‘வாரிசு’ ரசிகர்கள் மகிழ்ச்சி: மீண்டும் நெகிழ்ச்சியில் கண் கலங்கிய தமன்!

விஜய் - தமன்
விஜய் - தமன்

வாரிசு திரைப்படத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பால் திக்குமுக்காடிய இசையமைப்பாளர் தமன், கண்கலங்க நெகிழ்ந்திருக்கிறார்.

பொங்கல் வெளியீடாக விஜய் நடித்த வாரிசு திரைப்படம், இன்று அதிகாலை முதல் திரையங்குகளின் சிறப்பு காட்சிகளில் திமிலோகப்பட்டு வருகிறது. முதல் நாள் முதல் காட்சி என்ற பெயரில் 1 மணி மற்றும் 4 மணி சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் அரங்குகொள்ளாது ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

சென்னை திரையரங்கு ஒன்றில் இவ்வாறான அதிகாலை காட்சிக்கு, ரசிகர்களுடன் சேர்ந்து வாரிசு திரைப்படக் குழுவினரும் கண்டு ரசித்தனர். வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் இவ்வாறு கலந்திருந்தனர். திரைப்படம் நெடுக, கைத்தட்டல், விசில் என விஜய் ரசிகர்கள் அளித்த வரவேற்பினை படக்குழுவினரும் உடனிருந்து ரசித்தனர்.

தங்களுடன் வாரிசு படக்குழுவும் படம் பார்த்ததை, திரைப்படத்தின் நிறைவாக ரசிகர்கள் கண்டுகொண்டனர். இதனையடுத்து தங்களது மகிழ்ச்சியை பறைசாற்றும் வகையில் படக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தனர். திரைப்படம் நெடுகிலும் ரசிகர்களின் கொண்டாட்டம், நிறைவிலும் பாராட்டு என குவிந்த ரசிக வரவேற்பு கண்டு இசையமைப்பாளர் தமன் கண்கள் கலங்கி விட்டார்.

வாரிசு திரைப்படத்துக்கு இசை தமன் என்று முடிவானபோது, பொதுவெளியில் விஜய் ரசிகர்களின் தூற்றலுக்கும் அவர் ஆளானார். ஒரு மாஸ் ஹீரோவுக்கான எதிர்பார்ப்பை தமனால் நிறைவு செய்ய முடியுமா என்ற கேள்வியை அவர்கள் முன்வைத்தனர். இசையமைப்பாளர் தமனும் பல இடங்களில் நேரிடையாகவே இந்த கேள்வியை எதிர்கொண்டதாக தெரிவித்தார். அவருடைய மகனே கூட, ’விஜய் படத்தின் பாடல்கள் ஹிட்டாகாது போனால் என்னுடைய நண்பர்கள் என்னை திட்டுவார்கள்’ என்று கூறியதாக தமன் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப பரிதவிப்புடனும், தன்னுடைய பாணியை கைவிடாதும் தமன் இசையமைத்த பாடல்கள் ஹிட்டடிக்கத் தொடங்கின. ’ரஞ்சிதமே..’ உள்ளிட்ட பாடல்களை விஜய் ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்தனர். இருந்தபோதும் படத்தின் வெற்றியே இசைக்கும் அங்கீகாரம் சேர்க்கும் என்பதால், தமன் பரிதவிப்புடனே காத்திருந்தார். முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களின் வரவேற்பை அருகிலிருந்து பார்த்ததும், தமனின் ஐயங்கள் பறந்து போயின.

இவற்றுக்கு அப்பால், தனிப்பட்ட வகையிலும் வாரிசு திரைப்படம் தன்னை கண்கலங்க வைத்ததாக நேற்றே பதிவிட்டிருந்தார் தமன். விஜய்க்கான அந்த பதிவில், ‘ வாரிசு திரைப்படம் என குடும்ப படம் அண்ணா. என் நெஞ்சுக்கு நெருக்கமானதும் கூட. படத்தின் உணர்வுபூர்வமான பல காட்சிகளில் அழுது விட்டேன் அண்ணா. கண்ணீர் விலை மதிப்பில்லாதது” என்ற தமன், வாரிசு வாய்ப்புக்காக நன்றியும் தெரிவித்திருந்தார். தமனின் இந்த பதிவு விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.

இந்த நிலையில் மற்றுமொரு முறை வாரிசு படம் பார்த்து தமன் கண்கலங்கியுள்ளார். படத்தின் கதை பாதித்ததன் தனிப்பட்ட காரணங்களோடு, ரசிகர்களின் வரவேற்பும் சேர்ந்துகொள்ள, மனநிறைவும், நெகிழ்ச்சியுமாக தமன் இரண்டாம் முறையாக கண்கலங்கினார். அவரை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் சமாதானப்படுத்தினர். இந்த வீடியோ பதிவை திரையரங்கு நிறுவனம் சமூக ஊடகங்களில் வெளியிட, விஜய் ரசிகர்கள் அவற்றையும் அதிகம் பகிர்ந்து வாரிசு திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in