படங்கள் ஓடாத நிலையில் ஹீரோக்களுக்குப் பல கோடி சம்பளம்: தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் நிறுத்தம்

படங்கள் ஓடாத நிலையில் ஹீரோக்களுக்குப் பல கோடி சம்பளம்: தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் நிறுத்தம்

தெலுங்கு சினிமாவில் ஹீரோக்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பேசி தீர்வு காண்பதற்காக, இன்று முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கரோனாவுக்கு பிறகு சினிமாதுறை கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. 'ஆர்ஆர்ஆர்', 'புஷ்பா', 'கேஜிஎஃப்' போன்ற மெகா பட்ஜெட் படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி வசூலை குவித்தன. அதே நேரம் பல படங்கள் ஓடாததால், தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். தெலுங்கு சினிமாவில் ஹீரோக்களின் சம்பளத்தை உயர்த்தியது, தொழிலாளர்கள் சம்பளம், படப்பிடிப்புச் செலவுகள் அதிகரிப்பு, விபிஎப் கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

படங்கள் ஓடாத நிலையில் ஹீரோக்கள் பல கோடிகளில் சம்பளத்தை அதிகரித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு படங்கள் வெளியான குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகே அந்தப் படங்களை, ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்க்கப்படாத இந்தப் பிரச்சினைகள் பற்றி பேசி முடிவெடுக்க இன்று (ஆகஸ்ட் 1) முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகின்றன.

கோதா பாசி ரெட்டி
கோதா பாசி ரெட்டி

இதுபற்றி தெலுங்கு பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோதா பாசி ரெட்டி கூறுகையில், " தெலுங்கு சினிமாத் துறைக்கு அச்சுறுத்தலாக உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசி முடிவெடுக்க இருக்கிறோம். அதுவரை படப்பிடிப்புகளை நிறுத்தியிருக்கிறோம். விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்கள் தொடர்ந்து செயல்படும்" என்றார்.

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ கூறும்போது, " சினிமா துறையில் உள்ள 24 அமைப்புகளையும் சேர்ந்த தொழிலாளர்களின் ஊதிய மாற்றம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். தொழிலாளர்களின் நீண்ட கால பிரச்சினைக்கும் மற்றப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in