
ஊதிய உயர்வு கோரி தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
கரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சினிமா துறை, கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக இயங்கி வருகிறது. பான் இந்தியா முறையில் வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் வசூலைக் குவித்துள்ளன. தமிழிலும் டான், விக்ரம் உட்பட சில படங்கள் வசூலைக் குவித்துள்ளன.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி, நாளை முதல் (ஜூன் 22) போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். சினிமா தொழிலாளர்களுக்கு மூன்று வருடத்துக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கரோனா காரணமாக கடந்த 4 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் ஊதியம் மாற்றி அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஊதிய உயர்வு கோரி, 24 அமைப்புகளைக் கொண்ட தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். தங்கள் கோரிக்கைக்கு தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலளிக்காததால், போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஊதிய உயர்வு முடிவுக்கு வரும்வரை படப்பிடிப்புகளில் பங்கேற்க மாட்டோம் என்றும் தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் அனில் குமார் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு கோரி, தெலுங்கு பிலிம்சேம்பர் அலுவலகத்துக்கு சென்று கோஷங்கள் எழுப்பவும் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த திடீர் போராட்ட அறிவிப்பால் ஹைதராபாத்தில் நடந்து வரும் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்படும். அங்கு நடந்து வரும் தமிழ் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.