இன்னமும் வாசம் குறையாமல் பூத்திருக்கும் ‘பூவே உனக்காக’!

- விஜய்யின் முதல் சில்வர் ஜூப்ளி படம்!
பூவே உனக்காக
பூவே உனக்காக

காதலுக்கும் தியாகத்துக்கும் தொடர்பை ஏற்படுத்தி, நம்மை கண்கலங்க வைத்த படங்கள் ஏராளம் உண்டு. அப்படி, காதலும் தியாகமும் கைகோக்க, நாம் சிரித்துக்கொண்டே, மகிழ்ந்து கொண்டே, வியந்துபோய் க்ளைமாக்ஸை ரசித்ததுதான் ‘பூவே உனக்காக!’

அந்த ஊரில் இரண்டு வீடுகள். எதிரெதிராக இருக்கின்றன. ஒன்று கிறிஸ்தவ வீடு. இன்னொன்று இந்துவின் வீடு. கிறிஸ்தவ வீட்டில் ஒரு தாத்தா - பாட்டி. நாகேஷும் சுகுமாரியும்! அவருடைய மகன் ஜெய்கணேஷ். அதேபோல, இந்துக் குடும்பத்தின் வீட்டில், நம்பியாரும் விஜயகுமாரியும் தாத்தா பாட்டிகள். அவர்களின் மகன் மலேசியா வாசுதேவன். பார்க்கும் போதெல்லாம் விறைத்துக் கொள்வார்கள். முறைத்துக் கொள்வார்கள். முகம் திருப்பிக் கொள்வார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா? காரணம் வேறென்னவாக இருக்கும்... காதல்தான்!

அந்த வீட்டுப் பையனும் இந்த வீட்டுப் பெண்ணும் காதலிப்பார்கள். விஷயம் தெரிந்ததும் அதுவரை ஒற்றுமையாக, நகமும் சதையுமாக இருந்தவர்கள் அடித்துக்கொள்வார்கள். திட்டிக்கொள்வார்கள். பிரிந்துவிடுவார்கள். போதாக்குறைக்கு காதலர்கள் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்வார்கள். இதெல்லாம் நடந்து 25 வருடங்கள் கழித்தும் இன்றும் அந்தப் பகை, பகையாகவே, அந்த வெறுப்பு நெருப்பு அணையாமலேயே இருக்கிறது.

இப்போது இரண்டு வீட்டுக்கும் வருகிறது கடிதம். ‘நான் உங்கள் பேரன். ஊருக்கு வருகிறேன்’ என்று கடிதம் தகவல் தெரிவிக்கிறது. இரண்டு வீடும் கொந்தளிக்கிறது. நாயகன் ராஜா, தன் நண்பன் கோபியுடன் ஊருக்கு வருகிறான். ஆனால், இரண்டு வீடும் கதவைச் சாத்திப் புறக்கணிக்கிறது.

அந்தத் தெருவில் வீடெடுத்துத் தங்கலாமென்றால், வீடு வாடகைக்குத் தரவும் எவரும் முன்வரவில்லை. ‘பெரியவீட்டுக்காரங்களை பகைச்சிக்க முடியாது’ என்று சொல்லிவிடுகிறார்கள். அப்போது இரவு மணி எட்டாகிறது. ‘’ஏம்பா மணி எட்டாயிருச்சுப்பா’’ என்று வாசலில் குழந்தையுடன் நிற்கும் மனைவியிடம், கடலை வண்டிக்காரரிடம் தெருவில் நின்று பேசுவோரிடம் யாரோ சொல்ல, எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

ராஜாவும் கோபியும் நிறுத்தி விசாரிக்க,’வெள்ளியங்கிரி என்பவர் நைட் எட்டு மணியானாப் போதும். பாட ஆரம்பிச்சிருவாரு’ என்று சொல்ல, அந்த வெள்ளியங்கிரி ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்று பாடுகிறார். ஊரே தெறித்து ஓடி, வீட்டுக்குள் கதவையும் ஜன்னலையும் சார்த்திக் கொண்டிருக்கிறது. வெள்ளியங்கிரியின் மனைவியே சகிக்கமுடியாமல் இருக்கிறார். ஆனால், ராஜாவும் கோபியும் பாடலை ஆஹா ஓஹோ எனப் புகழ்கிறார்கள். ஆக, வெள்ளியங்கிரி இவர்களுக்கு வீட்டில் தஞ்சம் தருகிறார்.

இதையடுத்து, தாத்தாக்களிடமும் பாட்டிக்களிடமும் நெருங்குகிறார். ‘’நம்ம சொந்தத்துல ஒரு கிறிஸ்டின் பொண்ணு இருக்கு. அதைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா பிரச்சினையெல்லாம் தீர்ந்துரும்’’ என்று கிறிஸ்டின் பாட்டி சொல்ல, ‘’நம்ம சொந்தத்துல இருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீனா, இந்துப்பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால, நம்ம வீடு உன்னை ஏத்துக்கும்’’ என்று இந்துக் குடும்பத்தின் பாட்டி சொல்ல, வேறுவழியில்லாமல், ‘’எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிருச்சு’’ என்ற பொய்யைச் சொல்லுகிறார் ராஜா.

’பூவே உனக்காக’ படத்தில் விஜய், சங்கீதா
’பூவே உனக்காக’ படத்தில் விஜய், சங்கீதா

அடுத்து, ‘’அந்தப் பொண்ணு இந்துவா, கிறிஸ்டினா?’’ என்று கேட்க, ‘’அந்தப் பொண்ணு பேரு நிர்மலா. இந்து மாதிரி, ஆனா இந்து இல்ல. கிறிஸ்டின் மாதிரி. ஆனா கிறிஸ்டின் இல்ல’’ என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்க, அந்தப் பெண் கடிதம் எழுதுவது போலவே, இவர்களே கடிதம் போட்டுக்கொண்டு டிராமா போடுகிறார்கள். ஒருநாள்... ‘’நான்தான் ராஜாவின் மனைவி’’ என்று ஒரு பெண் வருகிறாள். திடுக்கிட்டுப் போகிறார்கள் ராஜாவும் கோபியும்!

ஆனால், வேறு வழியில்லாமல் நாடகத்தைத் தொடரவேண்டிய நிலை. இந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு குடும்பங்களில் உள்ள அங்கத்தினர்களின் மனதில் இடம்பிடிக்கிறான் ராஜா. அதேசமயத்தில், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண், சென்னையில் கல்லூரி ஹாஸ்டலில் இருந்து படிக்கும்போது, ராஜா அந்தப் பெண்ணைக் காதலிக்கிறான். அவள் அன்புடன் ராஜாவிடம் பழகுகிறாள். அவனுக்கான சின்னச்சின்ன உதவிகளையெல்லாம் செய்கிறாள். இதெல்லாம் காதல் என்று ராஜா நினைத்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பெண் தான் காதலிக்கும் பையனை அறிமுகப்படுத்தி வைக்கிறாள். அதிர்ந்து போகிறான் ராஜா.

‘’நீங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ என் வாழ்த்துகள்’’ என்கிறான். ஆனால் ‘’அது அத்தனை சுலபமில்லை’’ என்று 25 வருடங்களுக்கு முன்பு நடந்த காதலையும் அதனால் ஏற்பட்ட குடும்பங்களின் பிரிவையும் சொல்ல, ‘’உங்களுக்கு உங்க குடும்பத்து சம்மதத்தோட நான் கல்யாணம் பண்ணிவைக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுத்தான் அந்த ஊருக்கு வந்திருக்கிறான். 25 வருடங்களுக்கு முன்பு ஓடிப்போனவர்களின் மகன் என்று சொல்லிக்கொள்கிறான்.

இந்தநிலையில், நிர்மலாவாக, ராஜாவின் மனைவி என்று சொல்லிக் கொண்டு வந்திருப்பவள்தான், ஓடிப்போனவர்களின் உண்மையான மகள் ப்ரியதர்ஷினி என்பதை ராஜாவிடம் தெரிவிக்கிறாள். இதனிடையே இரண்டு குடும்பங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இவனை ஏற்கும் நிலையில், காதல் விவகாரம் தெரியவருகிறது. மீண்டும் முறைத்துக் கொண்டு ஆவேசமாகிறது.

அந்த சமயத்தில், ராஜா ஒரு திட்டம் தீட்டுகிறான். கிறிஸ்தவப் பையனை இந்துவாக்குகிறான். இந்துப் பெண்ணை கிறிஸ்வதப் பெண்ணாக்குகிறான். ‘’உங்களுக்கு வந்திருக்கிற பொண்ணு கிறிஸ்டின். ஆனா, உங்க பையன் இந்து. உங்களுக்கு வரணும்னு நீங்க நினைச்ச பையன் இந்து. ஆனா, உங்க பொண்ணு கிறிஸ்டின்’’ என்று குட்டையைக் குழப்ப, இறுதியில் ஒற்றுமையாகி, கல்யாணத்தை நடத்துகிறார்கள்.

தன் காதலியை, அவள் காதலித்தவனுடன் சேர்த்துவைத்த திருப்தியுடன் ஊருக்குக் கிளம்ப முனைகிறான் ராஜா. அப்போது மணப்பெண், ‘’எனக்காகத்தானே இப்படியெல்லாம் செய்தீர்கள். எங்களுக்காக நிர்மலாவை நீங்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும்’’ என்கிறாள். ஆனால், ‘’நான் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்து தோற்றுப் போனவன். இனி என் வாழ்விலும் மனதிலும் எந்தப் பெண்ணுக்கும் இடமில்லை’’ என உறுதியாகச் சொல்லுகிறான்.

‘’காதலிச்சவங்க வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழலையா?’’ என்று கேட்கிறாள். ‘’அவங்க நெஞ்சைத் தொட்டு சொல்லச் சொல்லுங்க. அவங்க மனசோட ஒரு ஓரத்துல, அந்த முதல் காதல் இருந்துக்கிட்டேதான் இருக்கும். அந்த வலி இருந்துக்கிட்டேதான் இருக்கும். காதல்ங்கறது ஒரு செடில பூக்கிற பூ மாதிரி. உதிர்ந்துருச்சின்னா உதிர்ந்ததுதான்’’ என்று சொல்லிவிட்டு, அந்த ஊரில் இருந்து கிளம்புகிறான் ராஜா.

விஜய், சார்லி
விஜய், சார்லி

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் தன் அக்மார்க் ஸ்டைலில், அழகான தெளிந்த திரைக்கதையுடன் படத்தை கையாண்டிருப்பார். பொதுவாகவே விக்ரமனுக்கு காமெடி மிக இயல்பாகவே வரும். அதிலும் படத்துடனும் கதாபாத்திரத் தன்மைகளுடன் சேர்ந்த காமெடி, இயக்குநர் விக்ரமனுக்கு கைவந்தகலை.

நாகேஷ், சுகுமாரி, நம்பியார், விஜயகுமாரி, ஜெய்கணேஷ், மலேசியா வாசுதேவன், விஜயசந்திரிகா, மீசை முருகேஷ், பி.ஆர்.வரலட்சுமி, சக்திகுமார், ஆர்.எஸ்.சிவாஜி, சிவா, தாரிணி எல்லோரும் சிறப்பாகவே நடித்திருந்தார்கள். விஜய்யும் சங்கீதாவும் சார்லியும் படத்தில் மிகப்பெரிய ஸ்கோர் செய்தார்கள். அதேபோல், அஞ்சு அரவிந்தும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.

இயக்குநர் விக்ரமனுடன் விஜய், நாகேஷ் (பூவே உனக்காக)
இயக்குநர் விக்ரமனுடன் விஜய், நாகேஷ் (பூவே உனக்காக)

கவிஞர் வாலி, பழனிபாரதி முதலானோர் எழுதிய பாடல்கள் எல்லாமே ஹிட் பாடல்களாக அமைந்தன. ‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்’ என்கிற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இந்தப் பாடலை இன்னமும் காலர் டியூனாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். ‘சொல்லாமலே யார் பார்த்தது’ எனும் கஸல் கலந்த மெட்டுகளுடன் அமைந்த பாடல் அழகிய மெலடியானது.

எல்லாப் பாடல்களையும் மிகப்பெரிய வெற்றிப் பாடல்களாக்கிக் கொடுத்தார் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். இது இவருக்கு 50-வது படம் எனும் பெருமையைப் பெற்றது. படத்தை இப்போது பார்ப்பவர்கள், ஒரேயொரு காட்சிக்கு வரும் இயக்குநர் ராஜகுமாரனைக் கவனித்து, ரசிக்கிறார்கள்.

நடிகர் விஜய்க்கு இந்தப் படம் வருவதற்கு முன்பு படங்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனாலும் எந்தப் படமும் வெற்றிப்படமாக அமையவில்லை. அத்தனையுமே ஆவரேஜ் படங்கள்தான். ஆனால், ‘பூவே உனக்காக’ விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் ரொம்பவே ஸ்பெஷலான இடத்தில் இருக்கிறது. விஜய்யின் திரைப்பயணத்தில், முதல் வெள்ளிவிழாப் படம் இதுதான்.

படம் வெளியாகி, 27 வருடங்களாகின்றன. தமிழகத்தின் பல ஊர்களிலும் 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்த ‘பூவே உனக்காக’, காதலையும் காதலுக்குள் இருக்கிற தியாகத்தையும் மென்மையாகவும் இழை இழையாகவும் சொன்னவிதத்தில்... ரசிக மனங்களில் இன்றைக்கும் தனியிடத்தில், பூத்திருக்கிறது, அந்த வாசம் குறையாமல், அப்படியே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in