'இப்போது அந்தக் கோடு மங்கி வருகிறது’: கேன்ஸில் இருந்து தமன்னா

'இப்போது அந்தக் கோடு மங்கி வருகிறது’: கேன்ஸில் இருந்து தமன்னா

கேன்ஸ் விழாவில் முதன் முதலாக சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்றது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

75-வது கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த 17-ம் தேதி தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்வதும், தங்கள் படம் இந்த விழாவில் திரையிடப்படுவதும் திரைக்கலைஞர்களின் கனவாக இருக்கிறது. இந்தாண்டு இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் திரையுலகினர் பங்கேற்றுள்ளனர்.

கமல்ஹாசன், இயக்குநர் சேகர் கபூர், நவாஷுதின் சித்திக், மாதவன், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், தமன்னா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரவ்தெலா, வாணி திரிபாதி, இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கேஜ், பாடகர் மாமே கான், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்றுள்ள நடிகை தமன்னா கூறியிருப்பதாவது:

கேன்ஸ் விழாவில் முதன் முதலாக, சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்றது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள திறமைசாலிகள் ஒன்று கூடும் இடத்தில், நானும் கலந்துகொண்டதில் பெருமை. இந்தியா பல வருடங்களாக கேன்ஸில் பங்கேற்று வருகிறது. தீபிகா படுகோன் இப்போது ஜூரியில் ஒருவராக இருப்பதும் அதற்கு முன் வித்யா பாலன் இருந்ததையும் பார்க்கும்போது, எப்போதும் இந்தியாவின் பங்களிப்பு இங்கு இருந்திருக்கிறது.

முன்பு, கமர்சியல் அல்லாத படங்கள் மட்டும்தான் இங்கு திரையிடப்படும் என்ற கருத்து இருந்தது. இப்போது அந்த கோடு மங்கி வருகிறது என உணர்கிறேன். உலகம் முழுவதும் அனைவரும் பார்க்க விரும்பும் திரைப்படங்களை இந்த விழா, உண்மையில் காட்டுகிறது. இவ்வாறு நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in