நடிகை ரகுல்பிரீத் சிங் படத்துக்கு எதிராக போலீஸில் அடுத்தடுத்து புகார்

நடிகை ரகுல்பிரீத் சிங் படத்துக்கு எதிராக போலீஸில் அடுத்தடுத்து புகார்

மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, நடிகை ரகுல்பிரீத் சிங் நடித்துள்ள படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தி நடிகர் அஜய் தேவ்கன், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தேங்க் காட்’. இந்திரகுமார் இயக்கியுள்ள இந்தப் படம், அடுத்த மாதம் 24-ம் தேதி வெளியாகிறது. டி-சீரிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், கோட் சூட் அணிந்து நவீன சித்திரக்குப்தனாக அஜய் தேவ்கன் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் வரும் காட்சியும் பேசும் வசனங்களும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்து கடவுளான சித்திரக்குப்தனை கோட் சூட் அணிந்து சித்தரித்திருப்பது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்று ஜான்பூர் வழக்கறிஞர் ஹிமன்சு ஸ்ரீவஸ்தவா என்பவர் ஏற்கெனவே வழக்குத் தொடர்ந்திருந்தார். கர்நாடகாவிலும் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த சித்திரக்குப்தனின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படும் காயஸ்தர் சமூகத்தினர் இந்தப் படத்துக்கு எதிராக, நாகல்கஞ்ச் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

படத்தின் ஹீரோ நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் தயாரிப்பாளர் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில், அரைகுறை ஆடையணிந்த பெண்களின் முன், சித்திரக்குப்தனை நவீன உடையணிந்து காண்பித்திருப்பது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in