'ராதே ஷ்யாம்' படத்திற்கான விதி அதுதான்: தோல்வி குறித்து பூஜா

'ராதே ஷ்யாம்' படத்திற்கான விதி அதுதான்: தோல்வி குறித்து பூஜா

'ராதே ஷ்யாம்' படத்தின் தோல்வி குறித்து நடிகை பூஜா ஹெக்டே மனம் திறந்துள்ளார்.

'பாகுபலி' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸின் படங்களுக்கு ரசிகர்களிடையே தனி எதிர்ப்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால் அவர் அதை எப்படி தக்க வைத்திருக்கிறார் என்பது இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில், 'பாகுபலி' படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான 'சாகோ', 'ராதே ஷ்யாம்' ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக படுதோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிலும் குறிப்பாக 'ராதே ஷ்யாம்'. காலத்துக்கும் காதலுக்கும் இடையில் சிக்கும் பூஜா- பிரபாஸின் காதல் தான் படம். கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்த மாதம் 11-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியது. படத்திற்கான புரமோஷன்களும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. விமர்சன ரீதியாக படம் மோசமான வரவேற்பையே பெற்றது. இதனையடுத்து தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் 'ராதே ஷ்யாம்' படத்தின் தோல்வி குறித்து அந்த படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே மனம் திறந்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, 'ஒவ்வொரு படத்திற்கும் ஒரு விதி இருக்கும். அதுபோலதான் 'ராதே ஷ்யாம்' திரைப்படத்திற்கும். ஆனால், இந்த படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என எனது நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன.

சில படங்கள் உங்களுக்கு சுமாராக இருக்கும். ஆனால், பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்திருக்கும். வேறு சில படங்கள் சூப்பராக இருக்கும். ஆனால், பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் சுமாராக இருக்கும். அப்படிதான் ஒவ்வொரு படங்களுக்கும் ஒவ்வொரு விதி இருக்கிறது. அது தான் 'ராதே ஷ்யாம்' திரைப்படத்திற்கும் நடந்திருக்கிறது' என்று பேசியிருக்கிறார் பூஜா.

நடிகர் விஜய்யுடன் இவர் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, 'விஜய் பயங்கர கூல்' என பதில் அளித்துள்ளார் பூஜா. 'அரபிக்குத்து' பாடலுக்கு பிறகு இப்போது 'ஜாலியோ ஜிம்கானா' இரண்டாவது பாடல் 'பீஸ்ட்' திரைப்படத்தில் இருந்து வெளியாகி இருக்கிறது.

தெலுங்கில் மகேஷ் பாபு, ராம் சரண், சிரஞ்சீவி என முன்னணி கதாநாயகர்களுடன் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் பூஜா தமிழில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு 'பீஸ்ட்' படம் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in