
'வாரிசு' படம் வெளியாவதை ஒட்டி, 'தளபதி 67' அப்டேட் ஏதும் கொடுக்காமல் இருந்தோம். தற்போது படம் வெளியாகிவிட்டது, இன்னும் 10 நாட்களில் 'தளபதி 67' அப்டேட் எதிர்பார்க்கலாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோவை வருமானவரித்துறை சார்பில் துடியலூர் பகுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அவருக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது.., "நாம் செலுத்தும் வரி எங்கு செல்கிறது என தெரிந்தால் அதை சுமையாக பார்க்காமல் மகிழ்ச்சியாக செலுத்துவோம். எனவே அது குறித்து விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 'வாரிசு' படம் வெளியாவதை ஒட்டி, 'தளபதி 67' அப்டேட் ஏதும் கொடுக்காமல் இருந்தோம். தற்போது படம் வெளியாகிவிட்டது, இன்னும் 10 நாட்களில் 'தளபதி 67' அப்டேட் எதிர்பார்க்கலாம். அதன் தொடர்ச்சியாக அப்டேட்கள் வெளியாகும், தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சினிமாவில் அனைத்து படங்களும் ஓட வேண்டும், எல்லா ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழ்நாட்டை “தமிழ்நாடு” என்று அழைப்பதையே விரும்புகிறேன்.
படம் வெளியாகும் கொண்டாட்டங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்க்க வேண்டும். ரசிகர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். உயிரை விடும் அளவிற்கு சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உயிரிழக்கும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை" என்று அவர் பேசினார்.