
அவளுடன் நானும் இறந்து விட்டேன் என்று தனது மகள் மீரா மரணம் குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கடிதம் கலங்க வைத்துள்ளது.
திரைத்துறையில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள்.
இதில், மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மீராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி எக்ஸ் சமூக வலைதளத்தில் இன்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், " அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள். தைரியமானவள். அவள் அப்போது, இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.
அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்" என்று பதிவிட்டுள்ளார். அவரின் கலங்க வைக்கும் இந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.