரைப்பட விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

2009-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை வழங்கப்படாமல் இருந்த தமிழக அரசின் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. நாளை மறுதினம் (செப்.4) சென்னையில் அதற்கான விழா நடைபெறுகிறது.

தமிழ் திரைப்பட கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு அவர்களில் சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரையிலும் வழங்கப்படவில்லை. இடையில் 2015-ம் ஆண்டில் விருதுகளுக்கான தேர்வாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.

2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுக்கான விருதுபெரும் சிறந்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பெயர்களும் 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அத்துடன் விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதேபோல கலைமாமணி விருதுகளும் கடந்த அதிமுக ஆட்சியின் கடைசிவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் ஆட்சிக் காலத்தின் கடைசியில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து திரைப்பட விருதுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் பரிசளிப்பு விழா நடைபெறவில்லை. இதனால் கலைஞர்கள் மிகவும் ஏமாற்றத்தில் இருந்தார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்தநிலையில் இப்போது அந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் 2009-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதற்கான அழைப்பிதழ்கள் விருது பெறும் கலைஞர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. விருதுபெரும் கலைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in