விரைவில் வெற்றி விழா: ‘நானே வருவேன்’ படக்குழுவினருக்குத் தலா ரூ.1 லட்சம்!

விரைவில் வெற்றி விழா: ‘நானே வருவேன்’ படக்குழுவினருக்குத் தலா ரூ.1 லட்சம்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த ‘நானே வருவேன்’ படம் வெற்றியடைந்திருக்கும் நிலையில், இப்படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவுசெய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2011-ல் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்துக்குப் பின்னர் செல்வராகவனும் தனுஷும் இணைந்து உருவாக்கிய படம் ‘நானே வருவேன்’. திகில் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவான இந்தப் படத்தின் கதையை தனுஷ் எழுதியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாளே ‘நானே வருவேன்’ வெளியானது. எனினும் பிரம்மாண்டமாக உருவான ‘பொன்னியின் செல்வன் -1’ திரைப்படத்துக்குக் கிடைத்த அபார வரவேற்பால் ‘நானே வருவேன்’ பெரிதாக ஈர்க்கவில்லை. இப்படத்துக்குப் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களே வந்தன. இதனால், இப்படம் ஒரு தோல்விப் படம் என்றே பேசப்பட்டது.

அதேசமயம், ‘பொன்னியின் செல்வன் -1’ படத்துடன் ஒப்பிட முடியாவிட்டாலும் ‘நானே வருவேன்’ படம் கணிசமான வெற்றி பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. உலகம் முழுவதும் ஏறத்தாழ 40 கோடி ரூபாய் அளவுக்கு இப்படம் வசூல் செய்திருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா மிக விரைவில் நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் கொடுக்க கலைப்புலி தாணு முடிவெடுத்திருக்கிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in