உலக அளவில் இந்திய திரையுலகை எடுத்துச் சென்ற பிரதமர் மோடிக்கு நன்றி: அக்‌ஷய் குமார்

உலக அளவில் இந்திய திரையுலகை எடுத்துச் சென்ற பிரதமர் மோடிக்கு நன்றி: அக்‌ஷய் குமார்

"உலக அளவில் இந்திய திரைப்படத் துறையை இவ்வளவு பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி" என்று பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அக்‌ஷய் குமார், "இந்திய சினிமா இப்போது சர்வதேச அரங்கில் பெரிய அளவில் முன்னேறி வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா கவுரவ நாடு' என்ற அந்தஸ்துடன் சிறப்பிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணலில் பேசிய அவர்," இந்தியக் குழுவின் ஒரு பகுதியாக பிரான்ஸில் நடந்த உலகளாவிய கேன்ஸ் திருவிழாவின் தொடக்க நாளில் சிவப்பு கம்பளத்தில் நடப்பது தனக்கு ஒரு சிறப்பு தருணமாக இருந்திருக்கும்" என்று தெரிவித்தார். "ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக பிரான்ஸில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவில்லை" என அவர் கூறினார்

இது தொடர்பாக பேசிய அவர், “ என் வாழ்க்கையில் கேன்ஸ் செல்ல எனக்கு முதல்முறையாக அழைப்பு வந்தது. இதற்கு முன்பு யாரும் என்னை அழைக்கவில்லை, ஆனால் என்னால் போக முடியவில்லை. கேன்ஸ் செல்லக்கூடிய அளவிற்கான படங்களை நான் செய்யாமல் இருக்கலாம், இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை” என்று அவர் கூறினார்.

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கடந்த மாதம் கேன்ஸ் 2022 விழாவில் சிவப்பு கம்பளத்தில் இந்திய திரைப்பட குழுவை வழிநடத்தி அழைத்து சென்றார். மொழியியல், கலாச்சாரம் மற்றும் பிராந்திய பன்முகத்தன்மை ஆகியவற்றின் 'உலகின் உள்ளடக்க மையம் இந்தியா' என இந்திய சினிமாவை கேன்ஸ் திரைப்பட விழா காட்சிப்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோடியும் கேன்ஸில் இந்தியாவின் கவுரவத்திற்காக பெருமிதம் தெரிவித்தார். உலகின் உள்ளடக்க மையமாக மாறுவதற்கான மகத்தான ஆற்றலை இந்திய சினிமா உண்மையிலேயே கொண்டுள்ளது என்றும், திரைப்படத் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான முயற்சிகளில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில், 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னர் பிருத்விராஜின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘பிருத்விராஜ்’ என்ற திரைப்படம் அக்‌ஷய் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in