மகாராஷ்டிராவில் ராணுவ ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்… போர்க்கொடி தூக்கும் பிரபல நடிகை: காரணம் என்ன?

மகாராஷ்டிராவில் ராணுவ ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்… போர்க்கொடி தூக்கும் பிரபல நடிகை: காரணம் என்ன?

மாஃபியா தன்னை குறி வைப்பதாகவும், தான் ஒரு போதும் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன் என்றும் பிரபல நடிகை ஆவேசமாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில், விஷால் ஜோடியாக 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ’ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மீடு புகார் கொடுத்து இந்தியாவில் அதைத் தொடங்கி வைத்தார். நானா படேகரின் ஆட்கள் தன்னைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் சமூக வலைதளப்பக்கத்தில் அடிக்கடி கருத்துகளைப் பதிவிட்டு வரும் நடிகை தனுஸ்ரீ புதிய குற்றச்சாட்டு ஒன்றை இப்போது தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் மிகவும் மோசமாகத் துன்புறுத்தப்படுகிறேன். குறிவைக்கப்படுகிறேன். தயவு செய்து யாராவது, ஏதாவது செய்யுங்கள். கடந்த ஒரு வருடமாக எனது சினிமா வாய்ப்பு பறிபோனது. பிறகு வீட்டில், வேலைக்காரப் பெண்ணை கொண்டு, எனது குடிநீரில் மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டுகளைக் கலக்க வைத்தனர், இதனால் கடுமையான உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டது.

விபத்தின்போது தனுஸ்ரீ தத்தா
விபத்தின்போது தனுஸ்ரீ தத்தா

பின்னர் மே மாதம் உஜ்ஜயினிக்கு சென்றபோது எனது கார் பிரேக் இரண்டு முறை பழுதாகி விபத்து ஏற்பட்டது. நான் மரணத்தில் இருந்து தப்பித்து, 40 நாட்களுக்குப் பின் மும்பை திரும்பினேன். என் இயல்பு வாழ்க்கையைத் தொடங்கினேன். இப்போது என் வீட்டுக்கு வெளியே விசித்திரமான அருவருப்பான விஷயங்கள் நடந்தன. இதன் மூலம் நான் நிச்சயமாகத் தற்கொலை செய்து கொள்ளப்போவதில்லை. இங்கிருந்து வெளியேறப் போவதும் இல்லை.

பாலிவுட் மாஃபியா, மகாராஷ்டிராவின் பழைய அரசியல் வட்டாரம் மற்றும் தேசவிரோதக் கும்பல்கள் ஒன்று சேர்ந்து மக்களைத் துன்புறுத்துகிறார்கள். நான் மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறேன். இதற்குப் பின்னால் நான் அம்பலப்படுத்திய, மீடு குற்றவாளிகள்தான் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இல்லை என்றால் நான் ஏன் குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறேன்? இது உங்கள் அனைவருக்கும் அவமானம். இன்று எனக்கு வருவது நாளை உங்களுக்கும் வரலாம்.

அதனால், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் மற்றும் ராணுவ ஆட்சி நிறுவப்பட வேண்டும். இங்கே விஷயங்கள் உண்மையில் கைமீறி செல்கின்றன. மத்திய அரசு, அடிமட்டம் வரையிலும் உள்ள பிரச்னைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

கலைஞர்கள் மற்றும் தனியாக வாழும் பெண்களுக்கு புகலிடமாக இருந்த இந்த நகரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்களைப் போன்றவர்கள் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதை எல்லாம் மீறி நான் ஆன்மீகத்தைத் தொடர்வேன். என் மனதை வலுப்படுத்துவேன். கிருஷ்ணா, என் சகோதரனே, எனக்கு உதவு.

இவ்வாறு நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். தனுஸ்ரீயின் இந்தப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in