“தமிழ் சினிமா ரொம்ப மோசமான நிலைமையில இருக்கு” - மனம் திறக்கும் விஷால்

“தமிழ் சினிமா ரொம்ப மோசமான நிலைமையில இருக்கு” - மனம் திறக்கும் விஷால்

விஷாலின் ’வீரமே வாகை சூடும்’வரும் 26-ம் தேதி வெளியாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில், டிம்பிள் ஹயாதி ஹீரோயின். பாபுராஜ், யோகிபாபு, மாரிமுத்து உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி விஷாலிடம் பேசினோம்.

முதல்ல வேற டைட்டில் வச்சிருந்தீங்களே?

‘சாமானியன்’னு வச்சிருந்தோம். அதை வேற ஒருத்தர் பதிவு பண்ணி வச்சிருக்கிறதால, ’வீரமே வாகை சூடும்’னு தலைப்பை மாத்தினோம். வழக்கமா வடசென்னை தொடர்பான கதைகள் கொண்ட படங்கள் பார்த்திருக்கோம். அது மாதிரி இல்லாம, நடுத்தர வர்க்க மனநிலையை மையமாகக் கொண்ட சினிமா, சமீபகாலமா அதிகம் வரலைன்னு நினைக்கிறேன். விசு, வி.சேகர் சார் இயக்கிய படங்கள்லாம் அப்படித்தான் இருக்கும். அதாவது எந்த பிரச்னையிலயும் சிக்காம, தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கிறவங்களைப் பற்றிய கதையை அந்தப் படங்கள் சொல்லும். இந்தப் படத்துல, அப்படிப்பட்ட குடும்பத்துல இருக்கிற ஒருத்தன், ஒரு பிரச்சினையில சிக்குறான். அதுல இருந்து அவன் எப்படி மீண்டு வர்றான் அப்படிங்கறதுதான் படம். ஒரு சாமானியன் ஒரு பிரச்சினையைச் சந்திச்சா, அதைக் கண்டு பயந்து ஓடக் கூடாது, அதை எதிர்த்து நிற்கணும்னு சொல்ற படம் இது.

விஷால், டிம்பிள் ஹயாதி
விஷால், டிம்பிள் ஹயாதி

இதுவும் ஆக்‌ஷன் படம்தானா?

ஆக்‌ஷன் படம்தான். ஆனால், கதைக்கு சம்பந்தமில்லாத ஆக்‌ஷன் இல்லை. கதையோடு ஒன்றிய ஆக்‌ஷன் இருக்கும். ’பாண்டிநாடு’ படத்துல என் கேரக்டர் எப்படி இருந்ததோ, அது மாதிரிதான் இதுலயும் இருக்கும். கதைப்படி அப்பா ஏட்டு. நான் போலீஸ் பயிற்சி முடிச்சுட்டு,போஸ்ட்டிங்குக்குக் காத்திருக்கிற இளைஞன். டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா, தங்கை கேரக்டர் பண்ணியிருக்காங்க. மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்கிறார்.

குறும்படம் பார்த்துதான் இயக்குநர் து.ப.சரவணனுக்கு வாய்ப்பு கொடுத்தீங்களாமே?

அந்தக் குறும்படத்தை வெளியிடச் சொல்லிதான் என்னைத் தேடி வந்தாங்க. அதைப் பார்த்துட்டு ஆச்சரியப்பட்டேன். நல்லா இருந்தது. மேக்கிங் ரொம்ப முதிர்ச்சியா இருந்தது. அவரைக் கூப்பிட்டு, ‘வேற ஏதும் கதை இருக்கா?’ன்னு கேட்டதும் பயந்துட்டாப்ல. அப்புறம் நான், எனக்குத்தான் கேட்கிறேன், கொஞ்சம் டைம் எடுத்துட்டு வந்து சொல்லுங்கன்னு சொன்னேன். பிறகு வந்து ஒரு லைன் சொன்னார். பிடிச்சிருந்தது. 3 மாசத்துல முழு கதையோட வந்தார். அவரோட திரைக்கதை ரொம்பப் பிடிச்சிருந்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவமும் இடம்பெறுதாமே?

3 கதைகள் வெவ்வேற டிராக்ல போயி, கடைசியில ஒன்னு சேர்ற மாதிரி கதை. எப்படி சேர்ந்தாங்க, என்ன நடந்தது, எப்படி நடக்குதுங்கறதுதான் படத்தோட அழகான திரைக்கதை. இதுல தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவமும் இருக்கு. ஆனா, அது விளக்கமா இருக்காது. ஒரு நடிகனா, தயாரிப்பாளரா இந்தக் கதையை தேர்ந்தெடுக்கக் காரணம் இந்தத் திரைக்கதைதான்.

விஷால், யோகிபாபு
விஷால், யோகிபாபு

புது இயக்குநர்களுக்கு அதிகமா வாய்ப்பு கொடுக்கறீங்க...?

நானும் உதவி இயக்குநரா இருந்து வந்தவன்தானே. இப்ப இருக்கிற உதவி இயக்குநர்கள் ரொம்பப் புதிய கதைகளோட வர்றாங்க. எப்படியாவது ஜெயிக்கணுங்கற துடிப்பு இருக்கு. அவங்க திறமையை, பசியைப் பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறேன். இது ஒருவகையில என் சுயநலம்தான்னு சொல்வேன்.

நடிகர் சங்க பிரச்சினை?

இன்னும் 4 மாசங்கள்ல சரியாகிடும்னு நினைக்கிறேன். இறுதிக்கட்டப் பணிகளுக்காக, இன்னும் பணம் தேவைப்படுது. அதுக்காக அரசிடம் உதவி கேட்கலாம்னு இருக்கிறோம். கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், பழம்பெரும் நடிகர், நடிகைகளை மூன்று மாதத்துக்கு ஒரு முறை சந்திக்க வச்சு அவங்க நினைவுகளைப் பகிர்ந்துக்க வைக்கவும் அவங்களை உற்சாகப்படுத்தணும்னும் ஆசை இருக்கு. பார்ப்போம்.

கரோனாவுக்குப் பிறகுத் தமிழ் சினிமா எப்படியிருக்கு?

இன்றைய நிலையில சினிமா ரொம்ப மோசமான நிலைமையில இருக்கு. யாருக்காகப் படம் எடுக்கறீங்க? யாருக்குப் பணம் வந்திருக்கு? பல படங்களை முடிச்சுட்டு ரெண்டு வருஷமா காத்திட்டு இருக்காங்க. ஓடிடி தளங்களும் எல்லா படங்களையும் வாங்கறதில்லை. நான், ஹீரோ கம் தயாரிப்பாளர் என்பதால் எனக்குச் சலுகை இருக்கு. இந்தச் சலுகை எல்லா தயாரிப்பாளருக்கும் இருக்காது. அதனால ரெண்டு மாசம் எல்லாத்தையும் நிறுத்திட்டு உட்கார்ந்து என்ன நடக்குதுன்னு பேசணும். ஜிஎஸ்டி-யில இருந்து சினிமாவுக்கான வரிகளைக் குறைக்க என்ன பண்ணலாம்னு பேசலாம். அப்பதான் நிலைமை சீராகும்னு நினைக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in