
எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு நடிகர் நானா படேகர்தான் காரணம் என நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
தமிழில், விஷால் ஜோடியாக, ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர், ’ஹார்ன் ஓகே பிளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த சில வருடங்களுக்கு முன் மீ டூ வில் புகார் கூறினார். நானா படேகர் ஆட்கள் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
நானா படேகர், தமிழில் பாரதிராஜாவின் ’பொம்மலாட்டம்’, ரஜினியின் ’காலா’ படங்களில் நடித்துள்ளார். போலீஸார் விசாரித்து நானா படேகருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்று கூறி வழக்கை முடித்தனர். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தனுஸ்ரீ தத்தா. நானா படேகரும் அவர் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், ’மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறேன். அதற்காக தற்கொலை செய்து கொள்ளமாட்டேன். நான் குறிவைத்து துன்புறுத்தப்படுகிறேன். யாராவது உதவி செய்யுங்கள்’ என்று கூறியிருந்தார் தனுஸ்ரீ தத்தா. இந்நிலையில், தனக்கு ஏதேனும் நேர்ந்தால், நானா படேகர்தான் காரணம் என்று இப்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு, மீ டூவில் நான் புகார் கூறிய நடிகர் நானா படேகர், அவர் வழக்கறிஞர்கள் மற்றும் அவருடைய மாஃபியா நண்பர்கள்தான் பொறுப்பு. பாலிவுட் மாஃபியா யார் என்றால் சுஷாந்த் சிங் மரணத்தின்போது சிலரின் பெயர்கள் அடிக்கடி வெளிவந்ததே, அவர்கள்தான். அவர்களின் திரைப்படங்களைப் பார்க்க வேண்டாம். முற்றிலுமாக புறக்கணியுங்கள்.
என்னைப் பற்றி சிலர் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். என்னை அதிகமாகத் துன்புறுத்திய அவர்களின் வாழ்க்கையை நரகமாக்குங்கள். சட்டமும் நீதியும் எனக்கு துணை நிற்காமல் போயிருக்கலாம். ஆனால், இந்த நாட்டின் மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஜெய்ஹிந்த், விடைபெறுகிறேன், பிறகு சந்திப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகை தனுஸ்ரீ தத்தாவின் இந்தத் திடீர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.