
மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் டி.ராஜேந்தர், நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்.
நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டதைக் கண்டனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து கடந்த ஜூன் 14 அன்று அவர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கு ஓய்வில் இருந்தார். இதற்கிடையே நடிகர் சிம்பு சென்னை திரும்பினார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து டி.ராஜேந்தர் குடும்பத்தினருடன் நாளை அதிகாலை (ஜூலை 22) 2 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். சென்னை வரும் அவருக்கு, இலட்சிய திமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். சென்னை வந்த பின், தனது சிகிச்சைக்காக உதவி செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அவர் நன்றி கூற இருக்கிறார்.