
நடிகர் மன்சூர் அலிகான் நிதானித்து வார்த்தைகளை விட வேண்டும் என த்ரிஷா விஷயத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று மன்னிப்புக் கேட்க முடியாது என்று கொடுத்துள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாது, அவர் தனக்கு கண்டனம் தெரிவித்த தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மன்சூர் அலிகானுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, ‘பெண்கள் சுயமாக வெளியே வந்து உழைப்பில் முன்னேற நினைக்கும் காலம் இது. அவர்களைப் பற்றி யார் இழிவாகப் பேசியிருந்தாலும் கண்டிக்கத்தக்கது. பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், சினிமாவில் அவர்களை இன்று சமமாக மரியாதையுடன் நடத்துகிறோம்.
அவர்களுக்கு உறுதுணையாக நிற்பது நமது கடமை. நாம் பேசும் பேச்சில் கவனமும் நாகரிகமும் மிக முக்கியம். மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள், மற்றவர்களை வலிக்கச் செய்யும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். வரம்பு மீறி நாம் மதிக்கும் ஒரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார்.
இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில் , தானாக முன்வந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.
கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, வலைதளங்களில் வைரலாகும் நோக்கோடோ அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ
பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!
ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி