நடிகர் திலகமும் பெருமாள் முதலியார் வீட்டு சர்க்கரைப் பொங்கலும்..!

பெருமாள் முதலியாருடன் சிவாஜி கணேசன்
பெருமாள் முதலியாருடன் சிவாஜி கணேசன்

வாழ்வில் எவருமே சுயம்பு இல்லை. எவர் மூலமாகவோ ஏதேனும் ஒரு வடிவத்தில், ஒரு வழியில், நாம் வெளிப்படுவதற்கும், இன்றைய நம் வாழ்க்கை நன்றாக இருப்பதற்குமானவர்கள் என நம் நன்றிக்கு உரியவர்கள் இருக்கிறார்கள்.

வள்ளுவர் காலத்திலும் நன்றி மறந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் நன்றி குறித்து குறளில் பலவிதமாகக் குறிப்பிட்டு நமக்கு உணர்த்தியுள்ளார். நன்றி மறக்காமல் இருப்பதுதான் மனித குணம் என்பார்கள். இந்தக் காலத்தில் நன்றியுணர்வுடன் இருப்பதும் அரிது; மனிதர்களும் அரிதாகிப் போனார்கள். ஆனால், நன்றியை ஏதோவொரு வகையில் சொல்லிக்கொண்டே இருந்தவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

ஏவி.எம். நிறுவனமும் பெருமாள் முதலியாரின் நேஷனல் பிக்சர்ஸும் இணைந்து 1952-ல் ‘பராசக்தி’ படத்தைத் தயாரித்தது. சிவாஜியின் முதல் படம். கருணாநிதியின் வசனத்தில் வந்த படம். மிகப்பெரிய தாக்கத்தை, தமிழகத்திலும் தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் ஏற்படுத்திய படம். ஆனால், 20 நாட்கள் மட்டுமே படத்தை எடுத்திருந்த நிலையில், ஏவி.மெய்யப்பச் செட்டியார், படத்தைப் போட்டுப் பார்க்க, பெருமாள் முதலியாரை அழைத்தார்.

‘’இந்தப் பையன் நோஞ்சானா இருக்கானே. இவன் வேணாம். இவனுக்குப் பதிலா வேற யாரையாவது போடுங்க’’ என்று சொல்லிவிட்டார் ஏவி.எம். பெருமாள் முதலியார் நம்பிக்கையுடன் தெளிவாகச் சொன்னார். ஒருகட்டத்தில், இணைந்து தயாரிப்பதிலேயே சிக்கல் நீடித்தது. இறுதியாக, ‘’இந்தப் பையன் தான் நடிப்பான் செட்டியார். இவனை மாத்துறதா இல்ல. நல்லா நடிக்கிறான். பெரியாளா வரப்போறான்னு தோணுது. ஒருவேளை படம் தோல்வி அடைஞ்சா, அதை நான் ஏத்துக்கறேன்’’ என்று பெருமாள் முதலியார் மெய்யப்பச் செட்டியாரிடம் உறுதியும் தீர்மானமுமாகச் சொன்னார். பிறகு, போகப்போக, சிவாஜி சதை போடுவதற்கு உகந்த உணவுகளைக் கொடுத்து தேற்றினார்கள். அதேபோல், படத்தின் பாதியிலேயே சிவாஜியின் நடிப்பைக் கண்டு அசந்துபோனார் செட்டியார்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே, முதல் படத்திலேயே நாயகன் பெரிய அளவில் பேசப்பட்டதுதான் ‘பராசக்தி’க்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. பிறகு வரிசையாகப் படங்கள் வந்தன. விதம்விதமான கதாபாத்திரங்களில் சிவாஜி கலக்கினார். நடிப்பென்றாலே சிவாஜி எனப் பேரெடுத்தார். நடிப்பில் எவரும் தொடமுடியாத உச்சம் தொட்டார். அவர் நடிக்காத வேடமே இல்லை. அவர் போல் ஸ்டைல் நடிப்பைக் கொடுப்பவர் எவருமில்லை என்றெல்லாம் கொண்டாடினோம். இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

மனைவி மீனாட்சியம்மாளுடன் பெருமாள் முதலியார்
மனைவி மீனாட்சியம்மாளுடன் பெருமாள் முதலியார்

‘நம்முடைய வளர்ச்சிக்கு பெருமாள் முதலியாரே முழு, முதல் காரணம்’ என்பதாக உணர்ந்த சிவாஜி கணேசன், அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நன்றி சொல்லிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு பொங்கலின் போதும். குடும்ப சகிதமாக, குடும்பத்தார் சூழ, பெருமாள் முதலியார் வீட்டுக்குச் சென்று, பழங்கள், வெற்றிலை பாக்கு, பட்டு வேஷ்டி, சட்டை - பட்டுப் புடவை என கொடுத்து ஆசி பெற்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

அந்தக் காலம் தொடங்கி சிவாஜி, கமலாம்மாள், பிரபு தம்பதி, ராம்குமார் தம்பதி, சிவாஜியின் மகள், மருமகன், பேரக்குழந்தைகள் சகிதமாக சென்னையில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்குச் சென்று பொங்கல் சீர் போல் பொருட்களையும் துணிகளையும் வழங்கி ஆசி பெற்றுக்கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டார்.

’’ஆமாம்... அப்பா சிவாஜி இருக்கும்போது எல்லோருமே கிளம்பி விடுவோம். அங்கே போய் பெருமாள் முதலியாருக்கு பொங்கலுக்கான துணிமணிகளையும் ஸ்வீட்ஸ்களையும் கொடுத்து, நமஸ்காரம் பண்ணிக்குவோம். 1978-ம் வருஷம், பெருமாள் முதலியார் இறந்துட்டாரு. அதுக்குப் பிறகு, முதலியாரோட மனைவி மீனாட்சியம்மா சொந்த ஊரான காட்பாடிக்கே போயிட்டாங்க. நாங்களும் வருஷா வருஷம், எல்லாருமா கிளம்பி, மீனாட்சியம்மாவைப் போய்ப் பார்ப்போம்.

அப்புறம் அப்பா காலமானாங்க. அப்பவும் அம்மாவோட போய் அவங்களுக்கு அப்பா எப்படிலாம் மரியாதை செஞ்சாரோ, அதேமாதிரியே தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருந்தோம். அவங்க வீட்டுக்குப் போயிட்டு, பொங்கல் சீர் மாதிரி பொருட்களையெல்லாம் கொடுத்துட்டு, அவங்க வீட்ல சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு வந்துட்டுதான், நம்ம வீட்ல பொங்கல் கொண்டாடுறதை அப்பாவே வழக்கமா வைச்சிருந்ந்தார்.

அப்பா மேலயும் அம்மா மேலயும் பெருமாள் முதலியாருக்கும் மீனாட்சியம்மாவுக்கும் அப்படியொரு அன்பு. நாங்க சின்னப் பசங்களா இருக்கும்போது போனா, எங்களைக் கொஞ்சி, எங்க கூட விளையாடுவாங்க. மீனாட்சியம்மா இருந்த வரைக்கும் நான், பிரபுன்னு குடும்பத்துல இருக்கற மொத்தபேரும் போய் பாத்துட்டு வணங்கிட்டு வருவோம். மூணு வருஷத்துக்கு முன்னாடி மீனாட்சியம்மா இறந்துட்டாங்க. அப்பா நன்றியுணர்வோட செய்ய ஆரம்பிச்சார். அப்பாவுக்குப் பிறகு அம்மா தொடர்ந்தாங்க. பெருமாள் முதலியார் இறந்த பிறகும் கூட நாப்பது வருஷத்துக்கு மேலே தொடர்ந்து பொங்கல் வணக்கத்தைச் சொல்லிக்கிட்டேதான் இருந்தோம். அப்பா, எப்பவுமே இப்படித்தான். நன்றியை ஒருபோதும் மறக்கவே மாட்டார்’’ என்று நடிகர்திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் நெகிழ்ச்சியுடன் அப்பா குறித்தும் பெருமாள் முதலியார் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

1952-ம் ஆண்டு வெளியானது ‘பராசக்தி’. படம் வெளியாகி 70 ஆண்டுகளாகின்றன. அந்தக் காலத்தில் தொடங்கிய நன்றியுணர்வுடன் கூடிய பெருமாள் முதலியாருக்கான பொங்கல் சீர், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வரை, தலைமுறை கடந்தும் தொடர்ந்திருக்கிறது என்பதுதான், சிவாஜி வாழ்ந்து காட்டிய குணம்; ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று படத்தில் பாடி நடித்தவர், நிஜத்தில் வாழ்ந்தே காட்டிவிட்டார், தன் பிள்ளைகளுக்கும் இந்தத் தமிழகத்துக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in