டி.ராஜேந்தர்: அனைத்துத் துறைகளிலும் கொடி நாட்டிய ‘அஷ்டாவதானி’!

நடிகர் - இயக்குநர் டி.ராஜேந்தர் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
டி.ராஜேந்தர்: அனைத்துத் துறைகளிலும் கொடி நாட்டிய ‘அஷ்டாவதானி’!

சினிமாவில் என்னென்ன துறைகள் உண்டோ, அவை அனைத்திலும் புகுந்து புறப்பட்டவரை ‘சகலகலாவல்லவர்’ என்று சொல்வார்கள். சினிமாவின் எட்டு துறைகளில் பங்களித்து பரிமளித்து ‘அஷ்டாவதானி’ எனும் அடைமொழியைப் பெற்றவர் டி.ராஜேந்தர். எவரிடம், எந்தத் துறைக்காகவும் உதவியாளராக இல்லாமல், அதேசமயம் எவரையும் பின்பற்றாமல், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு, ஒரு ஏகலைவனைப் போல் ஜெயித்துக்காட்டியவர் டிஆர். ‘கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு, டைரக்‌ஷன்... டி.ராஜேந்தர் எம்.ஏ.’ என்று டைட்டில் போடும்போது விசிலும் கரவொலியும் விண்ணைத் தொடும் அளவுக்கு எதிரொலிக்கும்!

ஸ்ரீதரின் படங்கள் எப்படியோ, பாலசந்தரின் படங்கள் எப்படியோ, பாரதிராஜாவின் படங்கள் எப்படியோ... டி.ராஜேந்தரின் படங்களும் அப்படித்தான். அவரின் படங்கள் தனித்துத் தெரிந்தன. புதிய பாணியுடன் கதை சொன்னார். அவரின் வசனங்களும் காட்சிகளும் புதுமாதிரியாகவே இருந்தன. அநேகமாக, கல்லூரிக் கால வாழ்க்கையை தன் படங்கள் மூலமாக, பி.எச்டி பண்ணியவர் இவராகத்தான் இருக்க வேண்டும்.

பின்னாளில், பார்த்திபன் எது செய்தாலும் வித்தியாசமாகச் செய்வார் என்று எப்படி நாம் ஒருவித குறுகுறுப்புடன் பார்த்தோமோ, அதேபோல், டி.ராஜேந்தர் படத்தின் வசனங்களையும் அவரின் பேச்சுகளையும் அப்படித்தான் கூர்ந்து கவனித்து சிலாகித்தோம். எதுகை மோனை எனும் விஷயத்தில் உச்சம் தொட்டவர் டி.ராஜேந்தராகத்தான் இருக்கும்.

எழுபதின் இறுதியில் வந்த ‘ஒருதலைராகம்’ அதுவரை வந்திடாத வகையில் இருந்தது. காதலின் கண்ணியத்தைச் சொன்னது. காதலையே கண்ணியமாகச் சொன்னது. எழுபதுகளின் இளைஞர்கள் - யுவதிகளின் தயக்கத்தையும் கூச்சத்தையும் கூச்சலையும் ஆரவாரத்தையும் அந்தப் படம் சொன்னது. அப்போது அவர்களுக்குள் இருக்கிற ரசனைகளையும் ஏக்கங்களையும் சொன்னது. இன்று வரைக்கும் மக்களால் மறக்க முடியாத படமாகவும். தவிர்க்கவே முடியாத படமாகவும் ‘ஒருதலைராகம்’ இருக்கிறது.

முதல் படத்தின் மூலம் எத்தனையோ பேர் பிரபலமானார்கள். அவர்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர்... டி.ராஜேந்தர். இத்தனைக்கும் டைட்டிலில், டைரக்‌ஷன் கார்டிலெல்லாம் இவர் பெயர் வரவில்லை என்பது சோகம்தான். ஆனாலும் ‘ஒருதலை ராகம்’ டி.ராஜேந்தரின் படம் என்பதை நிரூபித்தது. இவரின் இசையிலும் வரிகளிலும் உதித்த பாடல்கள் ஒலிக்காத வீடுகளே இல்லை. பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இல்லை. அநேகமாக, மாயவரம் என்கிற மயிலாடுதுறையை, வீதிகளை, ரயில்வே ஸ்டேஷனை டி.ராஜேந்தர் அளவுக்கு இதுவரை வேறு எவரும் திரையில் காட்டியதே இல்லை.

மாயவரத்துக்காரரான டி.ராஜேந்தர், மாயவரத்தில் இருந்து நேராக சென்னை கோடம்பாக்கத்திற்குள் நுழைந்து ஜெயித்தவர். எவரிடமும் உதவி இயக்குநராக இருந்ததில்லை. எவரிடமும் முறையே சங்கீதம் பயிலவில்லை. ஆசையும் விருப்பமும் முழுமையான ஈடுபாடும் கடுமையான உழைப்பும் இவரை, ‘சினிமா கோதா’வுக்குள் தடக்கென்று புகுத்தியது. ‘இரயில் பயணங்களில்’ படத்தில் தன் திறமையை வேரெனப் படரவிட்டார். அப்போதே . ‘யாரோ டி.ராஜேந்தராம். கலக்குறார்யா’ என்று எல்லோரும் சொல்லிவந்த நிலையில், ‘வசந்த அழைப்புகள்’ படத்தில் இயக்கியதுடன் நடிக்கவும் செய்திருந்தார். ‘அடி நீலச்சேலை பறக்கலையே...’ மாதிரி பாடல்களையெல்லாம் போட்டு, நம்மை அந்தப் பாடல்களின் கூடவே உறவாடவைத்திருப்பார்.

வரிசையாகப் படங்கள் பண்ணிக்கொண்டிருந்த டி.ராஜேந்தர், ‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்த உஷாவைக் காதலித்து திருமணமும் செய்துகொண்டார். அதன் பின்னர் ‘ஒருதலை ராகம்’ அளவுக்கு இணையான துள்ளத்துடிக்கிற காதல் கதையை உருவாக்கி, ‘உயிருள்ளவரை உஷா’ கொடுத்தார். பாடல்களும் படமும் ரொம்பவே பேசப்பட்டன. அன்றைக்கு இதில் அறிமுகப்படுத்திய கங்காவும் நளினியும் இன்று வரை தொலைக்காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘செயின் ஜெயபால்’ என்ற இவரின் கேரக்டரும் வசனங்களும் பேசப்பட்டன. ‘வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி’ என்று இவர் வசனம் பேசி சண்டைபோட்டதை வெகுவாகவே ரசித்தார்கள். ‘உயிருள்ளவரை உஷா’. புயல் கிளப்பியது படம். ’உறவைக் காத்த கிளி’யில் இரட்டை வேடங்களில் அசத்தினார். முன்னதாக, ‘தங்கைக்கோர் கீதம்’ படத்தில் நாகேஷ் மகன் ஆனந்த்பாபுவை அறிமுகப்படுத்தினார். தங்கைப் பாசத்தை கையிலெடுத்துக் கொண்டு, அந்த உறவில் நம்மை கண்ணீர் விடவைத்தார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிடித்த படங்களைக் கொடுக்கும் இயக்குநர் என்று பேரெடுத்து வெற்றிக் கொடிநாட்டியவர்களில் ராஜேந்தரும் ஒருவர்!

முக்கியமாக, டி.ராஜேந்தரின் இசை எல்லோரையும் ஈர்த்தது. பாடல்களும் வரிகளும் முணுமுணுக்க வைத்தன. அவரின் கதையும் சொல்லும் விதமும் பிடித்துப்போயிற்று. வசனங்களுக்காகவே ஒரே காட்சியில் நான்கைந்து இடங்களில் கரவொலி எழுப்பினார்கள் ரசிகர்கள். ‘தங்கைக்கோர் கீதம்’, ‘உறவைக் காத்த கிளி’, ‘மைதிலி என்னைக் காதலி’ என்று தொடர்ந்து ஹிட்டுகளாகக் ‘என் தங்கை கல்யாணி’யும் அப்படித்தான். ‘தங்கைக்கோர் கீதம்’ போலவேதான்! ‘டி.ராஜேந்தர் படத்தோட எழுத்து ஒன்பது இருக்கும். கூட்டிப்பாருங்க’ என்று இதுவே பேசுபொருளானது. தாடியை பிளஸ்ஸாக்கிக் கொண்டார். அதுவே அவரின் அடையாளமானது.

தான் இந்தக் கட்சிதான் என்று சொல்லிவிட்டால், மொத்த ரசிகர்களும் வரமாட்டார்கள். எம்ஜிஆர், சிவாஜி, பாக்யராஜ் என பலரும் அதில் விதிவிலக்கானவர்கள். அவர்களில் டி.ராஜேந்தரும் இடம்பிடித்தார். ரிலீஸ் நாளில், கட்சிக்கொடிகள் தியேட்டர் வாசலில் வண்ணம் காட்டும். உள்ளே எல்லா கட்சி ரசிகர்களும் வியந்து மலைத்து நெகிழ்ந்து ரசித்து விசிலடித்தார்கள். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்று இருந்த காலகட்டத்தில், ‘கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம்’ என்று டைட்டிலில் இன்னும் இன்னும் சேர்த்துக் கொண்டு ஜொலித்து ஜெயித்துக் காட்டினார். பணிகள் பெரிது என்றபோதும் டி.ராஜேந்தர் எனும் பெயரை ‘டி.ஆர்’ என்று சுருக்கிச் சொல்லிக் கொண்டாடியது தமிழ் சினிமா. நடிகை பானுமதியம்மாவுக்குப் பின்னர், ‘அஷ்டாவதானி’ எனும் பட்டத்துக்கு உரியவரானார் டி.ஆர்.

செட் ப்ராப்பர்ட்டி என்று சினிமாவில் உண்டு. ஆர்ட் டைரக்‌ஷன் எனும் வேலை சினிமாவில் முக்கியம். கதாநாயகன் வீடு, நாயகி வீடு, வில்லனின் பங்களா, துணை கேரக்டர் தொழில் செய்யும் இடம் என்றால் அந்த இடத்தில் என்னென்ன தேவையோ அதையெல்லாம் வைப்பதுதான் செட் ப்ராப்பர்ட்டி. இவரின் படங்களில், இவரின் வசனங்களுக்குத் தக்கபடிதான் செட் பொருட்கள் வைக்கப்படும். ‘காதலிக்கும்போது அன்பான முகம் தெரிஞ்சிச்சு. கல்யாணத்துக்குப் பின்னாலதான் அவனோட இன்னொரு முகமே தெரியவந்துச்சு’ என்று சொல்லி, கேரக்டர் சாந்தமான பொம்மையைத் திருப்பும். பொம்மையின் பின்னால் கோரமான முகம் இருக்கும். முள்ளில் சிக்கிக்கொண்ட பறவையின் இறகு, சோகமாய் வானத்தில் பறக்கும் தனிப்பறவை, இதய வடிவத்தில் டெலிபோன் என்று காட்சிகளில் கவிதையாக்கிவிடுவார் ராஜேந்தர்.

நடிப்பவர்களைப் பார்ப்பதா, கேமரா நகருவதைப் பார்ப்பதா, வசனங்களைக் கவனிப்பதா, பின்னணியில் உள்ள பொருட்களைப் பார்ப்பதா என்று எதைப் பார்ப்பது என்றே தெரியாமல் தவிக்கும் ரசிகன், ஒவ்வொன்றுக்காகவும் நான்கைந்து முறை படம் பார்க்க வந்ததுதான் டி.ராஜேந்தரின் அசைக்க முடியாத வெற்றி.

நாலு நிமிஷப் பாட்டை நான்கைந்து நாள் எடுப்பார்கள். அதற்கு முன்னதாக, அந்தப் பாடலுக்காக டி.ராஜேந்தர் செட் போட்டிருப்பார். அந்த செட் போடுவதற்கே, பதினைந்து நாட்களாகியிருக்கும். பாட்டு செட்டோ, வில்லன் பங்களா செட்டோ... மிரட்டியெடுத்துவிடுவார்.

இசையும் அப்படித்தான். தமிழ் சினிமாவில் அதிக அளவில் டிரம்ஸ் பயன்படுத்திய இசையமைப்பாளர் ராஜேந்தராகத்தான் இருப்பார். சரிதா, ராதாரவி, ஸ்ரீவித்யா, பிரமிளா, ஒய்.விஜயா, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்சபுளி செல்வராஜ் போன்ற கலைஞர்களுக்கு அழுத்தமான கேரக்டர்கள் கொடுத்து அசத்திவிடுவார்.

அமலா என்றொரு அற்புத நடிகையை நமக்கு அறிமுகப்படுத்தினார். மும்தாஜை அறிமுகப்படுத்தினார். ரேணுகாவை அறிமுகப்படுத்தினார். ஜீவிதாவை அறிமுகப்படுத்தினார். தன் மகனான சிம்பு எனும் அற்புத நடிகரை, சிறுவயதில் இருந்தே நடிக்கவைத்தார். ‘டி.ராஜேந்தர் படமா?’ என்று பூஜை போட்ட முதல்நாளிலேயே மொத்த ஏரியாவும் விற்றுவிடும். ‘டி.ராஜேந்தர் படமா? முதல்நாளே பாக்கணும்’ என்று தியேட்டருக்கு வந்தவர்களும் அதிகம். வசூல் சாதனைகளும் ஏராளம்.

பந்துலு, ஸ்ரீதர், கே.பாலசந்தர், பி.மாதவன், ஏ.சி.திருலோகசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ் முதலானோர் போல, சொந்தப் படங்களை தயாரித்து இயக்கினார். டி.ராஜேந்தரின் இசையை ரசித்தார்கள். பாடல் வரிகளை ரசித்தார்கள். வசனத்தை ரசித்தார்கள். காட்சிகளை ரசித்தார்கள். பிழிந்தெடுக்கும் சோகத்தை ரசித்தார்கள். நாயகியை ரசித்தார்கள். நாயகனை ரசித்தார்கள். வில்லனை, வில்லியை ரசித்தார்கள். வில்லக்கூட்டத்தின் ’அல்லக்கை’ கேரக்டரைக் கூட ரசித்தார்கள். மொத்தத்தில், டி.ராஜேந்தர் படங்களைக் கொண்டாடினார்கள்.

டி.ராஜேந்தர் படத்தின் பாடல்கள் கொண்ட ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் செய்ததெல்லாம் ரிக்கார்டு சாதனை! படத்தில் ஒன்பது, பத்துப் பாடல்கள் வைப்பார். அனைத்துப் பாடல்களையும் ஹிட்டாக்கிவிடுவார். எல்லாப் பாடல்களும் ரசிகர்களுக்கு மனப்பாடமே ஆகிவிடும். நாம் ஜாலியாக இருக்கும்போது, ‘வசந்தம் பாடி வர வைகை ஓடிவர’ என்று பாடுவோம். ‘சோகமாக இருக்கும்போது ‘தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார்’ என்போம். ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’ காதல் தோல்விக்காரர்களுக்கு இன்னமும் தேசியகீதம். ‘வாசமில்லா மலரிது’ பாடலைப் பாடி காதலில் ஜெயித்த இளைஞர்கள் பலர் உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக, சினிமா துறையில் ஒழுக்கம், பண்பு, அடக்கம், அன்பு, தயாள குணம் என்று நல்லபேர் எடுப்பதுதான் ஆகப்பெரும் சாதனை. அப்படியான அற்புத மனிதர் டி.ராஜேந்தர். ஒழுக்கம் தவறாதவர். பண்புடனும் அன்புடனும் பழகுபவர். எண்பதுகளில்... திரைத்துறையில் தன் ஆளுமையால், வசூல் மழை பொழியச் செய்தவர். ‘கிளிஞ்சல்கள்’, ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ முதலான இவரின் பாட்டுக்கும் இசைக்குமாகவே தனி முத்திரையுடன் திகழ்ந்ததும் வெற்றிப் படங்களாக அமைந்ததும் தனிக்கதை. நடுவே, ‘உஷா’ எனும் வாரப் பத்திரிகையும் நடத்தி, அதற்கு ஆசிரியராகவும் இருந்தார். டி.ராஜேந்தரின் திறமையும் சாதனையும் முழுமையாகச் சொல்ல வேண்டுமென்றால், அது... மாயவரத்தில் இருந்து சென்னை தூரமிருக்கிற மிகப்பெரிய பட்டியல்.

1955 அக்டோபர் 3-ம் தேதி பிறந்த டி.ராஜேந்தருக்கு இன்று பிறந்தநாள். 67-வது பிறந்தநாள் கொண்டாடும் அஷ்டாவதானி டி.ராஜேந்தரை வாழ்த்துவோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in