சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்: படப்பிடிப்புகள் நாளை முதல் தொடங்கும்!

சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்: படப்பிடிப்புகள் நாளை முதல் தொடங்கும்!

தெலுங்கு சினிமா தொழிலாளர்கள், தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். நாளை (ஜூன் 24) முதல் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க இருக்கிறது.

சினிமா தொழிலாளர்களுக்கு மூன்று வருடத்துக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கரோனா காரணமாக கடந்த 4 வருடங்களாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு ஊதியம் மாற்றி அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஊதிய உயர்வு கோரி, 24 அமைப்புகளைக் கொண்ட தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

தங்கள் கோரிக்கைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலளிக்காததால், போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஊதிய உயர்வு, முடிவுக்கு வரும்வரை படப்பிடிப்புகளில் பங்கேற்க மாட்டோம் என்றும் திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் அனில் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

புதன்கிழமை (ஜூன் 22) முதல் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் ஹைதராபாத்தில் நடந்து வந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே தெலங்கானா அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ் ஆலோசனையின் பேரில் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தொழிலாளர் அமைப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சுமூக தீர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு பரிசீலித்து முடிவெடுக்கும் என்றும், இதனால் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல படப்பிடிப்புகளில் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 25 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in