அதற்காகத்தான் சைக்காலஜி படிக்கிறேன்...

‘தி வாரியர்’ கீர்த்தி ஷெட்டி பேட்டி
அதற்காகத்தான் சைக்காலஜி படிக்கிறேன்...

நானி நடிப்பில் உருவான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படம் தமிழிலும் வெளியானபோது ‘யார் இந்த சிரிப்பழகி?’ என்று கீர்த்தி ஷெட்டியைப் பார்த்து புருவம் உயர்த்தினார்கள் தமிழ் ரசிகர்கள். அடுத்து இயக்குநர் லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தின் நாயகியாக நேரடியாகவே தமிழ் ரசிகர்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார். தற்போது தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் தமிழ்ப் படம், பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’ ஆகிய படங்களின் நாயகி ஆகியிருக்கும் கீர்த்தி ஷெட்டி, காமதேனு மின்னிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...

‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தைவிட, ‘புல்லட்’ பாடல் வழியாக உங்களுக்குக் கிடைத்த புகழ்தான் அதிகம் என்பது சரிதானா?

உண்மைதான்..! ‘தி வாரியர்’ படத்தின் புல்லட் பாடல், விசில் பாடல் இரண்டுமே ஹிட்தான். ஆனால், புல்லட் பாடலுக்கான ரெஸ்பான்ஸ்தான் செம்ம. கமல் சாரின் ‘பத்தல பத்தல’ விக்ரம் படப் பாடலின் இசைக்கு ஆட்டம் ஆடி சோஷியல் மீடியாவில் எவ்வளவு பேர் ஷார்ட் வீடியோ போடுகிறார்களோ… அதற்குக் கொஞ்சமும் குறையாமல் புல்லட் பாடலுக்கும் ஆடி வீடியோ போடுகிறார்கள். படம் வெளியான பிறகு நானே அந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

டான்ஸ்னா ரொம்பப் பிடிக்குமோ?

சிறு வயதிலிருந்தே டான்ஸ்தான் எனக்கு தெரஃபி. நான் கொஞ்சம் துறுதுறுவென இருப்பேன். அதனால் என்னை ‘ஹைபராக்டிவ் சைல்ட்’ எனப் புரிந்துகொண்டு டான்ஸ் பயிற்சியில் போட்டுவிட்டார்கள். அதுவே எனக்கு நன்மையாக முடிந்துவிட்டது. ‘புல்லட்’ பாடலில் ஆடும்போது உங்கள் கால்கள் சிக்கிக்கொள்ள வில்லையா என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். பயிற்சி இருந்தால் போதும் யாரும் நன்றாக நடனமாட முடியும். அதேபோல் பள்ளியில் தொடங்கி பேட்மின்டனும் நன்றாக விளையாடுவேன்.

என்னவாக ஆக நினைத்து இப்போது நடிகராக ஆகியிருக்கிறீர்கள்?

ஐந்தாம் வகுப்பு வரை, நான் டாக்டர் ஆகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவேன். அதனால், நான் சொல்வதை நம்புவதுபோல் அப்பாவும் அம்மாவும் அப்போது சிரிப்பார்கள். ஆறாம் வகுப்பிலிருந்து டான்ஸர் ஆக ஆசை வந்தது. பிறகு, பத்தாம் வகுப்பு படிக்கும்போது விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால் மாடல் ஆனேன். மாடல் ஆனபிறகு சினிமா வாய்ப்பு வந்துவிட்டது. ஆனால், இத்தனை சிறிய வயதுக்குள், சினிமா மூலமாக இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. விதியை இப்போது நம்பலாம் எனத் தோன்றுகிறது.

மனிதர்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் சைக்காலஜி படிக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. சைக்காலஜி படிப்பதால், நம்முடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளமுடியும் என்று நம்பினேன். மெடிக்கலாக சைக்காலஜி படிப்பது வேறு. இது தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், தனித்திறன்கள் மேம்பாடு ஆகியவற்றைக் கற்றுத்தரும் டிகிரி. எனக்குப் பிடித்திருக்கிறது.

தெலுங்கில் நீங்கள் அறிமுகமான ‘உப்பண்ணா’வில் விஜய்சேதுபதிக்கு மகளாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

‘பையா’ படத்தில் தொடங்கி தமிழில் எனக்குக் கார்த்தியை ரொம்பவே பிடிக்கும். சூப்பர் ஹிட் அடிக்கும் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவேன். அப்படித்தான் ‘பீட்ஸா’ படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பை முதன் முதலில் பார்த்தேன். பிறகு, ‘விக்ரம் வேதா’வில் அவரது நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். அவருக்கே மகளாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ‘உப்பண்ணா’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் 15 பக்கம் டயலாக் பேசி அவர் முகத்தைப் பார்த்து நடிக்க வேண்டும். நிறைய ரீடேக் வாங்கினேன். அப்போது விஜய்சேதுபதி சார்தான் எனக்கு நிறையச் சொல்லிக்கொடுத்தார்.

சமூக வலைதளங்களில் உங்களைப் போன்ற நட்சத்திரங்களை வைத்து செய்யப்படும் ‘மீம்’கள், ‘ட்ரோல்’களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எல்லாருடைய கருத்துகளையும் எல்லாவிதமான கருத்துகளையும் மதிக்க வேண்டும் என நினைப்பவள்தான் நான். ஆனால், அந்தக் கருத்துகள் நேர்மையாக இருக்க வேண்டும். பாசிட்டீவ் ஆன மீம் ஒன்றை உருவாக்கி மற்றவர்களை சிரிக்க வைப்பது பெரிய திறமை. அதை முதலில் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். எனது பக்கத்தில் வந்து பாசிட்டிவ் மீம் போடுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ‘ரிப்ளை’ செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

நேர்மையான வழியில் புகழைச் சம்பாதித்திருப்பவர்களை வைத்துத் தரக்குறைவாக ‘மீம்’ போடுவது, ‘ட்ரோல்’ செய்வது ஆகியவற்றை நான் ஏற்கவில்லை. ‘ட்ரோல்’ செய்யும் முன், அதை செய்பவர்கள், யாரை ‘வறுக்க’ நினைக்கிறார்களோ அவர்களுடைய இடத்தில் இருந்து பார்த்தால் பிரச்சினையின் தீவிரம் புரியும். அப்படிச் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிடுவதே சரியாக இருக்கும்.

சூர்யா - பாலா கூட்டணியில் கதாநாயகியாக நடிப்பது எப்படியிருக்கிறது?

இவ்வளவு சீக்கிரம் இப்படியொரு வாய்ப்பு அமையும் என்று நினைக்கவில்லை. என்னுடைய கதாபாத்திரம் முற்றிலும் புதுமையான ஒன்று. ‘மீம்’களில் சொல்வதைப்போல பயமுறுத்தும் ஒன்றாக இல்லை. விரைவில் என்னுடைய கதாபாத்திரத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கை எதிர்பார்க்கலாம்.

இதுவரை நீங்கள் நடித்து வெளிவந்துள்ள நான்கு படங்களிலும் பெரும்பாலும் நாயகன் மீதான காதலால் வழிநடத்தப்படும் பெண்ணாகவே வந்திருக்கிறீர்களே..?

உண்மைதான். இப்போதுவரை 6 பாடங்களில் நடித்து முடித்துவிட்டேன். எனது சினிமா கேரியரின் தொடக்கத்தில் இருப்பதால் இதுபோன்ற கதாபாத்திரங்களை இப்போதைக்கு தவிர்க்க முடியாது. இன்னொன்றையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். காதல் காட்சிகளில் நடிப்பது அத்தனை எளிதல்ல. மற்ற காட்சிகளில் நடிப்பதைவிட காதல் காட்சிகளில் நடிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது. நம்முடன் நடிப்பவர்களின் உணர்வுகலந்த நடிப்புடன் நாம் சரியான ‘ரித’மில் இணைந்து நடிக்க வேண்டும். அதை இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ள முயன்று வருகிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in