பாலியல் கேள்விகள்: பிரபல இயக்குநரை கிண்டலடித்த டாப்ஸி!

பாலியல் கேள்விகள்: பிரபல இயக்குநரை கிண்டலடித்த டாப்ஸி!

தனது டிவி நிகழ்ச்சியில், பாலியல் கேள்விகளைக் கேட்கும் பிரபல இயக்குநரை, நடிகை டாப்ஸி கிண்டலடித்துள்ளார்.

வெற்றிமாறனின் ’ஆடுகளம்’ படம் மூலம் தமிழில் ஹீரோயின் ஆனவர் டாப்ஸி. தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்துள்ள டோபாரா (Dobaaraa) என்ற இந்தி படம் வரும் 19-ம் தேதி வெளியாகிறது. அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாசர், ராகுல் பட் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் புரமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. மும்பையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் ’காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் இதுவரை பங்கேற்றதே இல்லை? என்று ஒருவர் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த நடிகை டாப்ஸி, அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படும் அளவுக்கு எனது பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை என்று கிண்டலாகப் பதிலளித்தார். இந்தப் பதில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் கரண் ஜோஹர், தனது ’காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம், தனிப்பட்ட பாலியல் விஷயங்களை கேட்டு வருவது சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில், அவர் நிகழ்ச்சியில் ஆமிர்கானும் கரீனா கபூரும் கலந்துகொண்டனர். அப்போது, கரீனாவிடம் குழந்தை பெற்ற பிறகு உங்கள் பாலியல் வாழ்வின் தரம் எப்படி இருக்கிறது? என்று கேட்டார். கடுப்பான கரீனா கபூர், உங்களுக்கும் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றன, உங்களுக்கே தெரிந்திருக்குமே? என்றார்.

அப்போது கரண், ‘இந்த நிகழ்ச்சியை என் அம்மா பார்த்துக் கொண்டிருப்பார், அவர் முன் இதுபோன்ற விஷயங்களை பேச முடியாது’ என்றார். குறுக்கிட்ட நடிகர் ஆமிர்கான், மற்றவர்களின் பாலியல் விஷயங்கள் பற்றி நீங்கள் பேசுவதை உங்கள் அம்மா பொருட்படுத்த மாட்டாரா?, இதெல்லாம் என்ன கேள்விகள்? என்றார். இது அப்போது பரபரப்பானது.

இதேபோல, விஜய தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ஜான்வி கபூர், ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோரிடமும் பாலியல் விஷயங்கள் பற்றி கரண் ஜோஹர் பேசியது பரபரப்பானது. இதை வைத்தே நடிகை டாப்ஸி, கரண் ஜோஹரை கிண்டலடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in