தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாருக்கு 113 வயது!

எம்.கே.தியாகராஜ பாகவதர்பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
எம்.கே.தியாகராஜ பாகவதர்
எம்.கே.தியாகராஜ பாகவதர்புதுவாழ்வு படத்தில்...

ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் எப்போதுமே பிரிக்கமுடியாததொரு பந்தம் உண்டு. நடிகர்கள் மீது மிகப்பெரிய அபிமானம் கொண்டிருப்பார்கள். அவர்கள் படங்கள் வெளியாகும் நாளில், அந்தப் படத்தில் அவர்களில் சிகை அலங்காரம் போல் பண்ணிக்கொண்டு, ஆடைகள் போல் உடுத்திக் கொண்டு வருவார்கள். “தலைவா...” என்று குரலெழுப்பி உற்சாகமாவார்கள்.

இதெல்லாம் எம்ஜிஆர் - சிவாஜி காலத்திலோ, கமல் - ரஜினி காலத்திலோ, அஜித் - விஜய் காலத்திலோ, தனுஷ் - சிம்பு காலத்திலோ நடந்ததாக மட்டுமே நினைத்துவிடாதீர்கள். அந்தக் காலத்தில், நம் தாத்தாக்களெல்லாம் பிடரியைத் தாண்டி முடி வளர்த்தார்கள். காதில் கடுக்கன் போட்டுக் கொண்டார்கள். சில்க் ஜிப்பா வாங்கவேண்டும் என்று காசு சேர்த்து. அடம்பிடித்து, தைக்கக் கொடுத்து போட்டுக் கொண்டு, பந்தா பண்ணினார்கள். ஹிப்பி, ஸ்டெப் கட்டிங், பங்க் ஸ்டைல் என்றெல்லாம் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் சொன்னது போல, பிடரி தாண்டி வளர்ந்தபடி இருக்கும் ஸ்டைலுக்கும் பெயர் உண்டு. அது... ‘பாகவதர் கிராப்.’ தியாகராஜ பாகவதர் கிராப். அந்தக் காலத்தில் பாகவதர் கிராப் வளர்க்காதவர்கள் மிகமிகக் குறைவு. அவர் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக அதிகம். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார்... தியாகராஜ பாகவதர்தான்!

அந்தப் பையன், பள்ளிக்கூடங்களுக்குச் சென்ற நாட்களை விட, நாடகக் கொட்டகைகளுக்குச் சென்றதே அதிகம். இசைக்கச்சேரிகளைக் கண்டு ரசிப்பதென்றால் அவனுக்கு கொள்ளை ஆர்வம். கச்சேரியில் கேட்ட பாடல்களை, தன் வீட்டிலும் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடத்திலும் அப்படியே சுதி மாறாமல் பாடிக்காட்டினால், மொத்தத் தெருவும் வாய்பிளந்து ரசித்துக் கேட்கும். திருச்சியில் வளர்ந்தாலும் அந்தக் கால மாயவரத்துக்காரன். மயிலாடுதுறை எனும் மாயவரம்தான் பிறந்தபூமி. மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜன் என்பதுதான் முழுப்பெயர். பின்னாளில், இந்தப் பெயர், எம்.கே.தியாகராஜன் என்றானது. எம்.கே.தியாகராஜ பாகவதர் என்றானது. எம்.கே.டி. என்று சுருக்கமாகவும் நெருக்கமாகவும் செல்லமாக அழைத்தது ரசிகக்கூட்டமும் தமிழ் சினிமாவும்!

நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஸ்த்ரீ பார்ட் என்று சொல்லப்படும் பெண் வேடத்தில் நடித்துத்தான் பாகவதர் அனைவரையும் கவர்ந்தார். திருச்சி மெயின்கார்டுகேட்டில் உள்ள ரசிக ரஞ்சனி சபா அப்போது ரொம்பவே பிரபலம். அதில் ‘அரிச்சந்திரா’ நாடகம் போட்டார்கள். அரிச்சந்திரனின் மகன் லோகிதாசன் வேடத்தில் தியாகராஜன் கலக்கினார்.

நாடகம் என்றால் அவருக்கு சர்க்கரை. வசனங்கள் அவருக்கு தேன். பாடல்களென்றால் அவருக்கு சர்க்கரைப்பாகு. பிறகென்ன... அந்த நாடகம் இவரை அடுத்தக்கட்டத்துக்கு கைப்பிடித்து கூட்டிச் சென்றது. நாடகத்தைப் பார்த்த மதுரை பொன்னு ஐயங்கார் என்பவர் பிரமித்துப் போனார். பாகவதரின் குரல்வளத்தைக் கண்டு வியந்தார். பாடல்களைக் கேட்டு சொக்கிப்போனார். விறுவிறுவென மேடையேறினார். ’’இந்தப் பையன் எம்.கே.தியாகராஜன், இனி அப்படி அழைக்காதீர்கள். மிகப்பெரிய பாகவதத் திறமைகள் இவனுக்குள் இருக்கின்றன’’ என்றார்.

அதுமட்டுமா? அவருக்கு முறைப்படி சங்கீதத்தைக் கற்றுக் கொடுத்தார் பொன்னு ஐயங்கார். இன்னும் அவரின் பாடல்கள் பிரபலமாகின. நாடகத்துறையில் அந்தக் காலத்தில் ஜாம்பவான் என்று புகழப்பட்டவர் நடராஜ வாத்தியார். இவர்தான் எம்.கே.டி.க்கு நடிப்புப் பயிற்சியை அளித்தவர். குரல்வளம், நிற்பது, நடப்பது, பார்ப்பது, திரும்பிப் பார்ப்பது, கோபமாகப் பார்ப்பது, ஆவேசம், அழுகை, வீர வசனம், பாடல்கள் என சகத்திலும் தனித்துவம் கொண்டவராகத் திகழ்ந்த எம்.கே.டி.யை விழா மேடையில் ‘’இனிமேல் இவர் எம்.கே.தியாகராஜன் இல்லை. எம்.கே.தியாகராஜ பாகவதர்’’ என்று ’பாகவத’ பட்டம் கொடுத்து வாழ்த்தி ஆசீர்வதித்தார்!

இதன் பிறகுதான் ‘பவளக்கொடி’ திரைப்படம் வெளியானது. நாடகத்தில் நடித்த நுட்பங்களையெல்ல்லாம் தாண்டி, கேமராவுக்குத் தகுந்தது போல் தன் உடல்மொழியை மாற்றிக் கொண்டதுதான் பாகவதரின் திரையுலக வெற்றிக்கான அஸ்திவாரம். அந்தப் படம் 270 நாட்களைக் கடந்து ஓடியது. ’நவீன சாரங்கதாரா’, ‘சத்யசீலன்’ முதலான படங்களில் நடித்தார். இதில் ‘சத்யசீலன்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார் பாகவதர்.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் எனும் உச்ச இடத்துக்குச் சென்றவர், அந்தக் காலத்திலேயே டெக்னாலஜி வளராத காலத்திலேயே இரட்டை வேடம் போட்டு வித்தியாசம் காட்டி நடித்தார்.

‘அம்பிகாபதி’ திரைப்படம், முந்தைய சாதனையையெல்லாம் முறியடித்தது. ‘திருநீலகண்டர்’, ‘அசோக்குமார்’ (இதில் எம்ஜிஆரும் நடித்தார்), ‘சிவகவி’ என்று வரிசையாக படங்கள் வந்துகொண்டே இருந்தன. பாகவதரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. அடுத்து வந்தது ‘ஹரிதாஸ்.’ அதற்கு முன்பும் சரி, பின்னரும் சரி... அப்படியொரு சாதனையை வேறுஎந்தப் படமும் நிகழ்த்தவில்லை. மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடி மாபெரும் சாதனை படைத்தது ஹரிதாஸ். இத்தனைக்கும் அப்போது வழக்குப் பதிவாகி இருந்தது. குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார் பாகவதர் என்பது மேலுமொரு சரித்திரச் சாதனை!

’சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்’ என்ற பாடல் மிகப்பிரபலம். ‘பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி’ என்ற பாடல் மிகப்பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியது. இன்றைக்கும் பல படங்களில் ரேடியோவில் ஒலிப்பது போல் இந்தப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

நூற்றுக்கணக்கான படங்களில், ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ ஒலிபரப்பாகி, அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்தப் பாடலை கொண்டு சேர்த்துக் கொண்டே இருக்கிறது. ‘தீன கருணாகரனே நடராஜா’ என்ற பாடலுக்காகவே படம் பார்த்தவர்கள் உண்டு. ’வதனமே சந்திரபிம்பமோ’ பாடலை அன்றைக்கு ஆண்பெண் வித்தியாசமில்லாமல் முணுமுணுத்தார்கள். ’கிருஷ்ணா முகுந்தா முராரே’ பாடலைக் கேட்டு உருகிப் போனார்கள் ரசிகர்கள்!

கலையின் மீதும் நடிப்பின் மீதும் பாடல்களின் மீதும் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் ஆழ்ந்த காதலும் பாகவதர் திரையுலகில் பல சாதனைகளைப் படைக்கக் காரணமாக அமைந்தது. மேடைகளில் இவர் பாடத் தொடங்கினால், மொத்தக்கூட்டமும் அமைதியாகிவிடும். அவரின் சங்கதிகள் வசீகரித்தன. குரலில் ஏதோவொரு மாயாஜாலம் இருந்தது.

அப்போதெல்லாம் மூன்று மூன்றரை மணி நேரம் படம் ஓடும். மாலையும் இரவும் மட்டுமே காட்சிகள் இருக்கும். படத்தை இடமில்லாமல், நின்றுகொண்டே பார்த்த ரசிகர்களெல்லாம் கூட உண்டு. ஏதேனும் ஊருக்கு வந்து பாகவதர் பேசுகிறார் என்றால், அவரைப் பார்க்க, ஊரே அந்த இடத்தில் திரண்டிருக்கும். அப்படி ஒருமுறை இவரைப் பார்க்கும் ஆர்வத்தில், ஒருவர், மின்கம்பத்தின் மீது ஏற, மின்சாரம் தாக்கி இறந்துபோனார். அவரின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்ல வந்த பாகவதர், தன் மீது தமிழகம் வைத்திருக்கும் பேரன்பைக் கண்டு அழுதேவிட்டார். அத்துடன் அந்தக் குடும்பத்துக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் ஐயாயிரம் என்பது மிகப்பெரிய விஷயம். ஒரு பவுன் தங்கம் 22 ரூபாய் என்றிருந்த காலம் என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

அந்தக் காலத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்கு பாகவதர் ரயிலில் வருகிறார் என்றால், அந்த ரயிலைப் பார்க்க செங்கல்பட்டில் ஒரு கூட்டம் காத்திருக்கும். பாகவதரை பார்க்க முடியாவிட்டாலும், “பாகவதர் போறாரு” என்று சொல்லி அந்த ரயிலுக்கு கைகாட்டுவார்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய பாகவதர் தனது கடைசி நாட்களில் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் யாருக்கும் அடையாளம் தெரியாத நபராகச் சுற்றித் திரிந்தார் என்பது பேட்டி ஒன்றில் கவிஞர் வாலி சொன்ன தகவல்.

பாகவதர் வாழ்ந்த காலமே குறைவுதான். அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும் பதினைந்துதான். இந்தப் பதினைந்தில், ஆறு படங்கள் பிரம்மாண்ட வெற்றிப் படங்களாகின. சரித்திர சாதனை படைத்தன. அவற்றையெல்லாம் விட மிகப்பெரிய சாதனை... ‘ஹரிதாஸ்’ படம் நிகழ்த்தியது. 1944-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘ஹரிதாஸ்’ திரைப்படம் மூன்று தீபாவளிகளைத் தாண்டி ஓடியது. படம் எடுத்த செலவைத் தாண்டி, பதினாறு மடங்கு வசூலைக் குவித்தது என்கிறது சினிமா சரித்திரம்!

அப்போதெல்லாம் கண் மூடித் திறந்தால் பாட்டுத்தான். 22 ரீல் கொண்ட படத்தில், 54 பாடல்கள் இருக்கும். இவரின் படங்களிலும் அப்படித்தான். இதில் 28 பாடல்களுக்கு மேல் ஒருபடத்துக்கே தியாகராஜ பாகவதர் பாடியிருக்கிறாரென்றால், தியேட்டரில் விசில் பறந்தன. கரவொலி அதிர்ந்தன. தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் எம்.கே.டி என்று அழைக்கப்படும் தியாகராஜ பாகவதர்தான் என்று தமிழ் சினிமா கல்வெட்டாகப் பதிவு செய்து பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

’லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என்பது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த வழக்கில் தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கேயும் கைதானார்கள். நான்கு வருடங்கள் சிறைவாசம். விடுதலையாகி வந்தார்கள். அடுத்து, சினிமாவில் நடிக்கவே விருப்பமில்லை பாகவதருக்கு! துவண்ட நிலையில் இருந்தார்.

வலுக்கட்டாயமாக அவரை நடிக்கவைத்தார்கள். அந்தப் படங்களும் ஓடவில்லை. 1959-ம் ஆண்டு காலமானார். அவர் மறைந்து 64 வருடங்களாகின்றன. 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்தார் பாகவதர். இன்றைக்கு அவரது 113-வது பிறந்த நாள்.

தமிழ் சினிமாவின் சரித்திர நாயகன், சரித்திரைத்தையே தன் பக்கம் திருப்பிய நாயகன் பாகவதர், சினிமா உள்ளவரை வாழ்ந்துகொண்டேதான் இருப்பார். பேசப்பட்டுக்கொண்டேதான் இருப்பார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in