திலீப் வழக்கு: பாதிக்கப்பட்ட நடிகை திடீர் மனு

திலீப் வழக்கு: பாதிக்கப்பட்ட நடிகை திடீர் மனு
நடிகர் திலீப்

போலீஸாரை கொல்ல சதி செய்ததாகத் தொடரப்பட்ட, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு, காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி நடிகர் திலீப், அவர் தம்பி அனூப், திலீப்பின் மைத்துடன் சுராஜ் உட்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் திலீப் உட்பட 6 பேருக்கும் கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில், தன்மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘போலீஸுக்கு என் மீதுள்ள முன்விரோதம் காரணமாக, என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், சதித்திட்டத்தை நிரூபிக்க, போதுமான ஆதாரங்கள் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால், என்மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீகுமார், இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். இந்த வழக்கில், நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் முன் தனது தரப்பையும் கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து வழக்கை வரும் 21-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Related Stories

No stories found.