
குஜராத்தில் நடிகை ஒருவர் தன்னைத் தானே திருணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த 24 வயதுடைய கஷமா பிந்து கடந்த ஜூன் 11-ம் தேதி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். “நான் திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். ஆனால், யாரும் அவ்வாறு இல்லை என்று தெரிந்தது. சிலர் சுய திருமணத்தை பொருத்தமற்றதாக உணரலாம். ஆனால், இதன்மூலம் நான் கூற வருவது பெண்கள் முக்கியமானவர்கள் என்பதே. எனது முடிவை குடும்பத்திடம் கூறும்போது அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்” என்று கூறியிருந்தார் கஷமா பிந்து. இது குஜராத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் குஜராத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை கனிஷ்கா சோனி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுய திருமணத்தைத் தேர்ந்தெடுத்த 2-வது இந்திய பெண் கனிஷ்கா சோனி. "தனியாக வாழ்ந்து நம்மை நாமே நேசிப்பது சிறந்தது" என்று தெரிவிக்கும் கனிஷ்கா சோனி, தாலி, குங்குமத்துடன் திருமணத்திற்கு பிறகான தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தனது முழு மனதுடன் எடுக்கப்பட்ட முடிவு என்று தெரிவிக்கும் கனிஷ்கா சோனி, தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் அடுத்து ஹாலிவுட்டில் பணியாற்றுவதற்காக முயன்று வருவதாகவும் கூறியுள்ளார்.