`தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட யாரும் இல்லையா?'- அமைச்சர் பங்கேற்ற திரைப்பட விழாவில் சர்ச்சை

`தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட யாரும் இல்லையா?'- அமைச்சர் பங்கேற்ற திரைப்பட விழாவில் சர்ச்சை

சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட விருது வழங்கும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிபெருக்கியில் ஒலிபரப்பியதாக சர்ச்சை வெடித்துள்ளது.

சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள பிரசாத் லேப்பில் நேற்று முன்தினம் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு, இயக்குநர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம் சார்பில் 2021-ம் ஆண்டு சிறந்த நடிகைகளுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா தென்னிந்திய திரைப்பட நடிகர்கள், தேர்வு இயக்குநர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்க தலைவர் நசீர் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் நடிகர், நடிகைகள் உட்பட 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யக்கூடாது என்றும் பயிற்சி பெற்ற பாடகர்கள் மூலமே தமிழ்தாய் வாழ்த்து பாடல் பட வேண்டும் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி தற்பொழுது அரசு விழாக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பாடகர்கள் மூலம் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு வரும் நிலையில் திரைப்பட விருது வழங்கும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பல்துறை நட்சத்திர கலை வல்லுநர்களை கொண்ட இந்த அமைப்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட யாரும் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அரசு உத்தரவை இழிவுபடுத்தும் வகையில் தமிழ்த்தாய் பாடலை ஒலிபெருக்கியில் ஒலிபரப்பிய தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குநர்கள், நட்சத்திர மேலாளர் சங்கம் மற்றும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in