‘பெரும் மாரடைப்பிலிருந்து உயிர் தப்பினேன்’ -சுஷ்மிதா சென் சொல்லும் பாடம்

சுஷ்மிதா சென்
சுஷ்மிதா சென்

இந்திய மற்றும் உலக அழகிப் போட்டிகளில் வாகை சூடியவரும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென், தான் எதிர்கொண்டு மீண்ட மாரடைப்பு அனுபவம் குறித்து பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார்.

18 வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் வென்றவர் சுஷ்மிதா சென். தொடர்ந்து பிரபஞ்ச அழகிப் போட்டியிலும் பங்கேற்று வென்றார். பிரபஞ்ச அழகிப் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பும் அவருக்கு சேர்ந்தது. அழகி அங்கீகாரம் அவரை சினிமாவில் சேர்த்தது.

அவர் நடித்த முதல் இந்தி திரைப்படமான ’தஸ்தக்’ பெரிதாக போகவில்லை. ஆனால் தமிழில் நடித்த ’ரட்சகன்’ அவருக்கு பெயர் வாங்கித்தந்தது. இந்த வகையில் அவர் தமிழ் சினிமாவோடும், ரசிகர்களோடும் நெருங்கிய பந்தம் கொண்டிருந்தார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சுஷ்மிதா சென், அண்மையில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியுடன் சேர்ந்து செய்தியில் அடிபட்டார்.

தற்போது மீண்டும் தனது மாரடைப்பு அனுபவங்களின் வாயிலாக, ரசிகர்களை பதைபதைக்க வைத்திருக்கிறார். இது தொடர்பாக சுஷ்மிதா வெளியிட்ட பதிவில், “எனக்கு பெரிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டது. இதயத்துக்கான பிரதான ரத்தக்குழாயில் 95% அடைப்பு கண்டறியப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சையில் இதய அடைப்பு நீக்கப்பட்டு எனக்கு ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இன்னும் சிலகாலம் வாழ்வதற்காக திரும்ப வந்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். மார்ச் 4 அன்று இன்ஸ்டாகிராம் வாயிலாக நேரலையில் தோன்றிய சுஷ்மிதா சென் இது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ரசிகர்களுடன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.

47 வயதாகும் சுஷ்மிதா சென், காதல் முறிவு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்து வருகிறார். தனது வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார். இந்த சூழலில் சுஷ்மிதா சென்னுக்கு ஏற்பட்ட மாரடைப்பும், அதிலிருந்து அவர் மீண்ட அனுபவமும் மாரடைப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை பொதுவெளியில் அதிகரித்துள்ளன.

பிரபலங்கள் பலரும் மாரடைப்பு கண்டு அகால முடிவுக்கு ஆளாவதன் மத்தியில், சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடினால் 95% அளவுக்கு முற்றிய அடைப்பிலிருந்தும் சிகிச்சை மூலம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்பதை சுஷ்மிதா சென்னின் அனுபவம் மற்றவர்களுக்கு பாடமாக உணர்த்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in