கே.விஸ்வநாத் சாரின் இயக்கத்தில் நான் நடிக்க மறுத்த கேரக்டர்!

- நடிகை ராதிகா இதுவரை சொல்லாத EXCLUSIVE தகவல்
ராதிகா, கே.விஸ்வநாத், எம்.எஸ்.சுப்புலட்சுமி
ராதிகா, கே.விஸ்வநாத், எம்.எஸ்.சுப்புலட்சுமி

வணிக சமரசங்களையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு, தான் நினைத்த படைப்புகளை மட்டுமே திரையுலகிற்கு வழங்கியவர் இயக்குநர் கே.விஸ்வநாத். தெலுங்கு சினிமாக்கள் மூலமாகத்தான் நமக்கெல்லாம் பரிச்சயம் என்றாலும், அவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து, அவர் மீது அளப்பரிய மரியாதையை ஏற்படுத்தியது.

இயக்குநர் கே.விஸ்வாத், ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். பொதுவாகவே, ஒரு படத்தில் ஆறு பாடல்கள் என்றால், அதில் இரண்டு பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும். ஆனால், கே.விஸ்வநாத், தன் படங்களில் ஏழு பாடல்கள் வைத்தாலும் ஒன்பது பாடல்கள் வைத்தாலும் அத்தனையும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும்.

இவற்றுக்கெல்லாம் மூலகாரணம்... இயல்பாகவே கே.விஸ்வநாத்துக்குள் இருக்கும் சங்கீத ஞானம். சிறு வயதில் இருந்தே பாடல்களை வரிகளாகவும் தாளமாகவும் ராகங்களாகவும் ஸ்வரமாகவும் பிரித்துப்பிரித்து ரசிக்கிற குணம் அவருக்கு உண்டு.

எல்லா இயக்குநர்களுக்கும் பிடித்த நடிகைகளில் ராதிகா முக்கியமானவர். எந்தக் கதாபாத்திரம் தந்தாலும் அதை உயிர்ப்புடன் ஒரு மனுஷியாகவே உலவவிடுவதில் நடிப்பு ராட்சஷி என்றே கொண்டாடப்படுபவர். ரசனையான படைப்புகளைக் கொடுத்த இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கும் ராதிகாவையும் அவரின் அபார நடிப்பையும் ரொம்பவே பிடிக்கும்.

தெலுங்கில் ‘சுவாதி முத்யம்’, ‘சுவாதி கிரணம்’ என்கிற இரண்டு படங்களில் கே.விஸ்வநாத் இயக்கத்தில் நடித்துள்ளார் ராதிகா. ‘சுவாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து)’ படத்தில் கமலுடன் நடித்தார். ‘சுவாதி கிரணம்’ படத்தில் மம்முட்டியுடன் நடித்தார்.

கே.விஸ்வவநாத் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து ‘காமதேனு’விடம் பேசிய ராதிகா, பிரத்யேகமாக சில தகவல்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டார்.

‘’பணத்துக்காகவோ, பெரிய கலெக்‌ஷன் கிடைக்கணுங்கறதுக்காகவோ, ஒருபோதும் படம் பண்ணமாட்டார் கே.விஸ்வநாத் சார். நல்ல படைப்புதான் அவரோட நோக்கம். அதை ஒவ்வொரு காட்சியிலும் வைச்சிருப்பார்.

கதைக்கு என்னென்ன தேவையோ, அதை மட்டுமே கொண்டு வருவார். அதேபோல, படத்தில் வரும் அத்தனை கேரக்டருக்கும் நடிக்கவும் கதைக்குள்ளேயும் வாய்ப்புகள் இருக்கும். இன்றைக்கு ராஜமெளலி சார் மாதிரி பெரிய இயக்குநர்கள், பெரிய பெரிய சாதனைகளையெல்லாம் பண்ணிட்டிருக்காங்க. இதுக்கெல்லாம் அஸ்திவாரம் போட்டவர் கே.விஸ்வநாத் சார்தான்!

’சுவாதி முத்யம்’ படத்தில் நடிக்கும் போது, ரெண்டாவது நாளே முடிவுபண்ணிட்டேன், அவர் சொல்றதை மட்டும் செஞ்சாப்போதும்னு! எல்லாருக்கும் நடிக்கச் சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு காட்சியையும் அவர் விளக்கிட்டு, அப்படியே நடிச்சிக் காண்பிப்பார். நான் அதன்படி செஞ்சி முடிச்சதும்... ‘இந்தக் கேரக்டராவே உன் முகம், கண்ணு, புருவம், நடை எல்லாமே மாறிருச்சு ராதிகா’ன்னு பாராட்டினார். அந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைச்சிச்சு. சிவாஜி சார் ‘டேய் கமல்... ராதாண்ணன் பொண்ணு, உன்னை பல இடங்கள்ல தூக்கிச் சாப்பிட்டுட்டா’ன்னு கமல் சார்கிட்ட சொன்னாராம். கமல் சார் என்கிட்ட சொல்லிச் சொல்லிக் கிண்டல் பண்ணுவார்.

ராஜமுந்திரிலேருந்து ஒண்ணரை மணி நேரம் டிராவல் பண்ணி, ஒரு கிராமத்துல இருக்கற இடத்துல ‘துள்ளித் துள்ளி’ பாட்டு எடுத்தார். கமல் சார் எவ்ளோ பெரிய டான்ஸர்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா, கதைப்படி மூளை வளர்ச்சி இல்லாத கேரக்டர். அதனால, பாட்டுக்கு தப்புத்தப்பா ஸ்டெப் வைச்சு ஆடணும்னு கமல் சார்கிட்ட சொல்லிட்டார்.

அதுமட்டுமில்லாம, விஸ்வநாத் சார் ஆடிக்காட்டினார். என்னை ஆடச்சொன்னார். கமல் சாரை ஆடச்சொன்னார். அப்போ யூனிட்ல இருந்த லைட்மேனைக் கூட விடாம எல்லாரையும் ஆடச் சொன்னார். ‘பாத்துக்கோ கமல். ஒரு இடத்துல கூட உன்னையும் மீறி, உன் நடனத் திறமை இங்கே வந்துடக்கூடாது’ன்னு சொன்னார். கமல் சாரும் பிரமாதம் பண்ணிருப்பார். நானும் அந்தப் பாட்டுக்கு நல்லா நடிச்சதா மொத்த யூனிட்டாரும் பாராட்டினாங்க.

கே.விஸ்வநாத் சார் கூட வொர்க் பண்ணின அனுபவம், எனக்குப் பெரிய பாக்கியம். ரெண்டு படத்துல அவரோட வொர்க் பண்ணிருக்கேன். ஆனா என் வாழ்க்கைல மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன், முட்டாள்தனமா முடிவு எடுத்துட்டேன்னு என் கணவர் சரத்குமார்கிட்ட, நேத்திக்கி (பிப்ரவரி 3ம் தேதி) சொல்லிப் புலம்பிக்கிட்டே இருந்தேன்’’ என்று சொல்லிவிட்டு, அமைதியானார் ராதிகா.

இரண்டு நிமிட ஆசுவாசத்துக்குப் பிறகு, ராதிகா பேசும் போது குரல் கம்மியிருந்தது. சகஜமாகப் பேசும் நிலையில் இல்லை. கொஞ்சம் நிறுத்தி, அழுதுவிடாமல் இருக்க வேண்டுமே... என்கிற கவனத்துடன் பேசத் தொடங்கினார்...

‘’மூணு நாலு வருஷம் இருக்கும். ஒருநாள்... கே.விஸ்வநாத் சார் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் அவர் வீட்டுக்குப் போனேன். ‘ராதிகா... எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவோட கதையை படமா எடுக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. நீதான், எம்.எஸ்.அம்மாவா நடிக்கிறே. கதையெல்லாம் ரெடி பண்ணிட்டேன்’ என்றவர், கதையை மளமளவென சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. எனக்கு பேரதிர்ச்சி... தாங்க முடியாத சந்தோஷம்.

அடுத்தாப்ல... சில நாள் கழிச்சு போன் பண்ணினார் விஸ்வநாத் சார். ‘மோகன்லால், பிரகாஷ்ராஜ் நடிக்கிறாங்க. பேசிட்டேன். ராஜாதான் (இளையராஜா) மியூஸிக். இன்னும் கதையை ஷார்ப் பண்ணிட்டேன். நீ டேட் கொடுத்தா ஆரம்பிச்சிடலாம்’னு உற்சாகமா சொன்னார். அடுத்தாப்ல ரெண்டு மூணு மாசம் கழிச்சு நான் அவருக்கு போன் பண்ணினேன். ‘மன்னிக்கணும் சார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா எப்பேர்ப்பட்டவங்க. அவங்களைப் போல என்னால நடிக்கமுடியுமானு யோசிக்கக் கூட முடியல. பயமா இருக்கு. எம் மேலயே எனக்கு நம்பிக்கை இல்ல சார். என்னை மன்னிச்சிருங்க சார்... நான் இந்தப் படத்துல நடிக்கலை சார்’னு சொல்லிட்டேன். அவர் அமைதியாக் கேட்டுக்கிட்டு விட்டுட்டார்.

கடந்த அஞ்சு மாசத்துக்கு முன்னாடி அவர் வீட்டுக்குப் போனேன். அவரைப் பாத்து நலம் விசாரிச்சேன். ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டேன். சாரோட மனைவி, ‘என்ன ராதிகா... எம்.எஸ். அம்மா கதைல நடிக்கமுடியாதுன்னு சொல்லிட்டீங்களாம். அதையே சொல்லிச் சொல்லிப் புலம்பிக்கிட்டே இருக்காரு. ‘ராதிகாதான் சரியா இருக்கும். அவ முடியாதுன்னுட்டா, இந்தப் படமே எடுக்கத்தேவையே இல்ல’ன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்காரு’ன்னு சொன்னாங்க. எனக்கு ஒருமாதிரியா இருந்துச்சு.

கொஞ்ச நேரம் பேசிட்டு, கிளம்பும்போது, ‘ராதிகா... ஒரு அற்புதமான படைப்பை நானும் மிஸ் பண்றேன். நீயும் மிஸ் பண்ணிட்டே’ன்னு சொல்லி தலைல கைவைச்சு ஆசீர்வாதம் பண்ணினார்.

கே.விஸ்வநாத்துக்கு அஞ்சலி...
கே.விஸ்வநாத்துக்கு அஞ்சலி...

இப்போ கே.விஸ்வநாத் சார் நம்ம கூட இல்ல. அவருக்கு அஞ்சலி செலுத்தப் போயிட்டு நைட்டுதான் வந்தேன். கே.விஸ்வநாத் சார் ஆசைப்பட்ட எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா கதைல நான் நடிக்க ஓகே சொல்லிருக்கலாமோ, நடிச்சிருக்கலாமோன்னு இப்ப யோசிக்கிறேன். வேதனை தாங்க முடியல. பிரமாதமான வாய்ப்பையும் அற்புதமான இயக்குநரோட மூணாவது படத்துல வொர்க் பண்ற சான்ஸையும் மிஸ் பண்ணிட்டேன்னு தூக்கமே இல்ல எனக்கு’’ என்று சொல்லிவிட்டு மெல்லிய விசும்பலுடன் முடித்துக் கொண்டார் ராதிகா.

கே.விஸ்வநாத் இயக்கத்தில், மோகன்லால், ராதிகா, பிரகாஷ்ராஜ் நடிக்க, இளையராஜாவின் இசையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் காவியத்தை நாங்களும் தான் மிஸ் பண்ணிவிட்டோம் மேடம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in