`தளபதி 66 படம் பற்றி இப்போது பேச பயமா இருக்குது'- இயக்குநர் வம்சி

விஜய், ராஷ்மிகா
விஜய், ராஷ்மிகா

’தளபதி 66’ கண்டிப்பாக சிறந்த படமாக இருக்கும் என்று அதன் இயக்குநர் வம்சி பைடிபள்ளி தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படம், கடந்த 13-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ள இந்தப் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இவர் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான, ’தோழா’ படத்தை இயக்கியவர்.

’விஜய் 66’ படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

வம்சி பைடிபள்ளி
வம்சி பைடிபள்ளி

இந்தப் படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு சென்னையில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வம்சி பைடிபள்ளியிடம் படம் பற்றிய தகவல் கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறும்போது, ``இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். படம் பற்றி இப்போது பேச பயமாக இருக்கிறது. படம் பற்றி ஏதும் சொல்லமாட்டேன். முதல் ஷெட்யூல் இப்போதுதான் முடிந்திருக்கிறது. அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது. இது கண்டிப்பாக சிறந்த படமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறேன்’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in